நன்கொடைகளை ஏற்க வேண்டாம்’ என அரச பாடசாலை நிர்வாகத்திற்கு கல்வி அமைச்சு அறிவிப்பு..
“நாட்டில் உள்ள 2022 ஆம் ஆண்டுக்கான பிரபலமான மற்றும் முன்னணி அரச பாடசாலைகளில் தங்கள் பிள்ளைகளை சேர்க்க வரும் பெற்றோர்களிடம் தேவையற்ற நன்கொடையோ நிதியோ வசூலிக்கக் கூடாது” என்று கல்வி அமைச்சு அனைத்து அரச பாடசாலை நிர்வாகத்திற்கும் சுற்றறிக்கையில் அனுப்பியுள்ளது.
நாடு முழுவதும் உள்ள அரச பாடசாலைகளில் மாணவர்களைச் சேர்ப்பதற்காக லஞ்சம் (சட்டவிரோதமான நன்கொடைகள்) பெற்றதற்காக சுமார் 36 நிர்வாகிகள் கடந்த ஆண்டு இடைநிறுத்தப்பட்டனர்.
இந்த வருடமும் மாணவர்களை உள்வாங்குவதற்கு பெற்றோரிடம் இலஞ்சம் பெற முற்பட்டமை தொடர்பில் இதுவரை கல்வி அமைச்சு மற்றும் வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கு 800 எழுத்துப்பூர்வமான முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. இருப்பினும், இந்த நோக்கத்திற்காக பெற்றோரிடம் லஞ்சம் கேட்டதற்காக சுமார் மூன்று பாடசாலை அதிபர்கள் இப்போது போலீஸ் காவலில் உள்ளனர்.
எனவே, பெற்றோர்கள் தேவையற்ற நன்கொடைகளை வழங்க வேண்டாம் என்றும், நிர்வாகத்தின் இத்தகைய முறைகேடுகள் குறித்து உண்மையான தகவல்கள் இருந்தாலோ, பெற்றோர்கள் லஞ்சம் வழங்குமாறு வற்புறுத்தப்பட்டாலோ அல்லது துன்புறுத்தப்பட்டாலோ கல்வி அமைச்சு அல்லது இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவுக்கு அறிவிக்குமாறு கல்வி அமைச்சு கேட்டுக்கொள்கிறது.
பெற்றோர்கள் தமது பிற்ளைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு நாட்டின் முன்னணி அரச பாடசாலைகளில் தங்கள் குழந்தைகளைச் சேர்க்கிறார்கள். இந்த நாட்டில் அனைத்து மாணவர்களும் இதுவரை ஆறு தசாப்தங்களுக்கு மேலாக அரச பாடசாலைகளில் இலவச கல்வி உரிமைகளை பெறத் தகுதி பெற்றுள்ளனர்” என குருநாகலில் சிரேஷ்ட கல்விப் பணிப்பாளர் டபிள்யூ.எம்.பாலசூரிய தெரிவித்தார்.