அழுத்தங்களை மக்கள் தாங்கத் தயார் என்றால் சர்வதேச நாணய நிதியத்தை நாட அரசும் தயார்.

சர்வதேச நாணய நிதியம் முன்வைக்கும் யோசனைகளின் அழுத்தங்களை மக்கள் தாங்கிக் கொள்ளத் தயாராக இருப்பார்களாக இருந்தால் சர்வதேச நாணய நிதியத்திடம் செல்ல அரசு தயாராக இருக்கின்றது என வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் மேலும் தெரிவித்த அவர்,

“பொருளாதாரம் வளர்ச்சிப் பாதையில் சென்ற நாட்டையே நாம் 2014ஆம் ஆண்டு ஒப்படைத்தோம். எனினும், அதன் பின்னர் ஆட்சிக்கு வந்த நல்லாட்சி அரசு நாட்டின் பொருளாதாரத்தை வீழ்ச்சியடையச் செய்தது.

சர்வதேச நாணய நிதியத்துக்கு செல்ல வேண்டும் என்கிறார்கள். கடந்த அரசும் அங்கு சென்று கடனைப் பெற்றுகொண்டதால் எரிபொருள் விலை சூத்திரம், எரிவாயு, பால்மாக்கள் உள்ளிட்ட பொருள்களின் விலைகள் கடந்த அரசில் அதிகரித்தன.

மக்கள் விரும்பினால் சர்வதேச நாணய நிதியத்திடம் செல்வதில் அரசுக்குப் பிரச்சினைகள் இல்லை. 16 தடவைகள் சர்தேச நாணய நிதியத்திடம் சென்றிருக்கிறோம். குறிப்பாக நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு குறையும்போது 11 தடவைகள் சர்தேச நாணய நிதியத்தின் உதவியை நாடியிருக்கின்றோம்.

இறுதியாக ஐக்கிய தேசியக் கட்சி சர்வதேச நாணய நிதியத்திடம் சென்றிருந்தது. இதனால் 2016 – 2019ஆம் ஆண்டு வரையில் சர்வதேச நாணய நிதியத்தின் பிடியிலேயே இலங்கை இருந்தது.

சர்வதேச நாணய நிதியம் முன்வைக்கும் யோசனைகள் சரியானதே. எனினும், இலங்கை போன்ற நாடுகளில் அந்த யோசனைகளை நடைமுறைப்படுத்தும்போது மக்கள் பாரிய அழுத்தங்களுக்கு முகங்கொடுக்க வேண்டிய நிலை ஏற்படும். எவ்வாறாயினும் மக்கள் இந்த அழுத்தங்களை ஏற்றுக்கொள்ளத் தயாராக இருப்பார்களாக இருந்தால் நாணய நிதியத்திடம் செல்ல அரசு தயாராக இருக்கின்றது” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.