தொடரும் ஊடக அடக்குமுறை : சுவிசிலிருந்து சண் தவராஜா

கொரோனாப் பெருந் தொற்று தொடர்பான துயரத்தில் உலகமே ஆழ்ந்திருந்த கடந்த வருடத்தில் மனதுக்கு மகிழ்வூட்டும் செய்தியும் ஒன்று வெளியாகியுள்ளது. சமூகத்தின் நான்காவது தூண் என அறியப்படும் ஊடகர்களின் மரணம், முன்னைய ஆண்டுகளை விடவும் கடந்த வருடத்தில் குறைவடைந்துள்ளது என்னும் செய்தி மகிழ்வுதரும் ஒன்றாக இருப்பினும் ஊடக அடக்குமுறை அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்து இருந்தது என்பதை மறுப்பதற்கில்லை. அதேவேளை, கைது செய்யப்பட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ள ஊடகர்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.

உலகில் உள்ள ஊடகர் நலன்பேணும் அமைப்புகள் பலவும் ஊடக அடக்குமுறை தொடர்பான விடயங்களில் அக்கறை கொண்டு செயற்பட்டு வருகின்றன. சர்வதேச அளவில் செயற்பட்டுவரும் இத்தகைய நிறுவனங்கள் ஊடக அடக்குமுறைக்கு எதிராகக் குரல்தரும் அதேவேளை, ஊடக அடக்குமுறையில் ஈடுபடும் அரசாங்கங்களுக்கு எதிராகக் கண்டனங்களையும் பதிவு செய்து வருகின்றன. அத்தோடு அடக்குமுறைக்கு ஆளாகும் ஊடகர்கள் தொடர்பிலான தகவல்களைத் தொகுத்து அவற்றை ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட உலக மன்றங்களிடம் ஆண்டுதோறும் கையளித்தும் வருகின்றன.

அத்தகைய அமைப்புகளுள் ஒன்றான எல்லைகடந்த ஊடகர் அமைப்பின் தகவல்களின் பிரகாரம் கடந்த வருடத்தில் உலகம் முழுவதும் 46 ஊடகர்கள் கொலை செய்யப்பட்டுள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கையானது குறித்த அமைப்பு பதிவுகளை மேற்கொள்ள ஆரம்பித்த 1995ஆம் ஆண்டு முதலான புள்ளி விபரங்களோடு ஒப்பிடுகையில் மிகக் குறைந்த எண்ணிக்கை என்பது குறிப்பிடத்தக்கது.
2021 யனவரி முதல் டிசம்பர் வரையான காலப்பகுதியில் புள்ளிவிபரங்களைத் திரட்டியுள்ள மற்றொரு ஊடகர் நலன்பேணும் அமைப்பான ஊடகர்களைப் பாதுகாப்பதற்கான குழு (Committee to Protect Journalists) வின் தகவல்களின் பிரகாரம் இக்காலப் பகுதியில் கொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களில் 24 பேர் அவர்கள் ஆற்றிய ஊடகப் பணிக்காகவே கொல்லப்பட்டமை உறுதி செய்யப்பட்டுள்ளது. மீதி 18 பேரும் ஊடகப் பணியின் காரணமாகவே கொல்லப்பட்டார்கள் என்பது முறையாக உறுதி செய்யப்படவில்லை. இவர்களில் 20 பேர் ஆசிய – பசுபிக் பிராந்தியத்திலும், 10 பேர் அமெரிக்கப் பிராந்தியத்திலும், 08 பேர் ஆபிரிக்கக் கண்டத்திலும், அறுவர் ஐரோப்பாவிலும், மத்திய கிழக்கு – அரபுப் பிராந்தியத்தில் ஒருவருமாகக் கொல்லப்பட்டுள்ளனர். ஊடகர்களின் பெரும்பாலான கொலைகளுக்கு அரசாங்கமும் அதன் ஆதரவுக் குழுக்களுமே காரணமாக உள்ளன. சில இடங்களில் குறிப்பாக மெக்சிகோ போன்ற நாடுகளில் ஆயுதக் குழுக்களே ஊடகர்களைக் கொலை செய்வதில் முன்னிலை வகிக்கின்றன.

தனித்தனி நாடுகளாக நோக்கும் போது ஆப்கானிஸ்தானிலேயே அதிக எண்ணிக்கையான ஊடகர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். இங்கு கடந்த வருடத்தில் 9 ஊடகர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். இரண்டாம் இடத்தில் உள்ள மெக்சிகோவில் 8 ஊடகர்களும், மூன்றாம் இடத்தில் உள்ள இந்தியாவில் 4 பேரும், நான்காம் இடத்தில் உள்ள பாகிஸ்தானில் மூவரும் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

1992ஆம் ஆண்டு முதல் 2021 டிசம்பர் 01 வரையான காலப்பகுதியில் உலகம் முழுவதும் 1,440 ஊடகர்கள் கொலையுண்டுள்ளதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. முறைசார் வகையில் பணியாற்றிய ஊடகர்களின் பதிவுகள் மாத்திரமே இவை. முறைசாரா வகையில் பணியாற்றிய ஊடகர்களினதும், ஊடகப் பணியாளர்களினதும் எண்ணிக்கை இதைவிடப் பல மடங்கு அதிகமாக இருக்கலாம் என்பது சிறி லங்கா போன்ற ஒரு நாட்டில் வாழும் ஒருவரால் இலகுவில் ஊகிக்கக் கூடியதே.
கடந்த வருடத்தில் ஊடகர்களின் கொலைகள் குறைவடைந்திருப்பதற்கான காரணங்களையும் ஊடக அமைப்புகள் முன்வைத்துள்ளன. கடந்த வருடத்தில் உலகெங்கும் ஆயுத மோதல்கள் குறைவடைந்திருந்தமையால் அவை தொடர்பான செய்திகளைச் சேகரிக்க மோதல் பிரதேசங்களுக்கு ஊடகவியலாளர்கள் செல்ல வேண்டியிருக்கவில்லை. அது மாத்திரமன்றி, சவூதி அரேபிய ஊடகரான ஜமால் கசோக்கி, 2018ஆம் ஆண்டில் துருக்கியில் உள்ள தூதரகத்தில் வைத்துப் படுகொலை செய்யப்பட்ட செய்தி ஏற்படுத்திய அதிர்வலைகளும் 2021 இல் ஊடகர் படுகொலைகள் குறைந்தமைக்கு ஒரு காரணம் என்கின்றன அந்த அமைப்புகள்.

அதேவேளை, கடந்த வருடத்தில் மாத்திரம் 108 ஊடகர்கள் உலகம் முழுவதும் கைது செய்யப்பட்டு சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களோடு ஏலவே சிறையில் வாடும் ஊடகர்களையும் சேர்த்து மொத்தம் 293 பேர் சிறைகளில் உள்ளனர். 1992ஆம் ஆண்டு முதல் உலகளாவிய அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டுவரும் பதிவுகளோடு ஒப்பிடுகையில் இதுவே மிகவும் அதிகமான எண்ணிக்கை என்பது குறிப்பிடத்தக்கது. 2020இல் இந்த எண்ணிக்கை 280 ஆக இருந்தது. இதேவேளை, கடந்த வருடத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஊடகர்களில் 40 பேர் பெண்கள் என்பது கூடுதல் தகவல். இது மொத்த எண்ணிக்கையில் 14 விழுக்காடு ஆகும்.

ஊடகர்களைப் பாதுகாப்பதற்கான குழுவின் தகவல்களின் பிரகாரம் அதிக எண்ணிக்கையான ஊடகர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நாடாக சீனா உள்ளது. இங்கே 50 ஊடகர்கள் சிறை வைக்கப்பட்டுள்ளனர். இரண்டாமிடத்தில் சீனாவின் அயல்நாடான மியன்மார் உள்ளது. இராணுவ ஆட்சி நிலவும் இந்த நாட்டில் 26 ஊடகர்கள் சிறையில் உள்ளனர். மூன்றாமிடத்தில் உள்ள எகிப்தில் 25 ஊடகர்களும், நான்காம் இடத்தில் உள்ள வியட்நாமில் 23 பேரும், ஐந்தாம் இடத்தில் உள்ள பெலாரஸில் 19 பேரும் சிறை வைக்கப்பட்டுள்ளனர்.

ஆறாம் இடத்தில் உள்ள துருக்கியில் 18 ஊடகர்கள் இந்தக் காலப்பகுதியில் சிறையில் இருந்தனர். வழக்கமாக ஊடகர்களுக்கு எதிரான அடக்குமுறையில் முன்னிலை வகிக்கும் துருக்கி இம்முறை ஆறாவது இடத்துக்குத் தள்ளப்படக் காரணம், கடந்த வருடத்தில் அந்த நாட்டில் சிறையில் இருந்த 20 ஊடகர்கள் விடுதலை செய்யப்பட்டமையே. அவ்வாறு விடுதலை செய்யப்பட்டவர்கள் முழுச் சுதந்திரம் மறுக்கப்பட்ட நிலையிலேயே நடமாட அனுமதிக்கப்பட்டிருக்கின்றார்கள் என்பது தனிக்கதை.
ஊடகர்களின் வாய்களை மூட அவர்களைக் கொலை செய்வது என்ற நிலைப்பாட்டில் இருந்து அரசாங்கங்களும், ஆயுதக் குழுக்களும் பின்வாங்கியிருப்பது ஒரு நல்ல சேதியே. ஆயினும், ஊடகர்கள் மற்றும் ஊடகங்கள் மீதான அடக்குமுறைகள் பல்வேறு வழிகளில் தொடரவே செய்கின்றன. ஊடகர்களையும் ஊடகங்களையும் மிரட்டுவது, அச்சுறுத்துவது, தாக்குதல்களை மேற்கொள்வது, ஊடகர்களைச் சிறையிலடைப்பது என்பதற்கு அப்பால் ஊடகங்கள் செயற்படும் சாதனங்களை முடக்கும் நடவடிக்கைகளிலும் அரசாங்கங்கள் ஈடுபடுவதைப் பார்க்க முடிகின்றது. சமூக ஊடகங்கள் மலிந்துவிட்ட தற்போதைய காலகட்டத்தில் தமக்கு விருப்பமில்லாத செய்திகள் பரவுவதைத் தடுக்கும் நோக்குடன் இணைய சேவை முடக்குவது ஒரு புதிய போக்காக ஆரம்பித்துள்ளது. பல்வேறு நாடுகளும் இதனை ஊடக அடக்குமுறைக்கான ஒரு கருவியாகப் பாவித்து வருவதைக் காண முடிகின்றது.

மறுபுறம், மக்கள் நலன் பேணும் நோக்குடன் செயற்பட வேண்டிய ஊடகங்கள் ஊடக அறத்தை மறந்து சுயநலத்துடன், ஆட்சியாளர்களின் அடிவருடிகளாகச் செயற்படும் போக்கு அண்மைக்காலமாக அதிகரித்து வருவதைப் பார்க்க முடிகின்றது. சாதாரண சிறிய ஊடகங்கள் முதல் பாரிய ஊடகங்கள் வரை இந்தத் தன்மையைப் பார்க்க முடிகின்றது. அதேவேளை, சமூக ஊடகங்கள் வளர்ச்சி பெற்றுள்ள இன்றைய காகலகட்டத்தில் செய்திகளின் உண்மைத் தன்மை தொடர்பில் அதீத ஐயம் உருவாகியுள்ளமையைiயும் மறுப்பதற்கில்லை.

ஒரு சமூகம் ஜனநாயகத் தன்மையுடன் விளங்க நேர்மையான ஊடகங்கள் அவசியம்.

அத்தகைய நேர்மையான ஊடகங்களைப் பாதுகாக்க வேண்டியது சமூகத்தின் கடமை ஆகும். அதேவேளை, தமது சமூகப் பொறுப்பை உணர்ந்து ஊடகர்களும், ஊடகங்களும் பணியாற்றினால் அனைவருக்கும் வளமான எதிர்காலம் நிச்சயம்.

Leave A Reply

Your email address will not be published.