தொற்றுநோயின் பொருளாதார, நிதி சவால்களை சமாளிப்பதற்கான நடவடிக்கை.

தொற்றுநோயின் பொருளாதார, நிதி சவால்களை சமாளிப்பதற்காக முன்னெடுக்கப்பட்ட ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை இலங்கை சுட்டிக்காட்டல்….

பாரிய பொருளாதாரக் கொள்கை, வறுமைக் குறைப்பு மற்றும் ஆசிய மற்றும் பசிபிக் பகுதிக்கான ஐக்கிய நாடுகள் பொருளாதார மற்றும் சமூக ஆணைக்குழுவின் அபிவிருத்திக்கான நிதியுதவிக் குழுவின் மூன்றாவது அமர்வு 2021 அக்டோபர் 20 முதல் 22 வரை பேங்கொக்கில் மெய்நிகர் ரீதியாக கூட்டப்பட்டதுடன், கோவிட்-19க்குப் பிந்தைய சூழலில், பலதரப்பட்ட சவால்களை சமாளிப்பதற்காக பலவிதமான பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் புதுமையான நிதி உத்திகள் குறித்து கலந்துரையாடப்பட்டது.

இலங்கைத் தூதுக்குழுவிற்கு தலைமை தாங்கிய தாய்லாந்து இராச்சியத்திற்கான இலங்கைத் தூதுவர் மற்றும் ஆசியா மற்றும் பசுபிக் பகுதிக்கான ஐக்கிய நாடுகள் பொருளாதார மற்றும் சமூக ஆணைக்குழுவின் நிரந்தரப் பிரதிநிதி சி.ஏ. சமிந்த ஐ. கொலொன்ன, கோவிட்-19 தொற்றுநோய் மற்றும் அதனுடன் தொடர்பான சவால்களை சமாளிக்கும் பணிக்காக ஐக்கிய நாடுகள் ஆசிய மற்றும் பசிபிக் பொருளாதார மற்றும் சமூக ஆணைக்குழுவின் பாரிய பொருளாதாரக் கொள்கை, வறுமைக் குறைப்பு மற்றும் அபிவிருத்திக்கான நிதியுதவிக் குழுவிற்கு இலங்கையின் பாராட்டுகளைத் தெரிவித்ததுடன், சீனா, ஜப்பான், பாகிஸ்தான், பிரான்ஸ் மற்றும் பின்லாந்து ஆகிய நாடுகளுடன் இணைந்து நிலையான அபிவிருத்தி இலக்குகளுக்கான நிதியளிப்பு மூலோபாயங்களுக்கான ஆலோசனைக் குழுவை நிறுவுவதற்கான இலங்கையின் ஆதரவை வெளிப்படுத்தினார். இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் மேற்படி குழுவை ஒருங்கிணைக்கவுள்ளார்.

உலகளாவிய தொற்றுநோய்களின் காலம் குழப்பத்தை உருவாக்குவதுடன், அதுவே பாதிப்புக்களை ஏற்படுத்தி, தரமிறக்குதல் மற்றும் நிதிக்கான குறைந்த அணுகலை வழங்குவதன் மூலம் நாடுகளுக்கு மேலும் பாதிப்புகளை ஏற்படுத்துவதாக ‘அபிவிருத்திக்கான நிதியுதவி குறித்த பிராந்திய உரையாடல்: கோவிட்-19 தொற்றுநோய்க்குப் பின், நிலையான அபிவிருத்திக்கு நிதியளித்தல் மற்றும் கடன் அபாயங்களை நிவர்த்தி செய்தல், புதுமையான நிலையான நிதியுதவி உத்திகளின் சாத்தியம்’ என்ற அதனுடன் இணைந்த விஷேட நிகழ்வின் முக்கியக் குறிப்புப் பேச்சாளராக ஆளுநர் கப்ரால் தெரிவித்தார். தொற்றுநோயின் முதல் கட்டத்தில் சர்வதேச நாணய நிதியத்தால் விஷேட வரைதல் உரிமைகளை வழங்குவதன் முக்கியத்துவத்தையும் ஆளுநர் கப்ரால் எடுத்துரைத்ததுடன், சந்தைக் கடன்களைக் குறைப்பதன் மூலம் கடன் அபாயத்தை நிர்வகிப்பதற்கான இலங்கையின் புதிய அணுகுமுறைகள், ஜி2ஜி புதிய மேலதிக நிதியுதவி, பயன்படுத்தப்பட்ட சொத்துக்களைப் பயன்படுத்துதல் ஆகியன குறித்தும் விரிவாக விளக்கினார்.

‘உற்பத்தித் திறன் கொண்ட உள்ளூர் நிறுவனங்களை உலகளாவிய மதிப்புச் சங்கிலிகளில் ஒருங்கிணைப்பதற்கும், உற்பத்தி, விவசாய வணிகங்கள் மற்றும் சேவைத் துறைகளில் அதிகமான பெறுமதியைக் கூட்டுவதற்கும் அனுமதிக்கும் வகையில், குறிப்பாக நீலம் மற்றும் பசுமைப் பொருளாதாரம் மற்றும் ஸ்மார்ட் விவசாயம் ஆகியவற்றில் கவனம் செலுத்துவதன் மூலம், நிதி மற்றும் கடன் நிலைத்தன்மையைப் பாதுகாப்பதற்கும், நெகிழ்ச்சியான அபிவிருத்தி மற்றும் பணிகளை உந்துவதற்கும் இலங்கையால் உழைக்க முடியும்’ என இலங்கை நிதி அமைச்சின் வெளிவிவகாரத் திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர் நாயகம் சம்பத் மந்திரிநாயக்க நாட்டின் அறிக்கையை வழங்குகையில் குறிப்பிட்டார்.

இலங்கை நிலையான அபிவிருத்தி சபையின் பணிப்பாளர் நாயகம் சமிந்திரி சபரமாது, வெளியக வளங்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் சமந்த பண்டார, தூதரகத்தின் முதல் செயலாளரும் பிரதி நிரந்தரப் பிரதிநிதியுமான சரித்த ரணதுங்க ஆகியோர் இலங்கைத் தூதுக்குழுவில் இடம்பெற்றிருந்தனர்.

இலங்கைத் தூதரகம் மற்றும் நிரந்தரப் பணிமனை

பேங்கொக்

Leave A Reply

Your email address will not be published.