ரிஷாத் எம்.பியை உடன் விடுவிக்குக சபையில் ரணில் வலியுறுத்து.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனுக்கு எதிராக சாட்சியங்கள் இல்லாவிட்டால் அவரை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க கோரிக்கை விடுத்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று விசேட கூற்றொன்றை முன்வைத்து உரையாற்றும்போதே அவர் இந்தக் கோரிக்கையை முன்வைத்தார்.

இதன்போது அவர் மேலும் தெரிவித்ததனது:-

“ரிஷாத் பதியுதீனுக்கு எதிராக சாட்சியங்கள் இருந்தால் அவற்றை முன்வைத்து, வழக்குத் தாக்கல் செய்யப்பட வேண்டும்.

நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரைத் தடுத்து வைத்திருப்பதென்றால், அவருக்கு எதிராக குற்றச்சாட்டு இருக்க வேண்டும். இது ரிஷாத் பதியுதீன் பிரச்சினை மாத்திரமன்றி நாடாளுமன்றத்தின் பிரச்சினையாகும்.

ரிஷாத் மீதான சாட்சியங்களை முன்வைக்க முடியுமா? இல்லையா? என்பதை சபாநாயர், சட்டமா அதிபருக்குக் கடிதமொன்றை அனுப்பிக் கேட்க வேண்டும்ர.

தற்போது நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாத் தடுப்புக் காவல் உத்தரவின் கீழ் வைக்கப்பட்டுள்ளார். அவருக்கு எதிராக சாட்சியங்கள் இருக்குமாயின் அதனை முன்வைத்து வழக்கைத் தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்லுங்கள். சாட்சி இல்லையென்றால் உடனடியாக அவரை விடுவிக்கவும்.

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் உறுப்பினர், இப்போது வழக்கொன்றின் விசாரணையில் தலையீடு செய்தது தொடர்பிலேயே தடுத்து வைக்கப்பட்டுள்ளார். அதற்கான சாட்சி இருந்தால், அதனையும் முன்வைக்க வேண்டும்.

எம்.பி. ஒருவர் வழக்கொன்றில் தலையிட்டால் அது பிரதான பிரச்சினையாகும். எனினும், குறித்த வழக்கு தொடர்பான சம்பவம் இடம்பெற்ற காலப்பகுதியில் எம்.பி. தடுப்புக் காவலில் இருந்துள்ளார். அப்படி அவர் தொடர்பில் சாட்சியங்கள் இருந்தால், அவற்றையும் முன்வைக்க வேண்டும்” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.