டி20 உலகக்கோப்பை: அரையிறுதிக்கான அட்டவணை வெளியீடு!

ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடர் கடந்த அக்டோபர் 17ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்றுடன் லீக் போட்டிகள் முடிவடைவதால் அரையிறுதிப்போட்டிகள் மீது ரசிகர்களின் கவனம் திரும்பியுள்ளது.

இந்த தொடரில் ஒவ்வொரு குரூப்பில் இருந்தும் முதலிரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும். அந்தவகையில் குரூப் ஏ-வில் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் முன்னேறிவிட்டன. குரூப் பி பிரிவில் பாகிஸ்தான் முதல் அணியாக அரையிறுதி சென்றுவிட்ட போதும் 2ஆவது இடத்திற்கு யார் செல்வார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் நேற்று ஆஃப்கானிஸ்தானை வீழ்த்தி நியூசிலாந்து அணி சுலபமாக உள்ளே நுழைந்தது.

இதனையடுத்து எந்தெந்த அணிகள் அரையிறுதியில் மோதிக்கொள்ளப்போகிறது என்ற எதிர்பார்ப்பு இருந்து வந்தது. குறிப்பாக இந்த தொடரில் தொடக்கம் முதலே அசுரத்தனமான ஃபார்மில் இருக்கும் பாகிஸ்தானிடம் சிக்கப்போவது யார் என்ற கேள்வி ரசிகர்களிடையே இருந்து வந்தது.

இந்நிலையில் அதற்கான அறிவிப்பை ஐசிசி வெளியிட்டுள்ளது. அதன்படி வரும் நவம்.10ஆம் தேதி நடைபெறும் முதல் அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதவுள்ளன. இந்த போட்டி அபுதாபியில் நடைபெறவுள்ளது.

இதே போல நவம்பர் 11ஆம் தேதி நடக்கும் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. பாகிஸ்தானை விட ஆஸ்திரேலிய சற்று பலவீனமாக உள்ளது எனக்கூறலாம். போட்டி நடைபெறும் துபாய் மைதானத்தில் தான் பாகிஸ்தான் அணி அபார வெற்றிகளை குவித்துள்ளது.

எனவே அவர்களை அங்கு அசைத்து பார்ப்பது என்பது சாதாரண காரியம் அல்ல. மேலும் பாகிஸ்தான் அணியின் ஓப்பனிங் ஜோடியை பிரிப்பது இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கே கடும் சிரமமாக இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் இறுதிப்போட்டிக்கு செல்லப்போவது யார் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.