இலங்கையே இல்லாமல்போகும் நிலை! சஜித் அணி பகிரங்க எச்சரிக்கை.

“நாட்டில் தற்போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவால் நியமிக்கப்பட்டுள்ள விசேட ஜனாதிபதி செயலணிக் குழுவால், ‘ஒரே நாடு – ஒரே சட்டம்’ என்பது மக்களுக்கு இல்லை என்றாலும் அது நடைமுறைப்படுத்தப்படும். இறுதியில் நாடும் இல்லாமல் போகும் நிலைமை உருவாகும்.”

இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார எச்சரிக்கை விடுத்துள்ளார்.

குருநாகலில் இன்று நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“2020ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தற்போதுதான் நாட்டு மக்களுக்கு சிறப்பாக செய்யப் போகின்றார். அதற்கு இதுதான் சரியான நேரம் என அவர் உணர்ந்துள்ளார்.

2015ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த நல்லாட்சி அரசைக் கவிழ்க்க கோட்டாபாய ராஜபக்ச உட்பட இந்தக் குழுவினர் இனவாதம் மற்றும் மதவாதத்தைப் பயன்படுத்தினர். இனங்களுக்கிடையில் ஆத்திரத்தைத் தூண்டியதுடன் சூழ்ச்சி மற்றும் பயங்கரவாத்தை ஏற்படுத்தினர். இவற்றைப் பயன்படுத்தியே 2015ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த அரசைக் கவிழ்த்தனர்.

இரண்டு வருடங்களின் பின்னர் தற்போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நித்திரையில் இருந்து விழித்தவர் போல், கலகொட அத்தே ஞானசார தேரர் தலைமையில் ஒரே நாடு ஒரே சட்டத்தை உருவாக்க ஜனாதிபதி செயலணிக் குழுவை நியமித்துள்ளார்.

நாட்டில் உள்ள படித்த புத்திசாலி மக்களுக்கு இதனை நாங்கள் விளக்கப்படுத்த வேண்டியதில்லை. எதற்காகத் தயாராகி வருகின்றனர்? நாட்டை எங்கு கொண்டு செல்லப் போகின்றனர்? கடந்த இரண்டு ஆண்டுகளில் ‘ஒரு நாடு – ஒரு சட்டம்’ அமுல்படுத்தப்பட்டதை நாங்கள் நன்றாகப் பார்த்தோம். ஜனாதிபதி இவ்வாறு நாட்டை எந்தத் திசை நோக்கி கொண்டு செல்கின்றார் என்பதை மக்களுக்குத் தெளிவுப்படுத்த வேண்டும்.

கடந்த காலத்தில் நியமித்த ஜனாதிபதி செயலணிகளை நோக்கிப் பார்க்கும்போது, அவை பற்றி சிரித்தாலும் தற்போது நியமிக்கப்பட்டுள்ள விசேட ஜனாதிபதி செயலணிக்குழுவால், ‘ஒரே நாடு – ஒரே சட்டம்’ என்பது மக்களுக்கு இல்லை என்றாலும் அது நடைமுறைப்படுத்தப்படும். இறுதியில் நாடும் இல்லாமல் போகும் நிலைமை உருவாகும்” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.