ஓய்வை அறிவித்தாரா ‘யுனிவர்ஸ் பாஸ்’ கெயில்? – ரசிகர்கள் குழப்பம்!

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை தொடரானது தற்போது சூப்பர் 12-சுற்றின் இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது. இந்த தொடரில் நடப்பு சாம்பியனாக இருந்து வரும் வெஸ்ட் இண்டீஸ் அணி தங்களது கடைசி போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக விளையாடியது.

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணியானது 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகள் இழந்து 157 ரன்கள் மட்டுமே அடித்தது. அதனைத் தொடர்ந்து தற்போது 158 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி டேவிட் வார்னர், மிட்செல் மார்ஷின் அபார ஆட்டத்தால் 16.2 ஓவர்களிலேயே இலக்கை எட்டியது.

இந்நிலையில் ஏற்கனவே இந்த ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியுடன் டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக பிராவோ அறிவித்திருந்தார். இந்த போட்டியில் 12 பந்துகளை சந்தித்த அவர் ஒரு சிக்சருடன் 10 ரன்கள் குவித்து ஆட்டமிழந்து வெளியேறினார்.

அதேவேளையில் 42 வயதான மற்றொரு வீரரான கிறிஸ் கெய்ல் இந்த போட்டியில் ஓய்வு பெற்றுவிட்டாரா ? என்று அனைவரும் குழம்பியுள்ளனர். ஏனெனில் 9 பந்துகளை சந்தித்த கெயில் 2 சிக்சர்களுடன் 15 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

அவர் பெவிலியனுக்கு திரும்பிய போது சக வீரர்கள் மற்றும் ரசிகர்களை நோக்கி சிரித்தபடி பேட்டை தூக்கி அனைவரிடமும் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். அதுமட்டுமின்றி வீரர்கள் அனைவரையும் கட்டி அணைத்த அவர் அதனைத் தொடர்ந்து ரசிகர்கள் பலருக்கும் தனது கிளவுஸில் ஆட்டோகிராப் போட்டு வழங்கினார்.

அதோடு ரசிகர்களுடன் ஒரு சில புகைப்படங்களுக்கு போச்சும் கொடுத்தார். அவரது இந்த சில செயல்கள் அவரும் ஓய்வு பெற்றுவிட்டாரோ ? என்று குழப்பம் அடைய வைத்தது. பின்னர் சில நிமிடங்களில் வெளியான தகவலின்படி கிரிஸ் கெயிலும் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று விட்டதாக ஒரு தகவல் உறுதியளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.