ஆஸ்திரியாவில் நடந்த ஊழல் : தலைமை அமைச்சர் மாற்றம் :சண் தவராஜா

அல்ப்ஸ் மலையடிவார நாடான ஆஸ்திரியாவில் தலைமை அமைச்சர் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

அந்த நாட்டின் தலைமை அமைச்சராக அக்டோபர் 10ஆம் திகதி வரை பதவி வகித்த 35 வயது நிரம்பிய செபஸ்ரியான் குர்ஸ் தனது பதவியைத் துறந்த நிலையில் அவரது அமைச்சரவையில் வெளிவிவகார அமைச்சராகப் பதவி வகித்த அலெக்ஸான்டர் ஷல்லன்பேர்க் புதிய தலைமை அமைச்சராகப் பதவி ஏற்றுள்ளார்.
தலைநகர் வியன்னாவில் ஜனாதிபதி அலெக்ஸான்டர் வான் டெர் பெல்லன் முன்னிலையில் திங்கட்கிழமை இந்தப் பதவியேற்பு நடைபெற்றது. பதவியேற்பின் பின்னர் உரையாற்றிய அவர், தான் சார்ந்த கட்சியின் தலைவரும், முன்னாள் தலைமை அமைச்சருமான செபஸ்ரியான் குர்ஸ் அவர்களோடு இணைந்து பணியாற்ற உள்ளதாகத் தெரிவித்தார். “நாடாளுமன்றத் தேர்தல்களில் இரண்டு தடவை வெற்றியைப் பெற்றுத் தந்த குர்ஸ் அவர்களோடு இனைந்து செற்படாமல் போவது முட்டாள்தனமானது” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஷல்லன்பேர்க் அவர்களின் அறிவிப்பைக் கேட்கும் போது, தமிழ்நாட்டில் அ.தி.மு.க. கட்சியைச் சேர்ந்தவர்கள் ஊழல் வழக்கில் தண்டனை பெற்ற செல்வி ஜெயலலிதா அவர்களின் வழியில் ஆட்சியமைக்கப் போவதாகச் சொல்வது ஞாபகத்தில் வந்து போகின்றது. ஜெயலலிதா அளவுக்கு ஊழலில் குர்ஸ் ஈடுபடவில்லையாயினும், அவர் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்ட நிலையிலேயே அவர் பதவி விலக நேரிட்டது.

வலதுசாரிக் கொள்கைகளைக் கொண்ட ஆஸ்திரேலிய மக்கள் கட்சியின் தலைவரான செபஸ்ரியான் குர்ஸ், 2017 டிசம்பரில் தலைமை அமைச்சராக முதல் தடவை பதவியேற்றுக் கொண்டார். அவர் பதவியேற்கும் போது அவரது வயது 31. மிக இளம் வயதிலேயே அரசுத் தலைவராகப் பொறுப்பேற்ற ஒருவராகக் கொண்டாடப்பட்ட அவர், வெகு விரைவிலேயே தனது நற்பெயரைக் கெடுத்துக் கொண்டுள்ளமையைத் தற்போது பார்க்க முடிகின்றது.

2016 முதல் 18 வரையான காலப்பகுதியில் தமது ஆட்சிக்குச் சாதகமாக கருத்துக் கணிப்புகளை வெளியிடுமாறு கோரி அரசுப் பணத்தில் இருந்து பத்திரிகைகளுக்குப் பணம் கொடுத்தார் என்பதே அவர் மீதும், அவரது கட்சியின் வேறு 9 பேர் மீதும் வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு.

இதுவெல்லாம் ஒரு ஊழல் குற்றச்சாட்டா? இதற்கெல்லாமா பதவி விலகுவார்கள்? என்று எம்மில் பலர் நினைக்கக் கூடும். எமது நாடுகளில் இதுபோன்ற விடயங்கள் சர்வ சாதாரணமானவையாகினும், ஐரோப்பிய நாடுகளில் இவை பாரதூரமான விடயங்கள்.

தலைமை அமைச்சர் அலுவலகம், நிதியமைச்சர் அலுவலகம் உள்ளிட்ட பல இடங்களில் விசேட காவல் துறையினர் நடத்திய தேடுதல் வேட்டைகளில் பல ஆவணங்கள் சிக்கியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில், தலைமை அமைச்சராக வியங்கிய குர்ஸ் அவர்களுக்கு எதிராக 12ஆம் திகதி நம்பிக்கையில்லாத் தீர்மானம் ஒன்றைக் கொண்டுவர உள்ளதாக எதிர்க் கட்சிகள் அறிவித்திருந்தன.

அது மாத்திரமன்றி, ஆளும் அரசில் பங்காளிக் கட்சியாக உள்ள பசுமைக் கட்சியும் இது தொடர்பில் எதிர்க் கட்சிகளோடு பேச்சுவார்த்தையில் பங்கெடுத்திருந்தது. துணைத் தலைமை அமைச்சராகப் பதவி வகிக்கும் பசுமைக் கட்சியைச் சேர்ந்த வேர்ணர் கொக்லர், குர்ஸ் அவர்கள் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைத்திருந்தார். இத்தகைய பின்னணியிலேயே குர்ஸின் பதவி விலகல் நிகழ்ந்தது.

தலைமை அமைச்சர் பதவியைத் துற்ந்த போதிலும், கட்சியின் தலைமைப் பொறுப்பையும், நாடாளுமன்ற உறுப்பினர் பொறுப்பையும் தான் துறக்கப் போவதில்லை எனத் தெரிவித்த குர்ஸ், ‘என்மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை. அவை உண்மைக்குப் புறம்பானவை என்பதை நான் வெகுவிரைவில் நிரூபிப்பேன்” எனச் சூழுரைத்துள்ளார்.

தனது ஐந்து வருட பதவிக் காலத்தில் குர்ஸ் பதவியைத் துறப்பது இது முதற் தடவையல்ல. 2019ஆம் ஆண்டிலும் ஊழல் குற்றச்சாட்டின் அடிப்படையில் அவர் பதவி விலக நேரிட்டது. ஆனால், அப்போது அதற்குக் காரணமாக அமைந்தவர் அவரின் ஆட்சியில் பங்காளிக் கட்சியாக இருந்த ஆஸ்திரிய சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும், அன்றைய துணைத் தலைமை அமைச்சராக விளங்கியவருமான ஹைன்ஸ் கிறிஸ்ரியன் ஸ்றாஹே.

ஸ்பெயினுக்குச் சொந்தமான இபிஸா தீவில் விடுமுறைக்காகச் சென்ற அவரிடம் “ஆட்சியில் சலுகை வழங்கினால் கட்சிக்கு நிதி வழங்கலாம்” என்ற தொனிப்பட இளம் பெண்ணொருவர் பேசும் ஒளிநாடா ஒன்று வெளியானது. ஜரோப்பிய ஊடகங்களில் ~இபிஸா கேற் என வர்ணிக்கப்பட்ட இந்த ஒளிநாடா உள்நோக்கத்தோடு திட்டமிட்டு எடுக்கப்பட்ட ஒன்றாக இருந்த போதிலும், அதில் பின்னணியில் செயற்பட்டது யார் என்பது இன்றுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.

இந்த ஒளிநாடா வெளியானதன் பின்னணியில் ஆட்சியைக் கலைத்துவிட்டு புதிய தேர்தலைச் சந்தித்த குர்ஸ், அந்தத் தேர்தலில் வெற்றிபெற்று 2020 யனவரியில் மீண்டும் தலைமை அமைச்சரானார். அதன்போது, பங்காளிக் கட்சியாக பசுமைக் கட்சியை இணைத்துக் கொண்டார். ஆட்சியில் பங்கு கொள்ளும்போதே, ஊழலில் சம்பந்தப்படக் கூடாது என்ற நிபந்தனையுடனேயே பசுமைக் கட்சி இணைந்து கொண்டது. என்றாலும் தனது வாக்குறுதியைக் காப்பாற்ற முடியாத நிலையில் குர்ஸ் தற்போது இரண்டாவது தடவையாகப் பதவியைத் துறந்துள்ளார். அவர் மீண்டும் தலைமை அமைச்சர் பதவியைப் பிடிப்பாரா? தனக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுகளில் உண்மை இல்லை என்பதை நிரூபித்து மீண்டு வருவாரா என்பதைப் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.
அதேவேளை, குர்ஸ் பெயருக்கே பதவி விலகி உள்ளார். மறைமுகமாக அவரே ஆட்சியில் தொடர்கிறார் என ஒருசில நோக்கர்கள் கருத்து வெளியிட்டு உள்ளனர். எதிர்க்கட்சிகளும் இத்தகைய கருத்துகளையே வெளியிட்டுள்ளன. தற்போதைய தலைமை அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள ஷல்லன்பேர்க், குர்ஸின் தீவிர விசுவாசியாக உள்ளதாலேயே அவரை குர்ஸ் தனது வாரிசாக நியமித்து உள்ளார் என்கின்றனர் அவர்கள். எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டில் உண்மை உள்ளதா இல்லையா என்பதை ஆஸ்திரியாவின் எதிர்கால அரசியல் நிலவரமே வெளிப்படுத்தக் கூடும். அதுவரை காத்திருப்பதைத் தவிர வேறு வழி இல்லை.

Leave A Reply

Your email address will not be published.