பள்ளிகள், அரசு அலுவலகங்கள் மூடல்.. டெல்லியில் விரைவில் முழு ஊரடங்கு என தகவல்..

காற்று மாசு கடுமையாக அதிகரித்திருப்பதால் டெல்லியில் வரும் திங்கட்கிழமை முதல் பள்ளிகள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டிருப்பதுடன், பல்வேறு கட்டுப்பாடுகளையும் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்திருக்கிறார். இதன் மூலம் அங்கு அறிவிக்கப்படாத ஊரங்கு அமல்படுத்தப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

டெல்லியில் கடந்த சில தினங்களாகவே காற்று மாசு அபாயகரமான அளவில் அதிகரித்திருக்கிறது. டெல்லி மற்றும் அண்டை மாநிலங்களில் உள்ள விளைநிலங்களில் எரிக்கப்படும் விவசாய கழிவுகளால், காற்று மாசு வேகமாக அதிகரித்து வருகிறது. இதனால் தலைநகர் டெல்லி முழுவதும் புகை மண்டலமாகவே காட்சியளிக்கிறது. நடப்பாண்டில் இதுவரை இல்லாத அளவுக்கு காற்றின் தரக்குறியீடு 471 ஆக பதிவாகி உள்ளதாக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்திருக்கிறது.

டெல்லியில் காற்று மாசு மோசமான நிலைக்கு சென்றுள்ளதால், அவசர கால நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள அம்மாநில அரசுக்கு, மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அறிவுறுத்தியுள்ளது. இதனையடுத்து காற்று மாசை குறைப்பது குறித்து முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உயர்மட்ட ஆலோசனையில் ஈடுபட்டார். இதன் முடிவில் தற்போது சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

அதன்படி வரும் திங்கட்கிழமை (நவம்பர் 15) முதல் ஒரு வார காலத்துக்கு பள்ளிகள் மூடப்படும். இதன் மூலம் மாசு நிறைந்த புகையை குழந்தைகள், மாணவர்கள் சுவாசிப்பது தடுக்கப்படும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் ஆன்லைன் மூலம் கல்வி பயில அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இது தவிர நாளை முதல் வரும் 17ம் தேதி டெல்லியில் கட்டிட பணி எதுவும் நடைபெறக் கூடாது என தடைவிதிக்கப்படுகிறது.

அரசு அலுவலகங்கள் மூடப்படுவதுடன், ஊழியர்கள் அனைவரும் 100% வீட்டில் இருந்தே பணிபுரிய உத்தரவிடப்பட்டுள்ளது. தனியார் நிறுவனங்கள் கூடுமானவரையில் தங்கள் பணியாளர்களுக்கு வீட்டில் இருந்து பணிபுரிய அனுமதிக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

டெல்லியில் தற்போதைய நிலவரப்படி முழு ஊரடங்கு அமல்படுத்தப்படவில்லை என்றபோதிலும் முழு ஊரடங்கு அமல்படுத்துவது குறித்து மத்திய அரசுடன் ஆலோசிக்கப்படுவதாகவும் கெஜ்ரிவால் தெரிவித்தார். நிலைமை மோசமடைந்தால் வாகன போக்குவரத்து கூட தடை செய்யப்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாக அவர் கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.