குருநகர் பிரதேசத்தில் சட்டவிரோத கடலட்டைத் தொழிலைக் கட்டுப்படுத்துக! – டக்ளஸ் பணிப்புரை.

யாழ்., குருநகர் பிரதேசத்தில் மேற்கொள்ளப்படுகின்ற சட்டவிரோதக் கடலட்டை செயற்பாடுகளை உடனடியாகக் கட்டுப்படுத்துமாறு கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நாரா எனப்படும் தேசிய நீரியல்வள ஆராய்ச்சி நிறுவனத்தால் அடையாளப்படுத்தபட்ட பகுதிகளைத் தவிர்ந்த ஏனைய பிரதேசங்களில் இழுவை வலைப் படகுகளைப் பயன்படுத்துவதற்குத் தடைவிதிக்கப்படடுள்ளது.

இந்நிலையில், அதனை மீறுகின்ற வகையிலும் கடற்றொழில் சங்க ஒழுங்கு விதிகளை மீறும் வகையில் சுமார் 39 இழுவை வலைப் படகுகள் கடலட்டை தொழிலில் ஈடுபட்டு வருகின்றன என்று குருநகர் கடற்றொழிலாளர் சங்கத்தின் பிரதிநிதிகளால் கடற்றொழில் அமைச்சரின் கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டிருந்தது.

இதையடுத்து, தடைசெய்யப்பட்ட தொழில் முறைகள் அனைத்தும் கட்டுப்படுத்த வேண்டும் எனத் தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இழுவை வலைப் படகுகளைப் பயன்படுத்தி கடலட்டை தொழில் ஈடுபடுகின்றவர்களைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு, கடற்றொழில் திணைக்களத்தின் யாழ். மாவட்ட பிரதானி ஜெ. சுதாகரனுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.