ஜனாதிபதி தலைமையில் பாதுகாப்பு அமைச்சின் ஆலோசனைச் சபை கூடியது…

பாதுகாப்பு அமைச்சின் ஆலோசனைச் சபை, இன்று (07) பிற்பகல், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் தலைமையில், பாராளுமன்றக் கட்டிடத் தொகுதியின் முதலாம் இலக்க அறையில் கூடியது.

பாதுகாப்பு அமைச்சின் ஆலோசனைச் சபைத் தலைவர் என்ற ரீதியில், இக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காகப் பாராளுமன்றத்துக்கு வருகை தந்த ஜனாதிபதி அவர்களை, சபை முதல்வரும் அமைச்சருமான தினேஸ் குணவர்தன மற்றும் ஆளுங்கட்சியின் பிரமத கொறடாவும் அமைச்சருமான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ ஆகியோர் தலைமையிலான அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் வரவேற்றனர்.

நாட்டின் தேசிய பாதுகாப்பு, சட்டம் மற்றும் ஒழுங்கு, தற்போதைய பாதுகாப்புப் பிரிவினரின் அவதானத்துக்கு இலக்காகியுள்ள விடயங்கள் தொடர்பில், அமைச்சர் சமல் ராஜபக்ஷ அவர்கள் உள்ளிட்ட அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் முன்வைத்த பிரச்சினைகள் மற்றும் யோசனைகள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

பாராளுமன்றத்தின் பொதுச் செயலாளர் தம்மிக தசநாயக்க, பாதுகாப்புச் செயலாளர் கமல் குணரத்ன, முப்படைகளின் தளபதிகள் மற்றும் பொலிஸ் மா அதிபர் உள்ளிட்ட பாதுகாப்பு அமைச்சின் கீழ் காணப்படும் நிறுவனங்களின் அதிகாரிகள், இக்கலந்துரையாடலில் கலந்துகொண்டிருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.