அமைச்சரவை மறுசீரமைப்பு தாமதம்; ஏமாற்றத்தில் இரண்டு அமைச்சர்கள்!

புதிய ஆண்டின் ஆரம்பத்தில் அமைச்சரவையில் மறுசீரமைப்பு மேற்கொள்ளப்படும் என அரசின் தரப்பில் கூறப்பட்டு வந்தது. எனினும், அது விரைவில் நடக்காது எனக் கூறப்படுகின்றது. இந்தநிலையில், அமைச்சரவை மறுசீரமைப்பு நடக்காத காரணத்தால், இரண்டு அமைச்சர்கள் கடும் ஏமாற்றத்தில் இருந்து வருகின்றனர் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளனன.

வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன மற்றும் விவசாய அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே ஆகியோரை இவ்வாறு ஏமாற்றத்தில் இருக்கின்றனர் எனக் கூறப்படுகின்றது.

இவர்கள் இருவரும் தமக்கு வேறு அமைச்சுக்களை வழங்குமாறு கோரிக்கை விடுத்திருந்தனர் எனப் பேசப்படுகின்றது.

அமைச்சு ஒன்றை மாற்றும்போது கவனத்தில்கொள்ள வேண்டிய விடங்களைப் பந்துல குணவர்தன விபரித்திருந்தார்.

ஓர் அமைச்சர் தற்போது வகித்து வரும் அமைச்சு வெற்றிகரமாக முன்னெடுக்கப்படவில்லை என்றால், அவருக்கு வேறு ஒரு அமைச்சுப் பதவியை வழங்க வேண்டும் எனவும், அமைச்சர் ஒருவர் மோசடியாக நடந்துகொண்டால் அவரை அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டும் எனவும் பந்துல குறிப்பிட்டிருந்தார்.

எனினும், ஓர் அமைச்சர் தனக்கு வழங்கிய அமைச்சுப் பதவியில் வெற்றிகரமாகச் செயற்படவில்லை என்பதால், அவருக்கு வேறு ஓர் அமைச்சுப் பதவியை வழங்கும்போது, அவர் எப்படி வெற்றிகரமாகச் செயற்பட முடியும் என்பதை பந்துல குணவர்தன விளக்கவில்லை.

அதேவேளை, தான் வகிக்கும் கமத்தொழில் அமைச்சர் பதவி காரணமாக 35 ஆண்டுகளாகத் தான் உருவாக்கிய அரசியல் விம்பம் அழிந்து போயுள்ளது என விவசாய அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே குறிப்பிட்டுள்ளார்.

பொருட்களின் விலை அதிகரிப்பு காரணமாக பந்துல குணவர்தனவும், சேதனப் பசளை பிரச்சினை காரணமாக மகிந்தானந்த அளுத்கமகேவும் மக்களின் கடும் விமர்சனங்களுக்கும் நகைப்புக்கும் உள்ளாகியுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.