ஐ.நாவின் குற்றச்சாட்டுகளுக்கு அரசு பொறுப்புடன் பதிலளிக்க வேண்டும்!

“இலங்கை முன்னேற வேண்டுமானால், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் குற்றச்சாட்டுகளுக்கு அரசு பொறுப்புணர்வுடன் பதிலளிக்க வேண்டும்.”

இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜே.சி. அலவத்துவல தெரிவித்தார்.

எதிர்க்கட்சியின் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“நாட்டின் பொருளாதாரம் சரிந்து வருகின்றது. அந்நியச் செலாவணி பற்றாக்குறையால் உலகத்துடன் பரிவர்த்தனைகளை முன்னெடுக்க வேண்டிய தேவை இலங்கைக்கு உள்ளது.

அரசு வெளிநாட்டு முதலீட்டாளர்களைக் கொண்டு வருவதாகக் கூறுகின்றது. எனினும், பொருளாதாரம் தொடர்ந்து பலவீனமடைந்து வருகின்றது என்பது தெளிவாகின்றது.

இலங்கை முன்னேற வேண்டுமானால், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் குற்றச்சாட்டுகளுக்கு அரசு பொறுப்புணர்வுடன் பதிலளிக்க வேண்டும். ஜி.எஸ்.பி. பிளஸ் வர்த்தகச் சலுகையை நாடு இழந்தபோது பொதுமக்கள் பல சிரமங்களை எதிர்கொண்டனர். பலர் வேலையின்றி தவித்தனர் அல்லது தங்கள் வருவாய் வழிகளை இழந்தனர். அந்த நிலைமை மீண்டும் வந்தால் அரசே முழுப்பொறுப்பு” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.