சூர்யா, ஜோதிகாவைக் கைது செய்யவேண்டும் – காவல்துறையில் பா.ம.க புகார்

நடிகர் சூர்யாவின் நடிப்பு மற்றும் தயாரிப்பில் ஜெய்பீம் திரைப்படம் சமீபத்தில் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியானது. காவல்துறை வன்முறையால் கொல்லப்பட்ட பழங்குடி நபர் ராஜாக்கண்ணுவின் உண்மைக் கதையைத் தழுவி இந்தப் படம் எடுக்கப்பட்டிருந்தது. இந்தப் படத்துக்கு அனைத்து தரப்பிலிருந்தும் மிகப்பெரிய அளவில் வரவேற்பு கிடைத்தது. விமர்சன அளவில் படத்துக்கு பெரும் வரவேற்பு கிடைத்தது. இதற்கிடையில், படத்தில் வன்னியர் சமூக மக்களைக் குறிக்கும் அக்னிகலசம் இடம்பெற்றிருந்தது. இதற்கு பா.ம.க சார்பில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. அதனையடுத்து, அக்னிகலசம் படத்திலிருந்து நீக்கப்பட்டது.

அதனையடுத்து, சூர்யாவுக்கு கேள்வி எழுப்பி அன்புமணி ராமதாஸ் கடிதம் எழுதியிருந்தார். அதற்கு சூர்யா பதில் எழுதிய நிலையில் இந்தச் சம்பவம் விஸ்வரூபம் எடுத்தது. சூர்யாவுக்கு எதிராக பா.ம.கவினர் தொடர்ந்து செயல்பட்டுவருகின்றனர். சூர்யா மன்னிப்பு கோர வேண்டுமெனவும், இல்லாவிட்டால் ரூ.5 கோடி இழப்பீடு வழங்கவும் வேண்டுமென வன்னியர் சங்கம் சார்பில் வக்கீல் நோட்டீசும் அனுப்பப்பட்டு உள்ளது. இந்தநிலையில், செங்கல்பட்டு மாவட்ட பா.ம.க மாவட்டச் செயலாளர் விநாயகம் தலைமையில் பா.ம.கவினர் சேலையூர் உதவி காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளனர்.

அதில், ‘தமிழகத்தில் ஜாதி கலவரத்தை ஏற்படுத்தும் ஜெய்பீம் படத்தை உடனடியாக தடை செய்ய வேண்டும். படத்தின் இயக்குனர் ஞானவேல்ராஜா, படத்தின் தயாரிப்பாளர்கள் சூர்யா, ஜோதிகாவை கைது செய்து விசாரணை நடத்த வேண்டும்.
தமிழகத்தில் ஜாதி கலவரம் ஏற்படுவதை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளனர்.

அதேபோல, ஓசூர் மாநகர காவல் நிலையத்திலும் சூர்யா மீது பா.ம.க மற்றும் வன்னியர் சங்கம் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் பா.ம.க மாவட்டச் செயலாளர் கோவிந்தராஜன், வன்னிய சங்கச் செயலாளர் கணேசன் தலைமையில் பாமகவை சேர்ந்த ஏராளமான நிர்வாகிகள், ஓசூர் மாநகர காவல் நிலையத்திற்கு சென்று ஜெய்பீம் படக்குழுவினருக்கு எதிராக புகார் மனு ஒன்றை அளித்தனர்.

அதில், அவர்கள் கூறியிருப்பதாவது, ஜெய்பீம் திரைப்படத்தில் வன்னியர் சமூகம் குறித்து அவதூறான காட்சிகள் அமைக்கப்பட்டு உள்ளது. சில காட்சிகளில் தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட சமூகத்தவரை கொடுமைப்படுத்துவதுபோல காட்சிப்படுத்தியுள்ளது வன்னிய சமூகத்தினரின் எண்ணங்களை புண்படுத்தும் விதமாக அவதூறாக காட்சிகள் அமைந்துள்ளன. எனவே அவதூறான காட்சிகள் அமைத்து இயக்கிய இயக்குநர் ஞானவேல், தயாரிப்பாளர் ஜோதிகா சூர்யா, நடிகர் சூர்யா ஆகியோர் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.