அரசிலிருந்து வெளியேறும் எண்ணம் பங்காளிக் கட்சிகளுக்குக் கிடையாது! திஸ்ஸ விதாரண திட்டவட்டம்.

“ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தலைமையிலான கூட்டணி அரசில் இருந்து வெளியேறும் நோக்கம் பங்காளிக் கட்சியினருக்குக் கிடையாது.”

இவ்வாறு ஆளும்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும் லங்கா சமசமாஜக் கட்சியின் தலைவருமான பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன முன்னணி கூட்டணியில் அங்கம் வகிக்கும் பங்காளிக் கட்சிகள் அரசில் இருந்து வெளியேற விரும்பினால் தாராளமாக வெளியேறலாம் என்று பிரதமர் மஹிந்த ராபக்ச தெரிவித்தார் என்று சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ள செய்தி அடிப்படையற்றது எனவும் அவர் குறிப்பிட்டார்.

அரசில் காணப்படும் பிரச்சினைகளுக்குக் கூட்டணி என்ற ரீதியில் அனைவரும் ஒன்றினைந்து செயற்பட்டால் மாத்திரமே அனைத்து சவால்களையும் வெற்றிக் கொண்டு முன்னேற்றமடைய முடியும் என்றே பிரதமர் அனைத்துத் தரப்பினருக்கும் ஆலோசனை வழங்கினார் எனவும் அவர் கூறினார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் குறிப்பிடுகையில்,

“ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன முன்னணி என்ற கூட்டணியின் ஊடாக அரசைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றோம்.

கடந்த காலங்களில் அரசு எடுத்த ஒரு சில தீர்மானங்கள் தொடர்பில் பங்காளிக் கட்சி உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றிணைந்து நிலைப்பாட்டை வெளிப்படுத்தினோம்.

கெரவலப்பிடிய மின்நிலையத்தின் 40 சதவீத பங்குகளை அமெரிக்க நிறுவனத்துக்கு வழங்க அரசு எடுத்த தீர்மானத்துக்குக் கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளோம். இவ்விடயம் குறித்து பிரதமர் மஹிந்த ராஜபக்சவுடன் கடந்த வாரம் பேச்சு இடம்பெற்றது” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.