மாற்றம் வேண்டி நிற்கும் மலையகத்தின் கதை இஷாலினி! – பஞ்சாலி (சிங்களத்திலிருந்து …..)

கறுப்பு ஜூலை கலவரத்தில் பாதிக்கப்பட்ட அருட்தந்தை மாரிமுத்து சக்திவேல், ஒருமுறை பேசும்போது, மலையக தமிழ் சிறுமிகளை அடிமைத்தனத்திற்கு தள்ளுவது இலங்கையில் பிரபலமற்ற இனவெறியின் மற்றொரு அம்சமாகும் என்று வருத்தத்தோடு  தெரிவித்திருந்தார். மலையகத்தின் தோட்ட கிராமங்கள் என்பன ஒடுக்கப்பட்ட வர்க்கத்தின் பிரதிபலிப்பு என்பது இரகசியமான ஒன்றல்ல.

உரிமைகள், பொறுப்புக்கூறல் மற்றும் சமூக நீதி பற்றிய அனைவருக்கும் ஒரே ஒரு சட்டத்தைப் பற்றி கடந்த காலத்திலும் சமூகத்திலும் நிறைய பேச்சுக்கள் இருந்தபோதிலும், அது மலையக கிராமங்களில் வாழும் அப்பாவி தமிழ் கிராமவாசிகளுக்கு சாத்தியமற்றது.

தோட்டப் பகுதிகளில் உள்ள மக்கள் பெரும்பாலும் ஏழ்மையானவர்கள், அதிகம் படிக்காதவர்கள் மற்றும்   சிறு வயதிலேயே தங்கள் வாழ்க்கையை பொருளாதாரப் போராட்டத்துடன் போராடிக் கொண்டே வாழ்கின்றனர். இதன் விளைவாக, மலையக கிராமங்களில் வசிக்கும் சிறுபான்மையினரில் பெரும்பாலோர் அடிமை உழைப்புக்காக தரகர்களால் கான்கிரீட் காட்டில் (நகரங்களுக்கு) விற்கப்படுகிறார்கள் என்பது தொடர் கதையாகும்.

டயகம இஷாலினியின் சோகத்துடன் இந்த தலைப்பைப் பற்றி நாம் மீண்டும் மீண்டும் பேச வேண்டும். இஷாலினி குறித்து பேசப்படுவது தொடக்கக் கதை அல்ல, அது இறுதிக் கதையாக இருக்கும் என்று நம்புகிறோம். மக்களின் வாக்குகளால் பாராளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முன்னாள் ஊறுப்பினர் ரிஷாத் பதியுதீனின் வீட்டில் இஷாலினிக்கு ஏற்பட்ட துன்பகரமான சம்பவம் , மற்ற குழந்தைகளுக்கு ஏற்பட்ட சம்பவங்களை விட வித்தியாசமானது.

இஷாலினி தனது உடலுக்கு தீ வைத்துக் கொண்டாரா? அல்லது அவரை தீயிட்டு கொழுத்தினார்களா என்பது இன்னும் தீர்க்கப்படாத பிரச்சினை. எப்படியாவது அவள் தீ தானாகவே தீ வைத்துக் கொண்டதென  உறுதி செய்யப்பட்டால் ,  அதை அங்கேயே முடிவாகக் கொள்ள முடியாது. காரணம், ஒரு நபர் தற்கொலைக்கு பல்வேறு முறைகளை பயன்படுத்தினாலும், அவன் அல்லது அவள்  தீக்குளித்து இறக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்க வேண்டுமென்றால் அவன் அல்லது அவள் தீவிர உடல் மற்றும் மன உளைச்சலில் இருந்திருக்க வேண்டும். மறுபுறம், இஷாலினி போன்ற ஒரு சிறிய வயதானவர் இதுபோன்ற மிகக் கடுமையான ஒரு முடிவை எடுப்பது கடினமானது.

ஒரு முறை இஷாலினி , பதூர்தீன் வீட்டில் தாக்குதலுக்கு உள்ளானதாக இஷாலினியே கூறியதாக இஷலானியின் தாய் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார். வேறு சிறார்களும் வீட்டு வேலைகளில் உள்ளனர் என்றும், இறந்த இஷாலினி உட்பட சில குழந்தைகள் ஏற்கனவே துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளனர் என்றும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.  குழந்தைகளின் அடிப்படை உரிமைகளை பதூர்தீனின் வீட்டவர்கள் மீறியுள்ளதாகவும், பெற்றோருடன் தொலைபேசியில் தொடர்பு கொள்வதை தடுப்பதாகவும் மட்டுமல்ல, பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளைச் சந்திப்பதை தடுத்ததாகவும் தெரிகிறது.

மிகவும் சந்தேகத்திற்கிடமான தகவல் என்னவென்றால், இஷாலினியை தொடர்ந்து அங்கு வீட்டில் வேலை செய்ய விட்டு வைக்க முடியாது என்று பெற்றோர் தெரிவித்த பின்னர், திட்டமிடப்பட்ட தேதிக்கு மூன்று நாட்களுக்கு முன்னர் அவர் வீட்டில் வைத்து  தீ வைத்துக் கொண்டதாக குடியிருப்பாளர்கள் கூறியுள்ளனர். பதியுதீனின் வீட்டில் நடந்த அனைத்து ரகசியங்களும் கசிந்து விடாமல் இருக்க முன்னாள் அமைச்சர் இஷானியை மௌனமாக்கியதால் அது நடந்ததா என்பது எங்களுக்குத் தெரியாது.

ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் முதல் தேதி ஒவ்வொரு நாட்டிலும் உலக குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது. அன்றைய தினத்துடன் இணைந்து இலங்கையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இருப்பினும், இலங்கையில் தினமும் குறைந்தது இரண்டு சிறுவர் துஷ்பிரயோக புகார்கள் வருவதாக குழந்தைகள் பாதுகாப்புத் துறை மதிப்பிடுகிறது. எனவே ஒரு நாடாக நாம் கொண்டாடுவது எந்த குழந்தைகள் தினத்தை என நாமே நம்மை கேட்டுக்கொள்ள வேண்டும்.

சிறுவர் அடிமைத்தனம் தண்டனைக்குரிய குற்றமாகும் என்ற போதிலும், சோகமாக துஷ்பிரயோகம் செய்யப்பட்ட, சுரண்டப்பட்ட மற்றும் உடல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்யப்பட்ட குழந்தைகளை இஷாலினிக்களை  இனி காணமுடியாது என நாம் உறுதிபட சொல்ல முடியாது. ஆனால், இஷாலினிக்கு ஏற்பட்ட துன்பகரமான தலைவிதிக்கும், அந்தத் தாயின் கண்ணீரிலிருந்து எழுந்திருக்கும் மலையகப் பகுதிகளின் ஒடுக்கப்பட்ட மக்கள் எதிர்கொள்ளும் அடக்குமுறை மற்றும் அநீதிக்கும் நம்மிடம் பதில் இருக்க வேண்டும். அது நாளை அல்ல இப்போதே நிறைவேற்றப்பட வேண்டும். மலையக சமூகத்தின் துயர விதியை மாற்ற வேண்டும் என்பது இஷாலினியின் மரணம் இன்று ஒட்டுமொத்த மக்களை நோக்கி விரல் காட்டி நிற்கும் கோரிக்கையாகும். அதை தற்போதைய அரசாங்கத்திடமிருந்து எதிர்பார்க்கிறோம். ஏனென்றால், சரியான நேரத்தில் சரியான முடிவுகளை எடுக்கும் ஜனாதிபதி உட்பட தற்போதைய நிர்வாகத்தால் அதைச் செய்ய முடியும் என்று நாங்கள் நம்புகிறோம்.

– பஞ்சாலி

Leave A Reply

Your email address will not be published.