மிலிந்த மொரக்கொட இந்திய குடியரசுத் தலைவரிடம் நற்சான்றிதழ்கள் கையளிப்பு….

அமைச்சரவை அந்தஸ்த்துடன் நியமிக்கப்பட்ட இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரக்கொட, புதுடில்லியில் இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்திடம் தனது நற்சான்றிதழ்களைக் கையளித்தார்.

கோவிட்-19 தொற்றுநோய் சூழ்நிலையில் நிறுவப்பட்ட நடைமுறைகளுக்கு ஏற்ப, நற்சான்றிதழைக் கையளிக்கும் வைபவம் வெளிவிவகார அமைச்சில் மெய்நிகர் ரீதியாக இடம்பெற்றது. ராஷ்ட்ரபதி பவனில் இருந்து வெளியுறவு அமைச்சுடன் இணைந்து கொண்ட இந்திய ஜனாதிபதியிடம் உயர்ஸ்தானிகர் மொரக்கொட தனது நற்சான்றிதழைக் கையளித்தார்.

நற்சான்றிதழ் கையளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, உயர்ஸ்தானிகர் மொரக்கொட ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் இருந்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்திற்கு வாழ்த்துக்களைத் தெரிவித்த அதே வேளை, இரு நாடுகளுக்கும் இடையே இருக்கும் கூட்டாண்மையை மேலும் மேம்படுத்துவதும், அந்த உறவை ஒரு விஷேட நிலைக்கு உயர்த்துவதுமே இந்தியாவுக்கான தனது பணியின் முக்கிய நோக்கமாகும் எனத் தெரிவித்தார்.

பௌத்த மதம் இலங்கைக்கு இந்தியா அளித்த மிக அருமையான பரிசு எனக் குறிப்பிட்ட உயர்ஸ்தானிகர், தனது கொள்கை வரைபடமான இலங்கையின் இராஜதந்திரத் தூதரகங்களுக்கான ஒருங்கிணைந்த வியூகமானது புத்தரின் போதனைகளின் அடிப்படையில் அமைத்துள்ளதாக இந்திய ஜனாதிபதியிடம் தெரிவித்தார். தனது பணியின் முக்கிய நோக்கத்தை உணர்ந்து, ஜனாதிபதி மற்றும் இந்திய அரசாங்கத்தின் ஆதரவையும், இரு நாடுகளுக்கும் இடையே உள்ள பழைமையான, நேர சோதனை மற்றும் பல பரிமாண உறவுகளை மேலும் வலுப்படுத்துவதையும் உயர்ஸ்தானிகர் மொரக்கொட கேட்டுக் கொண்டார்.

இதற்கு பதிலளிக்கும் விதமாக, உயர்ஸ்தானிகர் மொரக்கொடவின் அறிக்கைக்கு ஜனாதிபதி ஸ்ரீ ராம்நாத் கோவிந்த் நன்றிகளைத் தெரிவித்ததோடு, இந்தியாவின் ‘அயல்நாட்டிற்கு முன்னுரிமை’ மற்றும் எஸ்.ஏ.ஜீ.ஏ.ஆர். கொள்கைகளில் இலங்கை விஷேட இடத்தை வகிப்பதாகத் தெரிவித்தார். இரு நாடுகளுக்கிடையிலான நட்புறவான, வரலாற்று மற்றும் பல் பரிமாண உறவுகள் மற்றும் தற்போதுள்ள வலுவான இருதரப்பு அபிவிருத்தி ஒத்துழைப்பை அவர் நினைவு கூர்ந்தார். இரு நாடுகளுக்கிடையேயான நெருக்கமான ஒத்துழைப்பு தொடர்ந்து விருத்தியடையும் என தனது நம்பிக்கையைத் தெரிவித்த ஜனாதிபதி, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு தனது அன்பான வாழ்த்துக்களைத் தெரிவிக்குமாறு உயர்ஸ்தானிகரிடம் வேண்டுகோள் விடுத்தார்.

சேர் பாரொன் ஜயதிலக்க 1942 இல் இலங்கையின் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டதிலிருந்து இந்தியாவுக்கான இலங்கையின் இருபத்தி ஆறாவது தூதுவராக மிலிந்த மொரக்கொட நியமிக்கப்பட்டுள்ளார்.

நற்சான்றிதழ் கையளிக்கும் விழாவில் உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரக்கொட ஆற்றிய முழுமையான உரை பின்வருமாறு:

‘மேன்மை தங்கியவரே

ஆயுபோவன்

நமஸ்தே

இலங்கை ஜனாதிபதி அதமேதகு கோட்டாபய ராஜபக்ஷவின் உன்னதமான வாழ்த்துக்களை நான் என்னுடன் கொண்டு வந்துள்ளேன். இலங்கை இராஜதந்திரி ஒருவருக்கான மிக முக்கியமான வெளிநாட்டுப் பணியான இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகராக இன்று எனது நற்சான்றிதழ்களைக் கையளித்தமையை நான் ஒரு தனி மரியாதையாகக் கருதுகின்றேன்.

குறிப்பாக உலகளாவிய மற்றும் இந்தப் பிராந்தியத்தில் புவிசார் அரசியல் முன்னேற்றங்கள் பெருகிய முறையில் சிக்கலானதாகவுள்ள மற்றும் சவாலான நேரத்தில், எமது வெளியுறவுக் கொள்கையின் மூலக்கல்லான இந்தியாவுக்கான உயர்ஸ்தானிகராக என்னை நியமித்ததன் மூலம் எனது ஜனாதிபதி என் மீது வைத்துள்ள நம்பிக்கை மற்றும் விசுவாசத்தால் நான் மதிக்கப்படுகின்றேன்.

இந்தியாவில் எனது பணியின் முக்கிய குறிக்கோள், எமது இரு நாடுகளுக்கும் இடையே இருக்கும் கூட்டாண்மையின் வேகத்தை மேலும் மேம்படுத்துவதோடு, அந்தக் கூட்டாண்மையை உறவின் விஷேடமானதொரு நிலைக்கு உயர்த்துவதாகும். இந்த முக்கிய நோக்கத்தை உணர்த்தும் நோக்கில், அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு இந்தியாவில் உள்ள இலங்கை இராஜதந்திரப் பணிகளுக்கான ஒருங்கிணைந்த மூலோபாய வடிவிலான வரைபடமொன்றை உருவாக்கியுள்ளேன்.


எனது பார்வையில், பௌத்த மதம் இந்தியா எமது நாட்டிற்கு அளித்த மிக அருமையான பரிசாகும். இந்தியாவின் மிகச் சிறந்த பேரரசரும், பௌத்த ஆட்சியாளருமான தர்மாசோக்க, ஆசீர்வதிக்கப்பட்ட புத்தரின் போதனைகளை அறிமுகப்படுத்தி, பரப்புவதற்காக தனது மகன் மற்றும் மகள் இருவரையும் தனித்தனியாக எமது நாட்டிற்கு அனுப்பி வைத்தமையானது, எமது இரு நாடுகளுக்குமிடையே இருக்கும் வலுவான மற்றும் உடைக்க முடியாத நாகரீகப் பிணைப்புகளை எடுத்துக்காட்டுகின்றது.

இதை மனதில் கொண்டு, இந்தியாவுக்கான எனது ஒருங்கிணைந்த நாட்டு வியூகத்தை நான் புத்தரின் போதனைகளின் அடிப்படையில் மையப்படுத்தியுள்ளேன், குறிப்பாக, ‘சதர சம்பிரத’ அல்லது நான்கு சாதனைகளான முறையே நம்பிக்கை, நல்லொழுக்கம், தியாகம் மற்றும் முழுமையான புரிதல் என விளக்கமளிக்கப்படும் சத்த, சீல, சாக மற்றும் பான்ன ஆகிய வற்றை உள்ளடக்கியது. இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் நம்பிக்கையையும் விசுவாசத்தையும் வளர்ப்பதில் இந்த உன்னதக் கொள்கைகள் பொருத்தமானவை என்பது எனது உறுதியான நம்பிக்கையாகும்.

எனது பணியின் முதன்மை நோக்கத்தை உணர்ந்து, எமது இரு நாடுகளுக்கிடையேயான பழைமையான, நீண்ட மற்றும் பல் பரிமாண உறவுகளை மேலும் வலுப்படுத்துவதில் மேன்மை தங்கிய தங்களதும், மற்றும் இந்திய அரசாங்கத்தினதும் ஆதரவைப் பெற்றுக் கொள்வதற்கு நான் மிகவும் நன்றியுடன் எதிர்பார்க்கின்றேன்.

இலங்கை உயர்ஸ்தானிகராலயம்,

புது டில்லி

Leave A Reply

Your email address will not be published.