முதலாவது ஒருநாள் போட்டி: இந்தியா-தென்ஆப்பிரிக்கா அணிகள் இன்று மோதல்..!

இந்திய கிரிக்கெட் அணி தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. டெஸ்ட் தொடரை 1-2 என்ற கணக்கில் பறிகொடுத்த இந்திய அணி அடுத்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. இதன்படி இந்தியா- தென்ஆப்பிரிக்கா இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி பார்ல் நகரில் இன்று (புதன்கிழமை) நடக்கிறது. இதையொட்டி இரு அணி வீரர்களும் நேற்று தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர்.

இந்திய ஒரு நாள் போட்டி அணியின் புதிய கேப்டன் ரோகித் சர்மா தசைப்பிடிப்பால் விலகி இருப்பதால் அவருக்கு பதிலாக லோகேஷ் ராகுல் அணியை வழிநடத்துகிறார். 2023-ம் ஆண்டு உலக கோப்பை போட்டிக்கு அணியை வலுப்படுத்தும் நோக்கில் இந்த தொடரில் சில பரிசோதனை முயற்சிகளை தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் செய்து பார்க்க வாய்ப்பு உள்ளது.

குறிப்பாக வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா இல்லாததால் வெங்கடேஷ் அய்யருக்கு முக்கியத்துவம் அளிக்க திட்டமிட்டுள்ளார். அவரை 6-வது பந்து வீச்சாளராக பயன்படுத்த வாய்ப்பு இருப்பதை கேப்டன் ராகுலும் உறுதிப்படுத்தியுள்ளார். தொடக்க ஆட்டக்காரராக ஷிகர் தவானுடன், லோகேஷ் ராகுல் களம் இறங்க இருப்பதால் ருதுராஜ் கெய்க்வாட் வாய்ப்புக்காக காத்திருக்க வேண்டி இருக்கும்.

டெஸ்ட் தொடரில் தோற்றதும் பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் விராட் கோலி அதிரடியாக கேப்டன் பதவியில் இருந்து விலகினார். 7 ஆண்டுகளுக்கு பிறகு ஒரு வீரராக இந்த போட்டியில் களம் இறங்குவதால் அவரது செயல்பாடு எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. 2 ஆண்டுக்கு மேலாக ஒரு சதம் கூட அடிக்காத அவர் இப்போது கேப்டன் சுமை இல்லாததால் இன்னும் சுதந்திரமாக விளையாட முடியும். அதனால் அவர் ரன்வேட்டை நடத்துவாரா என்று ரசிகர்கள் ஆவல் கொண்டுள்ளனர்.

இந்த ஆடுகளத்தில் சுழற்பந்து வீச்சு ஓரளவு எடுபடும் என்று கணிக்கப்பட்டு உள்ளது. அதனால் அஸ்வின், யுஸ்வேந்திர சாஹலுடன் இந்தியா சுழல் தாக்குதலை தொடுக்கும் என்று தெரிகிறது. மேலும் சிறிய மைதானம் என்பதால் ரன்மழையையும் எதிர்பார்க்கலாம்.

உள்ளூர் சூழலில் ஆடும் தென்ஆப்பிரிக்க அணி பவுமா தலைமையில் அடியெடுத்து வைக்கிறது. டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற விக்கெட் கீப்பர் குயின்டான் டி காக் அணிக்கு திரும்பியிருப்பது பலமாகும். வான்டெர் துஸ்சென், டேவிட் மில்லர் ஆகியோரும் பேட்டிங்கில் சிறந்த நிலையில் உள்ளனர். வேலைப்பளுவை கருத்தில் கொண்டு பிரதான வேகப்பந்து வீச்சாளர் காஜிசோ ரபடா நேற்று திடீரென ஒரு நாள் போட்டி அணியில் இருந்து விடுவிக்கப்பட்டார். ஆனாலும் பந்து வீச்சில் டெஸ்ட் தொடரில் அசத்திய மார்கோ ஜான்சென் மற்றும் இங்கிடி, ஷம்சி மிரட்ட காத்திருக்கிறார்கள். இரு அணிகளும் ஏறக்குறைய சரிசம பலத்துடன் மல்லுகட்டுவதால் இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது.

இவ்விரு அணிகளும் இதுவரை 84 ஒரு நாள் போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 35-ல் இந்தியாவும், 46-ல் தென்ஆப்பிரிக்காவும் வெற்றி பெற்றன. 3 ஆட்டத்தில் முடிவு இல்லை. தென்ஆப்பிரிக்காவில் கடைசியாக 2018-ம் ஆண்டு ஒரு நாள் தொடரில் ஆடிய இந்தியா அந்த தொடரை 5-1 என்ற கணக்கில் கைப்பற்றியது நினைவு கூரத்தக்கது.

போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

இந்தியா: லோகேஷ் ராகுல் (கேப்டன்), ஷிகர் தவான், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ் அல்லது ஸ்ரேயாஸ் அய்யர், ரிஷாப் பண்ட், வெங்கடேஷ் அய்யர், தீபக் சாஹர், ஷர்துல் தாக்குர் அல்லது புவனேஷ்வர்குமார், அஸ்வின், ஜஸ்பிரித் பும்ரா, யுஸ்வேந்திர சாஹல்.

தென்ஆப்பிரிக்கா: குயின்டான் டி காக், ஜேன்மன் மலான், பவுமா (கேப்டன்), மார்க்ராம், வான்டெர் துஸ்சென், டேவிட் மில்லர், பிரிட்டோரியஸ் அல்லது ஜார்ஜ் லின்ட், மார்கோ ஜான்சென், பெலக்வாயோ, இங்கிடி, தப்ரைஸ் ஷம்சி.

இந்திய நேரப்படி பிற்பகல் 2 மணிக்கு இந்த ஆட்டம் தொடங்குகிறது.

டெஸ்ட் கேப்டன் பதவி மீது ஆசைப்படும் கே.எல்.ராகுல்

இந்திய ஒரு நாள் போட்டி அணியின் பொறுப்பு கேப்டன் லோகேஷ் ராகுல் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது:-

விராட் கோலியின் தலைமையில் இந்திய அணி சில தனித்துவமான சாதனைகளை படைத்துள்ளது. வெளிநாட்டு மண்ணில் இதற்கு முன்பு தொடரை வெல்லாத இடங்களில் சாதித்து காட்டியிருக்கிறோம். எங்கள் எல்லோருக்கும், அணிக்கும் அவர் ஒரு தரத்தை நிர்ணயித்து இருக்கிறார். அவரது கேப்டன்ஷிப் திறமை வியப்புக்குரியது. ஒவ்வொருவரின் மிகச்சிறந்த திறமையை வெளிக்கொண்டு வந்தார். நம்பிக்கையூட்டினார். அதே போல் என்னாலும் செய்ய முடியும் என்று நம்புகிறேன். இந்த சாம்பியன் அணியை தொடர்ந்து முன்னெடுத்து செல்ல விரும்புகிறேன்.

எந்த ஒரு வீரருக்கும் அணியை வழிநடத்துவது என்பது கனவாக இருக்கும். அந்த கனவு நனவாகும் போது அது நீண்ட காலம் பசுமையான நினைவாக நிலைத்து நிற்கும். நானும் அதில் விதி விலக்கல்ல. டெஸ்ட் கேப்டன் பதவி உற்சாகத்துடன் உணர்வுபூர்வமானதாக இருக்கும். ஆனால் உண்மையிலேயே இப்போது அதை நான் எதிர்நோக்கவில்லை. ஆனால் இது நடந்தால் (டெஸ்ட் கேப்டன் பதவி) அணியை நல்ல நிலைக்கு உயர்த்த எனது மிகச்சிறந்த முயற்சியை வெளிப்படுத்துவேன் என்று கே.எல்.ராகுல் கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.