எனது நண்பரும், எதிரியுமான ரபேல் நடாலுக்கு வாழ்த்துக்கள் – ரோஜர் பெடரர்

கிராண்ட்ஸ்லாம் என்ற உயரிய அந்தஸ்து பெற்ற ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டம் நேற்று மெல்போர்னில் நடைபெற்றது.
இதில், தரவரிசையில் 2-ம் நிலை வீரரான டேனில் மெட்வெடேவ்(ரஷியா) ,ஸ்பெயினின் ரபேல் நடாலை எதிர்கொண்டார்.

பரபரப்பான இந்த போட்டியில்,ரபேல் நடால் 2-6, 6-7,6-4, 6-4,7-5 என செட்களில் வெற்றி பெற்றார்.இந்த வெற்றியால் 21 வது முறை ‘கிராண்ட்ஸ்லாம்’ பட்டம் வென்று நடால் சாதனை படைத்துள்ளார். அதிக முறை ‘கிராண்ட்ஸ்லாம்’ பட்டம் வென்ற வீரர் என்ற சாதனையை படைத்தார் ரபேல் நடால். அவருக்கு பல்வேறு தரப்பிலும் வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

இந்நிலையில், 21 வது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்ற நடாலுக்கு மற்றொரு முன்னணி டென்னிஸ் வீரர் ரோஜர் பெடரர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து, ரோஜர் பெடரர் தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து வாழ்த்து செய்தியில், “சிறந்த போட்டி! எனது நண்பரும் சிறந்த எதிரியுமான ரபேல் நடால்க்கு, 21 கிராண்ட்ஸ்லாம் ஒற்றையர் பட்டங்களை வென்ற முதல் வீரராக இருப்பதற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.

சில மாதங்களுக்கு முன்பு நாங்கள் இருவரும் போட்டியில் இருப்பதைப் பற்றி கேலி செய்தோம். ஒரு சிறந்த சாம்பியனை ஒருபோதும் குறைத்து மதிப்பிடாதீர்கள்”.

“உங்களின் அசாத்தியமான பணி அர்ப்பணிப்பும், போராடும் மனப்பான்மையும் எனக்கும் உலகம் முழுவதும் உள்ள எண்ணற்ற பிறருக்கும் உத்வேகமாக உள்ளது.

இந்த சகாப்தத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் பெருமிதம் கொள்கிறேன், மேலும் கடந்த 18 ஆண்டுகளாக நீங்கள் எனக்காகச் செய்ததைப் போல் மேலும் பலவற்றைச் சாதிக்க உங்களைத் தூண்டுவதில் பெருமைப்படுகிறேன். உங்களுக்கு முன்னால் இன்னும் பல சாதனைகள் இருக்கும் என்று நான் நம்புகிறேன்!” என தனது மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார்.

Leave A Reply

Your email address will not be published.