மது அருந்த மாட்டோம் என பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தால் ஜாமீன் வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படும் – குடிமகன்களுக்கு நீதிமன்றம் உத்தரவு

மது அருந்தியதால் தான் நண்பர்களிடையே தகராறு ஏற்பட்டு சிறையில் உள்ளர். எனவே இனிமேல் மது அருந்த மாட்டோம் என பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தால், ஜாமீன் வழங்கப்படும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தெரிவித்துள்ளது,

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ் ( வயது 24). லாரி ஓட்டுநராக உள்ள சுரேஷ் கடந்த ஜூலை மாதம் 25-ம் தேதி தன்னுடைய சகோதரன் பாண்டியன், உறவினர்கள் சிவா, கார்த்திக் ஆகியோருடன் சேர்ந்து மது அருந்தியுள்ளனர். அப்போது இவர்களுக்கிடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. ஆத்திரத்தில் சிவா, கார்த்திக் ஆகிய இருவரும் பீர்பாட்டிலால் சுரேஷை தாக்கியுள்ளனர். இதில் சுரேஷுக்கு தலையில் காயம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து இருவரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

படுகாயமடைந்த சுரேஷை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த ஸ்ரீரங்கம் போலீஸார் சிவா, கார்த்திக் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

சிவா, கார்த்திக் ஆகிய இருவரும் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தனர். அந்தமனுவில், நண்பர்களான சுரேஷ், பாண்டியன் உள்ளிட்டோருடன் சேர்ந்து மது அருந்தி உள்ளனர். இதனால் , வாய் தகராறு ஏற்பட்டு முற்றிய நிலையில் பீர் பாட்டிலால் சுரேஷை தாக்கியதாக எங்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இது பொய்யாக பதிவு செய்யப்பட்ட வழக்கு. கணக்கு காண்பிக்கும் நோக்கில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஆகவே இந்த வழக்கில் ஜாமீன் வழங்கி உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தனர்.

இந்த வழக்கு நீதிபதி B. புகழேந்தி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, மது அருந்தியதன் காரணமாகவே இந்த பிரச்சினை ஏற்பட்டுள்ளது. ஆகவே மனுதாரர்கள் இருவரும் இனிமேல் மது அருந்த மாட்டோம் என பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தால், ஜாமீன் வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படும் எனக் கூறி வழக்கை செப்டம்பர் 13 ம் தேதி ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

 

Leave A Reply

Your email address will not be published.