கறுப்பாடுகளை உடனடியாகக் களையெடுக்காவிடின் ஆபத்து! அரசுக்கு எச்சரிக்கை.

“அரசுக்குள் மறைந்திருக்கும் குழப்பவாதிகளை உடனே வெளியேற்ற வேண்டும். இல்லையேல் அரசுக்குத்தான் ஆபத்து.”

இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சாகர காரியவசம் தெரிவித்தார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் கடந்த 24ஆம் திகதி இரவு நடைபெற்ற ஆளுங்கட்சி நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் 52 நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்கவில்லை எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதற்கான காரணம் என்னவென்று ஆளும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பொதுச்செயலாளரிடம் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“ஜனாதிபதி தலைமையிலான ஆளுங்கட்சி நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் சிலர் கலந்துகொள்ளவில்லை என்பது உண்மைதான். கூட்டத்துக்குச் சமுகமளிக்காதவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு காரணங்களைக் கூறியுள்ளனர்.

சில பங்காளிக் கட்சியினரின் காரணங்கள் விசித்திரமாக உள்ளன. இது தொடர்பில் நாம் அலட்டிக்கொள்ள விரும்பவில்லை.

எனினும், அரசுக்குள் குழப்பவாதிகள் சிலர் மறைந்திருக்கின்றனர். அவர்களை உடனே வெளியேற்ற வேண்டும். இல்லையேல் அரசுக்குத்தான் ஆபத்து. இதைக் கட்சியின் தலைமலையிடம் ஏற்கனவே நான் கூறிவைத்துள்ளேன்.

எனவே, ஜனாதிபதியும், ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தலைமையும் இது தொடர்பில் கலந்துரையாடி தீர்மானம் எடுக்க வேண்டும்” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.