அமெரிக்காவின் பல மாகாணங்களை புரட்டிப் போடும் ஐடா சூறாவளி. 42 பேர் பலி.

தற்போது நியூயார்க் நகரில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. வட கிழக்கு அமெரிக்காவில் கன மழைக்கு 2 வயது சிறுவன் உட்பட 42 பேர் இதுவரை பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு தெற்கு மாகாணமான லூயிசியானாவில் ஐடா சூறாவளி காரணமாக பெய்த கன மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் பல நகரங்களின் வீதிகளில் வெள்ளம் ஓடுகிறது. லூயிசியானா, மிஸ்ஸிசிப்பியில் சூறாவளி ஐடா ஏற்படுத்திய தாக்கத்தின் தீவிரத்தை செயற்கைக்கோள் படங்கள் தெளிவாக உணர்த்துகின்றன. அமெரிக்காவின் பிரதான நிலப்பகுதியில் கடும் பாதிப்பை ஏற்படுத்திய ஐந்தாவது சக்தி வாய்ந்த சூறாவளியாக ஐடா கருதப்படுகிறது.

இந்நிலையில், நியூயார்க் நகரின் ப்ரூள்ளின் மற்றும் குயின்ஸ் பகுதியிலும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. பல இடங்களில் சுரங்கப் பகுதிகளிலும் வெளியிடங்களிலும் மக்கள் சிக்கியிருக்கிறார்கள். அவர்களை மீட்கும் பணிகளை உள்ளூர் நிர்வாகங்கள் தீவிர கவனம் செலுத்தி வருகின்றன.

தற்போது நியூயார்க் நகரில் அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த நகர மேயர் பில் டி பிளாசியோ, வரலாறு காணாத வானிலையை நியூயார்க் அனுபவித்து வருகிறது. கொடூரமான வகையில் ஓடும் வெள்ளத்தால் நகர சாலைகள் படுபயங்கர நிலையில் உள்ளன என்று தெரிவித்துள்ளார்.

நியூ ஜெர்சியிலும் அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது. கன மழை, வெள்ளம் காரணமாக நியூயார்க் நகர சுரங்க ரயில் சேவைகள் அனைத்தும் காலவரையின்றி நிறுத்தப்பட்டுள்ளன. நியூயார்க் நகரில் விமான சேவை முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது. மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.