அம்பாந்தோட்டை வைத்தியசாலையில் நிரம்பி வழிகின்றனர் தொற்றாளர்கள்!

அம்பாந்தோட்டை பொது வைத்தியசாலையின் கொரோனா சிகிச்சை விடுதிப் பிரிவில் தொற்றாளர்கள் நிரம்பி வழிகின்றனர் என்று வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் சுரங்க உபசேகர தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“கொரோனா வைரஸ் தொற்றாளர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக வைத்தியசாலையில் 280 கட்டில்கள் காணப்பட்டாலும்கூட ஊழியர்களுக்கான பற்றாக்குறை காரணமாக 150 பேர் மட்டுமே அனுமதிக்கக்கூடியதாக உள்ளது.

இந்நிலையில், சாதாரண நிலையில் சிகிச்சை பெற்றுவரும் நோயாளர்களுக்கு கட்டில் வசதிகளைப் பெற்றுக்கொடுக்கும் நோக்கில் சில நோயாளர்கள் அங்குனகொலபெலஸ்ஸ தனிமைப்படுத்தல் சிகிச்சை நிலையத்துக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

தற்போது 150 தொற்றாளர்கள் அம்பாந்தோட்டை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நாளாந்தம் சிகிச்சைக்காக வருபவர்களில் தொற்றாளர்கள் இனங்காணப்படும்போது அவர்களை வைத்தியசாலையில் அனுமதிப்பதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த வைத்தியசாலையில் தினமும் ஒன்று அல்லது இரண்டு கொரோனா மரணங்கள் பதிவாகின்றன.

மேல் மாகாணத்தில் தற்போது பரவி வரும் தொற்று அம்பாந்தோட்டை மாவட்டத்துக்கும் பரவும் அபாய நிலை காணப்படுகின்றது.

எனவே, பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்க வேண்டும் என்பதுடன் சுகாதார அமைச்சின் பொதுச் சுகாதார விதிமுறைகளை முறையாகப் பின்பற்றி நடக்குமாறும் கேட்டுக்கொள்கின்றோம்” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.