மைத்திரிபாலவின் கட்சிக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை வேண்டும்!

“அரசின் வேலைத்திட்டங்களைக் குழப்புவதற்கு முற்படும் மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு எதிராக உடனடியாக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு எமது கட்சித் தலைமைகளிடம் கேட்டுக்கொள்கின்றேன்.”

இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சி தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் மேலும் கூறியதாவது:-

“உரப்பிரச்சினையால் அரசு கவிழும் என எதிரணி நினைத்துக்கொண்டிருக்கின்றது. அதற்குத் துணைபோகும் வகையிலேயே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி செயற்படுகின்றது.

குறிப்பாக அன்று இரசாயன உரத்துக்கு எதிராக நின்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன, இன்று மாறுபட்ட நிலைப்பாட்டில் உள்ளார். மாகாண சபைத் தேர்தல் நெருங்குவதால் மகனை முதலமைச்சர் ஆகும் நோக்கிலேயே அவர் விவசாயிகள் பற்றி கதைக்கின்றார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இன்று கீழ்த்தரமான அரசியலை முன்னெடுக்கின்றது. அரசுக்குள் இருந்துகொண்டு சகலவிதமான வரப்பிரதாசங்களையும் அனுபவிக்கும் அக்கட்சி, அரசின் திட்டங்களையே குழப்பியடிக்க முற்படுகின்றது.

இத்தகைய கட்சிக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை அவசியம். அதனை எமது கட்சித் தலைவர்கள் செய்ய வேண்டும்” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.