குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் 5 நாள் பயணமாக இன்று தமிழகம் வருகை

5 நாள் பயணமாக குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று தமிழகம் வருகிறார். இதனால் 7 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

தமிழக சட்டசபையின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சட்டசபை அரங்கில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி உருவப்பட திறப்புவிழா இன்று மாலை 5 மணியளவில் நடைபெறுகிறது. தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தலைமையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் நடைபெறும் இவ்விழாவில், குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமை விருந்தினராக கலந்து கொண்டு கருணாநிதியின் உருவப்படத்தை திறந்து வைக்கிறார்.

இதற்காக குடியரசுத்தலைவர், டெல்லியில் இருந்து விமானம் மூலம் இன்று காலை 10 மணிக்கு புறப்பட்டு மதியம் 12.45 மணியளவில் சென்னை வருகிறார். பின்னர் கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஓய்வு எடுக்கிறார். அதைத் தொடர்ந்து அங்கிருந்து மாலை 4.35 மணியளவில் புறப்பட்டு சாலை மார்க்கமாக சட்டசபை விழா அரங்கிற்கு மாலை 5 மணிக்கு வருகை தர இருக்கிறார்.

குடியரசுத்தலைவர் வருகையையொட்டி சென்னையில் காவல்துறை உயர் அதிகாரிகளின் நேரடி கண்காணிப்பில் 7 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். குடியரசுத்தலைவர் செல்லும் வழி நெடுகிலும் போலீசார் சீரான இடைவெளியில் நின்று பாதுகாப்பு பணியை மேற்கொள்ள உள்ளனர்.

விமானநிலையம், ஆளுநர் மாளிகை, தலைமைச் செயலகம் ஆகிய இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட இருக்கிறது. குடியரசுத்தலைவர் வருகையை ஒட்டி செய்யப்படும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மத்திய அரசின் பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு அதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளனர்.

முன்னதாக, சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால், காவல்துறை உயர் அதிகாரிகளுடன் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டார். விமானநிலையத்தில் இருந்து ஆளுநர் மாளிகை வரையிலும், பின்னர் அங்கிருந்து விழா நடைபெறும் தலைமைச்செயலகம் வரையிலும் பாதுகாப்பு ஒத்திகையை காவல்துறையினர் மேற்கொள்கின்றனர். குடியரசுத்தலைவர் வருகையின்போது போக்குவரத்து மாற்றம் செய்யப்படும் என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் சட்டசபையில் கருணாநிதி உருவப்படம் திறப்பு நிகழ்ச்சி முடிந்தவுடன் இரவு கிண்டி ஆளுநர் மாளிகையில் தங்குகிறார். பின்னர் நாளை காலை விமானம் மூலம் கோவை புறப்பட்டு அங்கிருந்து ஊட்டி செல்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.