கொரோனா பீதியை தாண்டி ஐரோப்பாவில் சூழும் போர்மேகம்? சுவிசிலிருந்து சண் தவராஜா

மூன்றாம் உலகப் போர் ஒன்றுக்குக் காரணமாக அமையக் கூடிய ரஸ்ய-உக்ரைன் போர் பற்றிய செய்திகளே இன்று மேற்குலக ஊடகங்களில் நிறைந்து கிடக்கின்றன. பல இலட்சம் உயிர்களைக் கொள்ளை கொண்டுவிட்ட கொரோனாப் பெருந் தொற்று தொடர்பிலான செய்திகளைப் பின்தள்ளும் வகையில் இந்த உத்தேசப் போர் தொடர்பில் விவாதங்களும் விமர்சனங்களும் பெரும்பான்மை ஊடகங்களில் அளவுக்கு அதிகமாக நடைபெற்று வருகின்றன. தேவைக்கும் அதிகமான இந்த ஊடகப் பரப்புரைகளின் மத்தியில் சாமானிய மக்களின் அன்றாடத் துன்பங்களும், துயரங்களும், கொரோனாப் பெருந் தொற்று ஏற்படுத்தியுள்ள பாதிப்புகளும் சிறிய விடயங்களாகக் கருதப்பட்டு, அவை பற்றிய செய்திகள் ஓரங்கட்டப்படுவதைக் காண முடிகின்றது. கொரோனாப் பெருந் தொற்றின் தாக்கத்தின் விளைவாக செல்வந்தர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையிலான இடைவெளி தொடர்ந்தும் விசாலித்துச் செல்வது பற்றியோ, இதன் விளைவாக சாமானிய மக்கள் மத்தியில் ஏற்பட்டுவரும் விசனம் பற்றியோ யாரும் வெளிப்படையாகப் பேசிவிடக் கூடாது என்பதில் கவனமாக இருக்கும் அரசியல் தலைவர்களும், அவர்களின் அடிவருடிகளான ஊடகங்களும் மக்களின் கவனத்தை – தற்காலிகமாகவேனும் – திசைதிருப்பிவிட துடியாய்த் துடிக்கின்றனர். புள்ளி விபரங்கள், அறிக்கைகள், உளவுப் பிரிவுத் தகவல்கள் என முறையான ஆதாரங்கள் எதுவும் இன்றிய வதந்திகளை ஆதாரமாகக் கொண்டு செய்திகளை உலாவச் செய்வதில் தற்காலிக வெற்றியையும் அவர்கள் பெற்றுள்ளார்கள் என்பதையும் மறுப்பதற்கில்லை.

ஏனைய நாடுகளின் மீது படையெடுப்பு நடத்துவதை வழக்கமாகக் கொண்டுள்ள அமெரிக்கா தற்போது ரஸ்யா மீது கண் வைத்துள்ளதைப் பார்க்க முடிகின்றது. “அண்டை நாடான உக்ரைன் மீது ரஸ்யா படையெடுக்கப் போகின்றது” என்ற ரஸ்யாவுக்கே தெரியாத தகவலை(?)க் கையில் வைத்துக் கொண்டு, தனது படைகளைக் கூட ஐரோப்பா நோக்கி நகர்த்தத் தொடங்கியுள்ளது. “எல்லையோராமாக சுமார் ஒரு இலட்சம் படையினரை ரஸ்யா நகர்திதியுள்ளது” என்ற அரிய கண்டுபிடிப்போடு தனது “ஜனநாயக மீட்பு” நடவடிக்கைக்கு அத்திவாரம் இடும் அமெரிக்காவின் தகவலை உக்ரைன் அரசாங்கமே மறுத்த போதிலும், அதனை ஏற்றுக் கொள்ள அமெரிக்கா தயாராக இல்லை. இந்நிலையில், “உக்ரைன் மீது படையெடுக்கும் திட்டம் எதுவும் தம்மிடம் இல்லை” என ரஸ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் சொல்வதை மாத்திரம் அமெரிக்கா கணக்கில் எடுத்துவிடுமா என்ன?

உண்மையில் அமெரிக்காவின் பிரச்சனைதான் என்ன? அமெரிக்கா சொல்வதைப் போல மனித உரிமைகளைக் காப்பதுதான் தனது நோக்கம் என்றால், அதனைக் கேட்கும் சிறுபிள்ளை கூடச் சிரிக்கும் என்பதுவே அமெரிக்காவின் வரலாறு. ~ஜனநாயகத்தை மீட்கப் போகிறேன்| என்ற கோசத்துடன் உலகின் பல நாடுகள் மீதும் படையெடுத்த அமெரிக்கா, எவ்வாறு ஜனநாயக விரோதமாக நடந்து கொண்டது? எவ்வாறு நடந்து கொள்கிறது? என்பதற்கு வரலாற்றில் ஏராளம் ஆதாரங்கள் உள்ளன. அமெரிக்கப் படைகள் கல்பதித்த எந்தவொரு நாட்டிலாவது முறையான ஆட்சியாவது நடைபெறுகின்றதா என்பதே கேள்விக்குறி. இந்த நிலையில், நிம்மதியாக இருக்கும் உலகை மீண்டும் ஒரு போரில் மூழ்கடிக்க அமெரிக்கா முயற்சி செய்வது பட்டவர்த்தனமாகத் தெரிகின்றது. 2003இல் ஈராக் மீதான படையெடுப்பை மேற்கொள்ள அப்போதைய பிரித்தானிய தலைமை அமைச்சர்; ரொனி பிளேயர் எவ்வாறு உதவினாரோ, அதேபோன்று ரஸ்யா விடயத்திலும் உதவுவதற்கு தற்போதைய தலைமை அமைச்சர் போரிஸ் ஜோன்சன் தனது விருப்பத்தைத் தெரிவித்துள்ளார். தனது நவ காலனித்துவக் கொள்கைகளையும், எஜமான விசுவாசத்தையும் ஒழித்துவைக்க விரும்பாத அவர், உள்நாட்டில் சரிந்து கொண்டிருக்கும் தனது செல்வாக்கைத் தூக்கி நிறுத்துவதற்கு இதனை ஒரு சாதனமாகப் பாவிக்க நினைக்கின்றார்.

1991இல் சோவியத் ஒன்றியம் முடிவுக்கு வந்ததுடன், எதிரிகளே இல்லாத ஒற்றை மைய உலகு ஒன்றை உருவாக்கிவிடும் பெருங் கனவில் அமெரிக்க ஏகாதிபத்தியம் மிதந்தது. ஒருசில வருடங்கள் அத்தகைய நிலைமையே நீடித்தது. ஆனால், புட்டின் தலைமையில் ரஸ்யா ஒரு வல்லரசாக மாறும் என்பதைக் கனவில் கூட நினைத்திராத அமெரிக்கா, தன்னைச் சுதாகரித்துக் கொள்வதற்குள் எவ்வளவோ நடைபெற்று முடிந்துவிட்டன. நேட்டோ என்ற வட அத்திலாந்திக் ஒப்பந்த நாடுகள் அணிக்குள் முன்னாள் சோவியத் நட்பு நாடுகளை இணைத்துக் கொள்ள அமெரிக்கா ஒருபுறம் முயல, தனது கொல்லைப்புறத்தில் நடைபெறும் நிகழ்வுகளால் சுதாகரித்துக் கொண்ட ரஸ்யா, தானும் ஒரு கூட்டை உருவாக்கிக் கொண்டது. தனக்கு ஆபத்து வரப் போகின்றது என்பதைத் தெரிந்து கொள்ளும் எந்தவொரு நாடும் இயல்பாக மேற்கொள்ளும் நடவடிக்கையே இது. என்றாலும் அமெரிக்காவால் அதனைச் சகித்துக் கொள்ள முடியவில்லை.

உக்ரைன் விடயத்தில் ரஸ்யா நடந்து கொள்வதை ஒரு தற்காப்பு நடவடிக்கையாகவே பார்க்க வேண்டியுள்ளது. ஆனால், அதனை ஒரு ஆக்கிரமிப்பு நடவடிக்கையாகச் சித்தரிப்பதில் அமெரிக்கா ஓரளவு வெற்றி கண்டுள்ளது என்பதை மறுப்பதற்கில்லை. தற்போது, உக்ரைனில் ஒரு ஆட்சி மாற்றத்தை நிகழ்த்த ரஸ்யா முயற்சித்து வருகின்றது என்ற புதுக் கதை கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. ஏற்கனவே, உக்ரைனில் உள்ள எதிர்கட்சியினரை முற்றாக ஒழித்துக் கட்டிவிடும் மனப்பாங்குடன் செயற்பட்டுவரும் அரசாங்கத்திற்கு இந்தப் புதிய தகவல் இன்னமும் உக்கிரத்தை ஏற்படுத்தக் கூடும்.

இரண்டு நாடுகள் என ஒப்பிடும் போது, ஒரு போரில் ரஸ்யாவின் பலத்துக்கு முன்னால் உக்ரைனால் ஒருசில நாட்களுக்கு மேல் தாக்குப்பிடிக்க முடியாது என்பதே யதார்த்தம். அது தவிர, ரஸ்யா ஒரு அணு வல்லரசாகவும் உள்ளது. இவையனைத்தையும் அறிந்து கொண்டே உக்ரைனை ஒரு போரை நோக்கி அமெரிக்கா உந்தித் தள்ளி வருகின்றது. போர் என வந்துவிட்டால் அழியப் போவது உக்ரைன் மற்றும் ரஸ்ய மக்களே. ஆனால், அவ்வாறு ஒரு போர் தொடங்குமானால் அது ரஸ்யாவின் பலத்தைப் பரீட்சிக்கும் ஒரு களமாக அமெரிக்காவால் பார்க்கப்படும். அது மாத்திரமன்றி, போரில் வெற்றி கொண்டாலும், சில வேளை தோற்றாலும் ரஸ்யாவின் பொருளாதாரம் வெகுவாகப் பாதிக்கப்படும். உலக அரங்கிலும் ரஸ்யாவுக்கு கெட்ட பெயர் கிடைக்கும். இவை இரண்டுமே அமெரிக்காவைப் பொறுத்தவரை இலாபமே.

ஆனால், புட்டினைப் பொறுத்தவரை அவர் அமெரிக்காவின் சதிவலை தொடர்பில் ஆரம்பம் முதலே தெளிவாக இருந்து வருவதைப் பார்க்க முடிகின்றது. அமெரிக்காவின் வலையில் சிக்காமல் போரைத் தடுத்து விடுவதிலேயே அவரின் வெற்றி இருக்கிறது. எத்தனை காலம் அவரால் தாக்குப் பிடிக்க முடியும் என்பதே இன்றுள்ள பெறுமதியான கேள்வி.

Leave A Reply

Your email address will not be published.