ஜூலை மாதத்துக்கான ஐ.சி.சி.யின் சிறந்த வீரராக ஷகிப் அல்-ஹசன் தேர்வு.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) சார்பில் மாதந்தோறும் சிறந்த வீரர், வீராங்கனைகள் தேர்வு செய்யப்பட்டு விருது வழங்கப்பட்டு வருகிறது. பரிந்துரை செய்யப்படும் பட்டியலில் இருந்து முன்னாள் வீரர்கள், ஒளிபரப்பு நிறுவனத்தினர் உள்ளிட்ட ஐ.சி.சி. வாக்கு அகாடமியினர் மற்றும் ரசிகர்கள் வாக்களித்து விருதுக்குரிய நபரை தேர்வு செய்வார்கள். கடந்த மாதத்துக்கான (ஜூலை) சிறந்த வீரராக வங்காளதேச அணியின் ஆல்-ரவுண்டர் ஷகிப் அல்-ஹசன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

அவர் மிட்செல் மார்ஷ் (ஆஸ்திரேலியா), ஹைடன் வால்ஷ் (வெஸ்ட்இண்டீஸ்) ஆகியோரை பின்னுக்கு தள்ளி இந்த விருதை தனதாக்கி இருக்கிறார். கடந்த மாதம் நடந்த ஜிம்பாப்வேக்கு எதிரான ஒரு நாள் மற்றும் 20 ஓவர் போட்டியில் பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் ஷகிப் அல்-ஹசன் சிறப்பாக செயல்பட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சிறந்த வீராங்கனை விருதுக்கு வெஸ்ட்இண்டீஸ் பெண்கள் அணியின் கேப்டனும், ஆல்-ரவுண்டருமான ஸ்டெபானி டெய்லர் தேர்வாகி இருக்கிறார். பாகிஸ்தானுக்கு எதிரான ஒரு நாள் தொடரில் 175 ரன்கள் மற்றும் 3 விக்கெட்டுகள் வீழ்த்திய அவர் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து இந்த விருதை கைப்பற்றி இருக்கிறார்.

Leave A Reply

Your email address will not be published.