மைத்திரி, கோட்டாபய கொலைச் சூழ்ச்சியில் அரசியல் தரப்புக்குத் தொடர்பு எதுவுவில்லை.

“2018 ஆம் ஆண்டு காலப்பகுதியில் முன்னெடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்ட அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்‌ஷ ஆகியோர் மீதான கொலைச் சூழ்ச்சியில் அரசியல்வாதிகளோ, அரசியல் கட்சிகளோ தொடர்புபட்டிருக்கவில்லை.”

இவ்வாறு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இடம்பெற்ற விசேட கேள்வி நேரத்தின்போது எதிர்க்கட்சி உறுப்பினர் நளின் பண்டாரவினால், 2018 ஆம் ஆண்டில் நாமல் குமார என்பவரால் வெளியிட்ட கொலைச் சூழ்ச்சிகள் தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

2018 ஆம் ஆண்டின் நடுப் பகுதியில் அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கொலை அச்சுறுத்தல் இருப்பதாக நாமல் குமார என்பவரால் வெளியிடப்பட்ட தகவல்கள் குறித்த விசாரணை நடவடிக்கைகளின் முன்னேற்றம் என்ன என்றும், இதனுடன் அரசியல்வாதிகள் தொடர்புபட்டுள்ளனரா என்றும் நளின் பண்டார கேள்வி எழுப்பினார்.

இதன்போது பதிலளித்த பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர கூறுகையில்,

“2018ஆம் ஆண்டின் நடுப் பகுதியில் அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கொலை அச்சுறுத்தல் இருப்பதாக நாமல் குமார என்பவரால் வெளியிடப்பட்ட குரல் பதிவுகள் குறித்து அப்போது பயங்கரவாத விசாரணைப் பிரிவு பணிப்பாளராக இருந்த நாலக சில்வா கைது செய்யப்பட்டதுடன், அவர் அந்த பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்‌ஷ ஆகியோரைக் கொலை செய்வதற்கு சூழ்ச்சிகள் இருப்பதாக நாமல் குமார என்பவர் 2018ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 18ஆம் திகதி மேற்கொண்ட முறைப்பாட்டுக்கு அமைய விசாரணை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு நிறைவுக்குக் கொண்டுவரப்பட்டு அது தொடர்பான அறிக்கை சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு சட்ட ஆலோசனைகளை கேட்டு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அந்தக் கொலைச் சூழ்ச்சியில் அரசியல்வாதிகள் மற்றும் அரசியல் கட்சிகள் தொடர்புபட்டுள்ளனவா என்று கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. அவ்வாறு அரசியல்கட்சிகளோ அரசியல்வாதிகளோ அதில் தொடர்புபடவில்லை” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.