நகர்புற உள்ளாட்சி தேர்தலில் புதிய தமிழகம் தனித்து போட்டி – கிருஷ்ணசாமி அறிவிப்பு

நகர்புற உள்ளாட்சி தேர்தலில் புதிய தமிழகம் கட்சி தனித்தே போட்டியிட இருப்பதாகவும், தங்களுடன் யாரும் கூட்டணி பேச வில்லை, நாங்களும் யாருடனும் பேசவில்லை எனவும் அக்கட்சியின் தலைவர் டாக்டர் .கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.

கோவையில் புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர். கிருஷ்ணசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, கோவையில் நடந்து முடிந்த முதலீட்டாளர் மாநாட்டில் 92 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என சொல்லப்பட்டுள்ளது என தெரிவித்த அவர், இதற்கு முன் பல முதலீட்டாளர்கள் மாநாடுகள் நடத்தப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தார்.

ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த போதும் 100 கோடி ரூபாய் வரை ஒப்பந்தங்கள் போடப்பட டுள்ளன என தெரிவித்த அவர், புதிய தொழில்கள் குறித்து அறிவிப்புகள இந்த முதலீட்டாளர்கள் மாநாட்டில் கொடுத்தாலும் அவை செயலுக்கு வருவதில்லை என்று கூறினார்.

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

கோவை மாவட்டம் தனது தொழில் முகவரியை இழந்து வருகின்றது எனவும், தொழில் துறையில் பின்னுக்கு தள்ளப்பட்டு இருப்பதை மறு சீரமைப்பதற்கான அறிவிப்புகள் இந்த முதலீட்டாளர் மாநாட்டில் இல்லை என்று தெரிவித்த கிருஷ்ணசாமி, நிரந்தரமாக சிறு, குறு தொழில்கள் சிறப்பு பெற்று இருந்த மாவட்டமாக மீண்டும் கொண்டு வர நடவடிக்கைகள் வேண்டும் எனவும் தெரிவித்தார்.

கோவையில் 22 மற்றும் 23 ஆம் தேதிகளில் நடந்த முலீட்டாளர் மாநாட்டில் சிறு, குறு தொழில் முனைவோருக்கு எந்த பலனும் இல்லை என்றும் சிறு முதலீட்டாளர்களின் கருத்தை கேட்டு ஜனவரி முதல் வாரத்தில் புதிய தமிழகம் கட்சி சார்பில் கருதரதரங்கம் நடத்தப்பட இருப்பதாகவும் தெரிவித்தார்.

கோவை, திருப்பூர் மாவட்டம் தொழிலில் பழைய நிலையை ஏற்படுத்துவதுடன், நல்ல போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என கேட்டுக்கொண்ட அவர், கோவை – திண்டுக்கல் சாலை, கோவை-திருச்சி சாலைகளை ஆறு வழி சாலையாகவோ, 8 வழிச்சாலையாகவோ மாற்ற வேண்டு்ம் என தெரவித்தார்.

2011 ஆம் ஆண்டிற்கு பின்பு பொது மக்களுக்கு பொங்கல் பரிசு கொடுக்கப்பட்டு வருகின்றது. தற்போது பெரும்பாலான மாவட்டங்கள் மழையால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பொங்கல் பரிசு தொகுப்புடன் 5000 ரூபாய் கொடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

திருச்சி அருகே ஆடு திருடர்களை பிடிக்க சென்ற எஸ்.ஐ. கொலை செய்யப்பட்டது அதிர்ச்சி அளிக்க கூடிய சம்பவம் என தெரிவித்த கிருஷ்ணசாமி, இதில் சிறுவர்கள் எப்படி திடகாத்திரமான எஸ்.ஐ-யை கொலை செய்ய முடியும் எனவும் கேள்வி எழுப்பினார். மேலும், இதை அடிப்படையாக கொண்டு போலீசார் துப்பாக்கி வைத்து கொள்ள அனுமதி அளித்து இருப்பது மேலும் புதிய சிக்கலை ஏற்படுத்தும் எனவும், இதில் சரியான பாதையை காவல் துறையினர் எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

டிசம்பர் 15 முதல் புதிய தமிழகம் கட்சியின் வெள்ளி விழாவை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சி நடத்தப்படுகின்றன என தெரிவித்த கிருஷ்ணசாமி, இதன் ஒரு பகுதியாக உலக இந்துகள் ஒருங்கிணைப்பு மாநாடு நடத்தப்பட இருக்கின்றது எனவும் தெரிவித்தார். இந்துகள் மாநாடு என்பதை சிறுபான்மையினருக்கு எதிரானதாக கருத கூடாது எனவும் கூறினார்.

விரைவில் அறிவிக்கப்பட இருக்கும் நகர்புற உள்ளாட்சி தேர்தலில் புதிய தமிழகம் கட்சி தனித்தே போட்டியிட இருப்பதாகவும், எங்களுடன் யாரும் கூட்டணி பேச வில்லை, நாங்களும் யாருடனும் பேசவில்லை எனவும் தெரிவித்தார். தான், தேசியத்தின் ஒரு முனையில் இருக்கின்றேன், திராவிடம் வேறு முனையில் இருக்கின்றது என்றும் கூறினார்.

வரும் 2026 ல் தமிழகத்தில் கூட்டணி ஆட்சிதான் அமையும் எனவும், அதை அடிப்படையாக வைத்து புதிய தமிழகம் 5 ஆண்டு பணிகளை முன்வைத்து வேலை செய்து கொண்டு இருப்பதாகவும், தமிழகத்தில் 6 மாத திமுக ஆட்சியில் வெறும் புகைபடங்களை மட்டும்தான் பார்க்கின்றோம் எனவும், அரசின் விளம்பரதுறை சிறப்பாக செயல்படுகின்றது எனவும் புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.