தமிழ் மக்களது கனத்தில் முத்தமிடத் துடிக்கும் சீனா – ஜீவன்

சீனாவை , சிங்கள மக்கள் ஆரம்பத்தில்  பெரிது படுத்தவில்லை. பெரும் காலதாமதத்தின் பின் சிங்கள மக்கள் சீனா குறித்து விழிப்படைந்துள்ளனர். அவர்களது எதிர்ப்பு காரணமாக , இப்போது சிங்கள பகுதிகளை விட்டு சீனா பின்வாங்கி விட்டது.

மலக்கழிவு உரக் கப்பல் பிரச்சனைதான்  விசுவரூபம் எடுத்தது. இலங்கை வங்கியை பிளாக் லிஸ்ட் பண்ணப் போவதாக வெருட்டியது சீனா. சீனாவுக்கு கடும் எதிர்ப்பு மேலோங்கத் தொடங்கியது. நீதிமன்றமும் , பாராளுமன்ற கெபினட்டும் மலக்கழிவு உரக் கப்பலுக்கு நட்ட ஈடு கொடுக்கச் சொன்னாலும் , அநேகர் அதிற்கெதிராகவும்   குரல் கொடுக்க தொடங்கினார்கள்.

அதன்பின் சீனா அரசுக்கு உதவுவதை நிறுத்திக் கொண்டது. சீனா சிங்கள பகுதிகளில் வெறுப்புக்கு ஆளாகி வருவது கண்முன் தெரியும் காட்சியாகியுள்ளது.

அவர்களது அடுத்த பார்வையாக,  தமிழ் பகுதிகளுக்குள் ஊடுருவத் தொடங்கியுள்ளனர். உதவி அல்லது கடன் கொடுப்பது என  எப்படி வந்தாலும் , சீனா லாபமில்லாமல் உதவாது. பல வருட திட்டத்தால் தமிழ் பகுதிகளை சீனா அபகரிக்க கன்னம் வைத்துவிட்டது போல் உள்ளது எனத்தான் சொல்லத் தோன்றுகிறது.

சீனாவிடம் வாங்கிய கடன்களால்தான் இலங்கை திவாலாகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. ஒன்று கடனை திருப்பி தா அல்லது அந்த பகுதியை எழுதி தா என சீனா கேட்கத் தொடங்கியிருப்பதுதான் இன்று பிரச்சனை.

இதே நிலை தமிழ் பகுதிகளுக்கும் வரும் சாத்தியம் உண்டு . உதவிய பின் , கடனை அடைக்க முடியாவிடில் அவர்கள் முக்கியமான சில பகுதிகளை தனதாக்கிக் கொள்ள முயலலாம். அப்படித்தான் அவர்கள் ஒப்பந்தங்களை செய்கிறார்கள். இது சற்று ஆபத்தானது.
வடக்கில் முக்கிய தாது பொருட்களும் , எண்ணையும் உட்பட பல கனிம வளங்கள் நிறைந்திருப்பதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்க பணியகம் தெரிவித்துள்ளது.

264.93 மெற்றிக் தொன் கனியவளம் மன்னார் பகுதியில் இருப்பதோடு, அவற்றில் குறிப்பாக இல்மனைற் போன்ற விலை உயர்ந்த கனிய வளங்கள் தவிர ஆகாய விமானங்கள் தயாரிக்க பயன்படும் தைத்தானியம் உள்ளதாகவும் கண்டுபிடிக்கப்பட்டது.

இவை இப்படி இருக்க , சீனா தொடர்ந்து இலங்கையை கடனாளி நாடாக்கி வைத்துள்ளது. அவர்கள் கொடுக்கும் கடனுக்காக சீனாவுக்கு பொருட்களை ஏற்றுமதி செய்து அடைக்க முடியாது. பணமாகத்தான் திருப்பி செலுத்த வேண்டும். அல்லது இலங்கையில் அவர்கள் கேட்கும் சொத்து ஒன்றை எழுதிக் கொடுக்க வேண்டும்.
நுரைச்சோலை அனல் மின் நிலையம் அவர்களது குறியாக இருந்து வருகிறது. சீனாவில் இரும்பு கடைக்கு வீச இருந்த பழையதொரு அனல் மின் நிலையத்தை ,  நுரைச்சோலை அனல் மின் நிலையமாக உருவாக்கி  இலங்கைக்கு கொடுத்து , இலங்கையை கடனாளியாக்கிவிட்டது சீனா.   அது பழையதொரு அனல் மின் நிலையமென்பதால்தான் ஆரம்பித்த நாள் தொட்டு , பழுதடைந்து வருவதற்கு காரணம். புதியதொரு பழையதொரு அனல் மின் நிலையமாக இருந்திருந்தால் இந்தளவு பிரச்சனை தராது.

அந்த கடனை கொடுக்க இடைத்தரகர்களுக்கு சீனா பெரும் தொகைகளை லஞ்சமாக கொடுத்தது. மகிந்த குடும்பத்தினரும் , அதற்கு உதவியவர்களுக்கும் சீனா கள்ளத்தனமாக கொட்டிக் கொடுத்திருக்கிறது.

லஞ்சம் கொடுத்து கடன் கொடுக்கும் மிக முக்கிய நாடுகளில் சீனா முதலாவதாக உள்ளது. சீனாவில் உள்ள பணத்தை என்ன செய்வதென்று அவர்களுக்கே தெரியவில்லை. யுத்தம் செய்யாது நாடுகளை ஆக்கிரமிக்கும் நாடு சீனாதான். இப்படித்தான் அம்பாந்தோட்டை மற்றும் கொழும்பு ஆகிய இடங்களில் பல இடங்களை வளைத்து போட்டுக் கொண்டது. அவற்றிலிருந்து மீள முடியாது. லாபம் வரவே வராத இடங்களுக்கு கடன் கொடுத்து , அந்த இடத்தை வசப்படுத்திக் கொள்வது சீன உத்தி.

உதாரணமாக 2019ஆம் ஆண்டு சீன இறக்குமதிகளுக்காக இலங்கை 4.08 பில்லியன் அமெரிக்க டொலர்களை செலவிட்டுள்ளது. ஆனால் இலங்கையின் ஏற்றுமதிக்காக சீனா 391 மில்லியன் டொலர்களையே செலுத்தியுள்ளது. இதனால், 3.67 பில்லியன் டாலர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. கிட்டத்தட்ட ஒவ்வொரு வருடமும் இதுதான் நிலைமை. இதுபோன்ற நிலையால் நாடு கடனாளியாகும்.

இப்போது $ 3.67 பில்லியன் பற்றாக்குறை உள்ளது, ஆனால் உண்மையில் இது 24 பில்லியன் யுவான் பற்றாக்குறையாகும், இது டாலர்களாக மாற்றப்படுகிறது. சீனாவிடம் இருந்து இலங்கைக்கு யுவான் கிடைக்காவிட்டால் , யுவானை பெற வேறு வழியில்லை. யுவானுக்குப் பதிலாக ஆடைகள் உள்ளிட்ட பொருட்களை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்தும், பல்வேறு மூலங்களிலிருந்து பெறும் டாலர்களை சீனாவின் கடன்களை செலுத்தும் வகையில் ,  நீண்ட காலமாக இலங்கை செயல்பட்டு வருகிறது.

சீனாவிற்கு டாலர்களை குவிக்க வேண்டிய அவசியம் இல்லை, ஆனால் சீன பொருட்களை விற்க வேண்டும். சீன யுவான் மதிப்பு குறைந்துள்ள அளவுக்கு மட்டுமே சீன பொருட்களை வெளிநாடுகளில் விற்க முடியும். அதாவது, மற்ற கரன்சிகள் அதிகமாக மதிப்பிடப்படும் அளவிற்கு. மற்ற கரன்சிகளை அதிகமாக மதிப்பிட வேண்டுமானால், அந்த கரன்சிகளை வாங்கி செயற்கையாக தேவையை அதிகரிக்க வேண்டும். இதைத்தான் மறைமுகமாக சீனா நீண்ட காலமாக அமெரிக்காவிடம் செய்து வருகிறது.
சீனா யுவானைக் கொடுத்து அமெரிக்காவிடமிருந்து டாலர்களை வாங்குகிறது. இதன் விளைவாக, டாலர் உயர்கிறது மற்றும் சீன பொருட்கள் ,  அமெரிக்க பொருட்களை விட மலிவானவை. இதனால் அமெரிக்காவில் உற்பத்தித் துறை மூடப்படுகிறது. அமெரிக்க வேலைகள் சீனாவிற்கு செல்கின்றன.

இந்த யுவான்களை அமெரிக்கா பயன்படுத்தாததால், அமெரிக்கா யுவானை சீனாவிடம் திருப்பி கொடுத்து சீனாவிடம் இருந்து பொருட்களை வாங்குகிறது. ஆனால், சீனா அமெரிக்க பொருட்களை டாலரில் வாங்குவதில்லை, அப்படி சேகரித்து வைப்பதற்காக. அதை வைத்துக் கொள்வதால் ஏற்படும் நஷ்டம் காரணமாக சீனா அமெரிக்காவில் சிறிய வட்டிக்கு முதலீடு செய்கிறது. சீனாவுடனான வர்த்தகத்தில் இருந்து அமெரிக்கா நஷ்டமடைகிறது, ஆனால் குறைந்த வட்டி விகிதத்தில் நிதியைப் பெறுகிறது. சீனாவில் இருந்து பணம் வந்தாலும் அதற்கான வட்டியை அமெரிக்கா தான் தீர்மானிக்கிறது.

இதுவரை அமெரிக்காவிலிருந்தோ அல்லது வேறோர்நாட்டிலிருந்தோ சம்பாதித்த டொலர்களைத்தான் , இலங்கை சீனாவிற்கு திரும்ப கொடுக்க வேண்டிய கடனாக செலுத்தி வருகின்றது. சம்பாதித்த டாலர்கள் போதாதென்று பெரும் வட்டிக்கு வேறு நாடுகளிடமிருந்தும் கடனாக வாங்கி ,  சீனாவிடம் கொடுக்கப்படுகிறது.

இப்போது இலங்கை கடன் வாங்கவே முடியாமல் திணறுகிறது. டொலரின் பெறுமதி வீழ்ச்சியடைவதை தடுப்பது மிகவும் கடினமானது எனவும் எதிர்காலத்தில் ரூபாவின் பெறுமதி பாரியளவில் வீழ்ச்சியடையலாம் எனவும் அரசாங்க அமைச்சர் ஒருவர் அண்மையில் தெரிவித்திருந்தார்.

ரூபாய் மதிப்பு சரிந்தால் சீனாவின் கதி என்ன? சீனப் பொருட்களின் விலை இலங்கை ரூபாயில் அதிகரிக்கும். அதனால் இலங்கையில் சீன பொருட்கள் விற்பனை நிறுத்தப்படும். இலங்கையில் இருந்து சீனாவிற்கு வருடாந்த கப்பத்தில் சீனா 24 பில்லியன் யுவான்களை இழக்கிறது.

எனவே, இலங்கை ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைவதைத் தடுக்க சீனா இப்போது விரும்புகிறது. இலங்கையில் உள்ள கொள்கை வகுப்பாளர்கள் அதை நோக்கிச் செயல்படுவதால் சீனாவுக்கு இது மிகவும் எளிதானது. அமெரிக்காவுடன் கையாள்வது போன்ற எந்த அழுத்தமும் சீனாவுடன் இல்லை. சீனாவுக்குத் தேவை , ரூபாயின் பெறுமதியை வலுப்படுத்துவதுதான். இலங்கையும் அதையேதான் விரும்புகிறது.

சீன யுவானை கொடுத்து ,  அமெரிக்க டொலரை வாங்கி சில காலம் அமெரிக்க டொலரின் பெறுமதி வீழ்ச்சியை விழ விடாது சீனா தடுத்து உதவியது போன்று , தற்போது சீனா இலங்கை ரூபாயை வாங்கியுள்ளது.

பெறுமதியற்ற இலங்கை ரூபாயை எடுத்துக்கொண்டு ,  10 பில்லியன் யுவான்களை இலங்கைக்கு சீனா வழங்கியுள்ளது. இலங்கையிடமிருந்து பெற்ற ரூபாயில் , இலங்கையில் உற்பத்தியாகும்  பொருட்களை சீனா ஒருபோதும் வாங்கப் போவதில்லை. இதை மூன்று வருடங்கள் மட்டுமே பாதுகாப்பாக வைக்கும்.

மூன்று வருடங்களுக்குப் பின்னர் இலங்கை , கடனாகப் பெற்ற 10 பில்லியன் யுவானுடன் வட்டியைச் சேர்த்து சீனாவுக்குத் திருப்பிக் கொடுப்பதன் மூலம் , அந்த ரூபாயை திரும்ப பெற வேண்டும். மூன்று வருடங்களின் பின்னர் யுவான்களை கொடுத்து ,  கொடுத்த ரூபாய்களை பெறுவதற்கு இலங்கைக்கு வழி உள்ளதா? ஒருவேளை அந்த கடனுக்கு ஈடாக சீனா,  மதிப்புள்ள ஏதாவது சொத்து ஒன்றை இலங்கையிடமிருந்து பெற முயலும்.

இப்படித்தான் உகண்டாவின் தலைநகர் கம்பாலாவில் உள்ள அந்நாட்டின் ஒரே ஒரு சர்வதேச விமான நிலையமான என்டபே விமான நிலையத்தை சீனாவின் எக்சிம் வங்கி கையகப்படுத்தியுள்ளது.

கடந்த 2015 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் உகண்டா அரசாங்கம், எக்சிம் வங்கியிடம் 207 மில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாக பெற்று விமான நிலையத்தை விரிவுப்படுத்தி அபிவிருத்தி செய்துள்ளது.

எனினும் சீன வங்கியிடம் பெற்ற கடனை உகண்டா அரசாங்கத்தினால் திருப்பிச் செலுத்த முடியவில்லை. இதன் காரணமாக விமான நிலையம், சீனாவின் எக்சிம் வங்கியின் கடனுக்குள் மூழ்கியுள்ளது.

என்டபே விமான நிலையத்தை விரிவுப்படுத்த உகண்டா ஜனாதிபதி யோவேரி முசவேனியின் அரசாங்கம் 7 வருட நிவாரண காலம் மற்றும் 20 வருடங்களில் செலுத்தி முடிக்கும் நிபந்தனையின் கீழ் இந்த கடனை பெற்றிருந்தது எனக் கூறப்படுகிறது.

எனினும் உகண்டாவின் பொருளாதாரம் கடுமையாக வீழ்ச்சியடைந்தது.

இந்த நிலையில், ஜனாதிபதி முசவேனி அரசாங்கத்தின் பிரதிநிதிகள், சீன அரச அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி, கடன் நிபந்தனைகளை திருத்த முயற்சிகளை மேற்கொண்ட போதிலும் அது தோல்வியடைந்துள்ளது.

கடன் நிபந்தனைகளை மாற்ற எக்சிம் வங்கி மறுத்து விட்டது. இதன் காரணமாக என்டபே விமான நிலையம் மற்றும் அதன் சொத்துக்களை சீன வங்கிக்கு வழங்க நேரிட்டுள்ளதுதாக தெரிவிக்கப்படுகிறது.

மீண்டும் இலங்கை பிரச்சனைக்கு வருவோம்.

உண்மையில் இலங்கைக்கான பத்து பில்லியன் யுவான்கள் இலங்கைக்கு இப்போது கிடைக்குமா? அதுவும் கிடைக்காது. உண்மையில் நடப்பது என்னவெனில், இலங்கையின் வருடாந்த கப்பம் 24 பில்லியன் யுவான்,  சீனாவின் 14 பில்லியன் யுவானாகக் குறைக்கப்பட்டுள்ளது. அதாவது இந்தப் பணமும் இலங்கைக்கு வராது.

தற்போது சீனாவுக்கு 24 பில்லியன் யுவான்களை  கப்பமாகக் கூட செலுத்த,  இலங்கைக்கு வழியில்லை. செலுத்த  இலங்கையிடம் டாலர்கள் எங்கே? இதன் விளைவாக மீட்கும் தொகை சுமார் 14 பில்லியன் யுவானாகக் குறைக்கப்படும். சீனா இப்போது அதன் வேலையிலிருந்து 24 பில்லியன் யுவான்களைப் பெறுகிறது. அதில் 10 பில்லியன் யுவான் ரூபாயில் வருகிறது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், இலங்கை மத்திய வங்கியில் இருந்து 300 பில்லியன் ரூபாவுக்கும் அதிகமான பணம் சீன மத்திய வங்கிக்கு செல்கிறது.

இலங்கையில் பண விநியோகத்தை இலங்கை மத்திய வங்கி கட்டுப்படுத்துகிறது. அதன் ஊடாக ரூபாவின் பெறுமதியை இலங்கை மத்திய வங்கி தீர்மானிக்கின்றது. வேறொரு நாட்டில் உள்ள மத்திய வங்கியினால் இலங்கை ரூபாயை அச்சிட முடியாது. அந்த உரிமை இலங்கை மத்திய வங்கிக்கு மட்டுமே உண்டு.

ஆனால் இப்போது சீன மத்திய வங்கியிடம் கூட இலங்கை பணம் 300 பில்லியன் ரூபாய் உள்ளது. ரூபாயை அச்சடிக்க முடியாவிட்டாலும், அந்த பணத்தை சந்தையில் வைப்பதன் மூலம், சென்ட்ரல் பேங்க் ஆப் சீனாவால், ரூபாயின் மதிப்பை கட்டுப்படுத்த முடியும். அந்த வகையில் இலங்கையில் நாணயக் கொள்கை உருவாக்கம் சீனாவின் கைகளுக்கு போய்,  ரூபாயின் பெறுமதி , அவர்கள் நினைக்கும் ரூபாய் பெறுமதியாக மாறுமா?

இலங்கையின் விதியை சீனாதான் தீர்மானிக்க வேண்டி வரும் என,   சொல்லும்  காலம் தொலைவில் இல்லை.

இப்படியான ஒரு தருணத்தில் சீனா வடக்குக்கு உதவவும், கடன் கொடுக்கவும் என ஒரு விசட் அடித்து , நல்லூர் கந்தனுக்கே பெரிய கவர் (லஞ்சம்) கொடுத்து , விளையாட்டை ஆரம்பித்துள்ளது.

சில தமிழ் அரசியல்வாதிகளும் , தமிழர்களும் சீனா கொட்டிக் கொடுக்கப் போகிறது என மகிழ்வதும் தெரிகிறது. இப்படித்தான் மகிந்த காலத்தில் மகிழ்ந்தனர். அம்பாந்தோட்டை மத்தளை விமான நிலையம் , துறைமுகம் என வாயை பிளந்து பேசியோர் , இன்று வாயடைத்து போய் நிற்கிறார்கள்.

தென் பகுதியில் சில முக்கியமான இடங்களை சீனா பிடித்தாயிற்று. மீதமிருப்பது வடக்கு – கிழக்குதான்.

தாய் நாட்டை மீட்டதாக சொன்ன சிங்கள சமூகம் நாட்டை விற்று , மீதியை விற்கும் நிலைக்கு வந்து விட்டது.

தாயக மீட்புக்காக என மக்களை பலி கொடுத்த தமிழ் சமூகமும் , உதவியையும் , லஞ்சத்தையும் பெற்று கடனை வாங்கிக் கொண்டு சுவடே தெரியாது தமிழ் நிலங்களை சீனாவுக்கு தாரை வார்த்து கொடுத்து விடும் அபாயம் ஒன்று கண்ணில் தெரிகிறது என இப்போதே சொல்லி ஆகவேண்டும்.

அது புரியாத சில தமிழ் கருத்தாளர்கள் , சீனா யாழ் வந்ததை , அன்று பொட்டலம் போட்ட இந்திய விமானங்களை பார்த்து குதூகலித்தவர்கள் போலவும் , இந்திய சமாதான படை வந்த போது மாலை போட்டு மகிழ்ந்தவர்கள் போலவும்  , மகிழ்ச்சி ஆரவாரத்தில் இருக்கிறார்கள்.

இப்படியானவர்களது பரப்புரைகள்தான் இந்தியா பெற்றுக் கொடுத்ததை இல்லாமல் செய்து கொள்ளவும் , இந்தளவு மக்களது அழிவுக்கும் காரணமாகியது.

இந்தியாவின் தேவை , இலங்கையை தமது பிராந்திய கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் என்பதாக இருந்தது. சீனாவின் தேவை,  இலங்கையின் மிக முக்கியமான தளப்பிரதேசங்கள் தம்மிடம் இருக்க வேண்டும் என்பதேயாகும்.

இவற்றை காலம் கழிந்து சொல்வதால் பிரயோசனமில்லை. இப்படியான சீன நகர்வுகளை  ஶ்ரீலங்கா அரசும் இதை தடுக்காது. அந்த சக்தி இன்றைய அரசிடமும் இல்லை. அவர்களே பாக்கு வெட்டிக்குள் அகப்பட்ட பாக்கு போல அகப்பட்டு திணறிக் கொண்டிருக்கும் நிலையில் , இலங்கையில் நடக்கும் ,  சீன நகர்வுகளை எதிர்க்க ஶ்ரீலங்கா அரசுக்கே பலமில்லை.

சில சிங்கள புத்திசீவிகள் கலைச்சுதான் சீன மலத்தோடு வந்த உரக் கப்பலே திரும்பியது. அதற்கும் பெரியதொரு நட்ட ஈட்டை இலங்கை செலுத்த வேண்டிய நிலை. அந்த கப்பல் இலங்கை முழுவதும் சுற்றி மலத்தை கொட்ட படாத பாடு பட்டது அனைவரும் அறிந்த விடயம். இலங்கை வங்கியை பிளெக் லிஸ்ட் பண்ணுவதாக சீனா அறிவித்த போதும் சில புத்திசீவி சிங்களவர்கள் பின்வாங்கவில்லை. மகிந்த தரப்பில் அநேகர் மல உரக் கப்பலை இறக்க படாத பாடு பட்டார்கள். மக்கள் விடவில்லை.

என்ன நடந்தாலும் மல உரக் கப்பலை இறக்க விடுவதில்லை என அரசுக்கு வெளியே இருந்து பலமான  தாக்குதல் அவர்களால் தொடுக்கப்பட்டது. அந்த கப்பலில் வந்த மலம் மட்டும் ஒருமுறை இறங்கியிருந்தால் , தொடர்ந்து சீன கழிவுகள் அனைத்தையும் இலங்கைக்குள் கொட்டி  விற்று,  அதிலும் சீனா காசு பார்த்திருக்கும்.

சிங்கள மக்கள் தாமதமாகி ,  சீனாவை இப்போதுதான் எதிர்க்கவே ஆரம்பித்துள்ளார்கள். அதனால் சினம் கொண்ட சீனா , ஶ்ரீலங்காவை முன்னிருந்த நிலையிலிருந்து கை விட்டு விட்டது.

கடைசியாக மகிந்த உதவி கேட்ட போது  சீனா சொன்னது ” இலங்கையின் கடன் சுமையை தீர்க்க , கடனாக பணம் தரலாம். ஆனால் அதை செலவழிக்க முடியாது. வங்கி வைப்பில் வைத்திருக்க மட்டுமே முடியும்” என்பதாகும்.

இது பசியோடு இருப்பவன் கையில் உணவை கொடுத்து ” நீ கையில் வைத்திருக்கலாம். சாப்பிட முடியாது” என்பது போல ஒரு மோசமான கட்டளை.

இப்படியாக சீனா, ஶ்ரீலங்காவை கைவிட்டு விட்ட , கடைசி நேரத்தில்தான் இலங்கை அரசுக்கு , இந்தியா என்ற பக்கத்து வீட்டுகாரனின் காலடி மண்ணை தொட வேண்டி வந்தது. இந்தியா , இலங்கைக்கு , ஒரு உதவி பெக்கேஜ் திட்டத்தை கொண்டு வந்து உதவப் போவதாக தெரிவித்துள்ளது. அது எப்போது என்பது இதுவரை சரியாக தெரியவில்லை.

இன்று ஶ்ரீலங்கா அரசு விழி பிதுங்கிப் போய் ,  படும் இதே அல்லலை , தமிழ் பகுதியும் எதிர்காலத்தில் அனுபவித்திருக்காதிருக்க , சிந்திக்க வேண்டிய தருணம் இது.

தமிழ் தலைவர்கள் என சொல்லிக் கொள்வோர் என்ன செய்யப் போகிறார்கள்?

– ஜீவன்

Leave A Reply

Your email address will not be published.