இலங்கை அணிக்குத் திரும்பும் லசித் மாலிங்க.

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வேகப் பந்துவீச்சாளரான லசித் மாலிங்க, அவுஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின் போது இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்துவீச்சு ஆலோசகராக இருப்பார் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

பெப்ரவரி மாத ஆரம்பத்தில் 5 போட்டிகள் கொண்ட T20i தொடரில் ஆடுவதற்காக இலங்கை அணி அவுஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது.

இந்த சுற்றுப்பயணத்தில் பந்துவீச்சு ஆலோசகராக திரும்புகின்ற லசித் மாலிங்க, கடந்த ஆண்டில் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் இலங்கை கிரிக்கெட் அணிக்காக மீண்டும் பணி புரியவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

எனினும் லசித் மாலிங்க, தற்காலிக ஒப்பந்தமொன்றின் அடிப்படையிலேயே இலங்கை அணிக்கு ஆலோசகராக ஈடுபடுவார் எனக் குறிப்பிடப்பட்டிருக்கின்றது.

இலங்கை அணிக்காக 84 T20i போட்டிகளில் ஆடியிருக்கும் லசித் மாலிங்க 107 விக்கெட்டுக்களை கைப்பற்றியிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன் உலகின் பல்வேறு T20 லீக்குகளில் ஆடி 400 இற்கு கிட்டவான விக்கெட்டுக்களை கையகப்படுத்தியிருக்கும் மாலிங்க, இலங்கை அணியின் ஆலோசகராக வருவதற்கு முன்னர் இந்திய பிரீமியர் லீக் தொடரில் ஆடுகின்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்துவீச்சு ஆலோசகராகவும் செயற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேநேரம் இலங்கை – அவுஸ்திரேலிய அணிகள் பங்கெடுக்கும் 5 போட்டிகள் கொண்ட T20i தொடர் பெப்ரவரி மாதம் 11ஆம் திகதி சிட்னியில் ஆரம்பமாகின்றது.

Leave A Reply

Your email address will not be published.