பேரினவாத ஒடுக்குமுறையின் இன்னுமொரு வடிவமே வடக்கு பிரதம செயலராக சிங்களவர் – ஐங்கரநேசன் கடும் கண்டனம்.

“வடக்கு மாகாணத்தின் பிரதம செயலாளராக ஜனாதிபதியால் வவுனியா மாவட்ட செயலாளராகப் பதவி வகித்த எஸ்.எம். சமன் பந்துலசேன நியமனம் செய்யப்பட்டுள்ளார். வடக்கின் பிரதம செயலாளராகப் பணியாற்றுவதற்கு இலங்கை நிர்வாக சேவையில் உயர்தகைமை பெற்ற தமிழ் அதிகாரிகள் பலருள்ள நிலையில் அவர்களைப் புறமொதுக்கி இந்நியமனம் இடம்பெற்றுள்ளது. தமிழ் மாகாணமான வடக்கில் பிரதம செயலாளராகச் சிங்களவர் ஒருவரை நியமித்துள்ளமை இலங்கை அரசின் பேரினவாத ஒடுக்குமுறையின் இன்னுமொரு வடிவமாகும்.”

– இவ்வாறு தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் தனது கடுமையான கண்டனத்தை வெளியிட்டுள்ளார்.

வடக்கின் பிரதம செயலாளராக வவுனியா மாவட்ட செயலர் எஸ்.எம். சமன் பந்துலசேனவுக்கு ஜனாதிபதியால் நியமனக் கடிதம் வழங்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பொ.ஐங்கரநேசன் வெளியிட்டிருக்கும் ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தனது கண்டனத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

அந்த அறிக்கையில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,

“இலங்கை ஆங்கிலேயர்களிடமிருந்து சுதந்திரம் பெற்ற காலம் தொடக்கம் சிங்களப் பேரினவாதத்தால் தமிழ் மக்கள் இன ரீதியாகவும் மொழி ரீதியாகவும் தொடர் ஒடுக்குமுறைகளுக்கு ஆளாக்கப்பட்டதன் காரணமாகவே தமிழ் மக்கள் அரசுக்கு எதிராக ஆயுதம் ஏந்தத் தலைப்பட்டனர். தமிழ் மக்களின் ஆயுதப் போராட்டம் வலுப்பெற்றதன் விளைவாகவே இந்திய – இலங்கை ஒப்பந்தத்தின் அடிப்படையில் மாகாண சபை முறைமை தோற்றம் பெற்றது. தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வாக முன்வைக்கப்பட்ட மாகாணசபைக்குப் பிரதம செயலாளராக சிங்கள இனத்தவர் ஒருவரை நியமித்திருப்பது மாகாண சபை முறைமை உருவாக்கப்பட்டதற்கான அடிப்படைக் காரணங்களையே நிராகரிக்கும் ஓர் இனவாதச் செயற்பாடாகும்.

மாகாண சபைகளுக்கான 13ஆவது திருத்தச்சட்டத்தின் பிரகாரம் பிரதம செயலாளரை நியமிப்பது ஜனாதிபதிதான் எனினும் அந்நியமனம் மாகாண முதல்வரின் உடன்பாட்டுடனேயே செய்யப்படல் வேண்டும். வடக்கு மாகாண சபையின் ஆயுட்காலம் 2018ஆம் ஆண்டு முடிவடைந்த உடனேயே மாகாண சபைத் தேர்தலை நடத்தியிருக்கவேண்டிய அரசு பல்வேறு காரணங்களைக் காட்டிக் கபடநோக்கங்களுடன் தேர்தலைப் பிற்போட்டு வருகின்றது.

தேர்தலுக்கு முன்பாக மாகாண சபை கூடாக தமிழ் மக்களுக்குக் கிடைத்திருக்கக்கூடிய மிகக் குறைந்தபட்ச அதிகாரங்களையும் பிடுங்கிவிட வேண்டும் என்பதில் குறியாகச் செயற்பட்டு வருகின்றது.

இலங்கைத் தீவில் தனித்துவமான மொழி, பண்பாடு, பாரம்பரிய வாழிடம், ஆள்புலம் என்பனவற்றைக் கொண்டதன் அடிப்படையில் தமிழ் மக்கள் தனியானதொரு தேசம் ஆகும். ஆனால், இதனை நிராகரித்து ‘ஒரே நாடு ஒரே தேசம்’ என்று முழக்கமிட்டு வரும் பேரினவாதம் தற்போது ‘ஒரே நாடு ஒரே நிர்வாகம்’ என்று ஒடுக்குமுறையின் அடுத்த கட்டத்துக்குள் பிரவேசித்திருக்கின்றது.

இலங்கை அரசின் சூழ்ச்சிகரமான இத்தகைய திட்டங்களைப் புரிந்துகொண்டு அதற்கான சரியான எதிர்வினைகளை ஆற்றுவதற்குக் கட்சி அரசியலுக்கு அப்பால் தமிழ்த் தேசியத்தின் மீது பற்றுறுதி கொண்ட அனைவரும் ஓரணியில் திரளவேண்டும்” – என்றுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.