YouTube பார்த்து போலி சாவி தயாரித்து மெகா கொள்ளை.. கில்லாடி ஏசி மெக்கானிக் சிக்கியது எப்படி?

அம்பத்தூரில் யூடியூப் பார்த்து போலி சாவி தயாரித்து மெகா கொள்ளையில் ஈடுபட்ட ஏசி மெக்கானிக்கை போலீஸார் கைது செய்துள்ளனர்.

சென்னை அம்பத்தூர் கள்ளிக்குப்பம் முத்தமிழ் நகர் 7வது தெருவில் வீடு ஒன்றில் முதல் தளத்தில் வசித்து வருபவர் பாலாஜி. இவர் கட்டிடம் கட்டும் ஒப்பந்ததாரராக வேலை செய்து வருகிறார். இரண்டாவது தளத்தில் சந்திரசுதன் என்பவர் கடந்த ஓராண்டாக வசித்து வருகிறார். இந்தநிலையில் பாலாஜி தனது மனைவி வாசுகிதேவியுடன் சென்னை கேளம்பாக்கத்தில் உள்ள கேளிக்கை விடுதிக்கு சென்றுள்ளார். பின்னர் இரவு வீட்டிற்கு வந்து மனைவி உடை எடுக்க பீரோவை திறந்த போது பீரோவில் வைத்திருந்த நகை பெட்டி திருடு போயிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

உடனடியாக கணவரிடம் தெரிவிக்க பாலாஜி காவல்துறையினரிடம் தகவல் தெரிவித்துள்ளார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அம்பத்தூர் காவல்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டது.

மேல்வீட்டில் உள்ள நபர் மீது சந்தேகம் உள்ளது என பாலாஜி தெரிவித்ததையடுத்த சந்தேகத்தின் பேரில் இரண்டாவது தளத்தில் வசித்துவந்த சந்திரசுதனை நள்ளிரவு 2 மணிக்கு பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.விசாரணையில் சந்திர சுதன் நகை திருடியது உறுதியானது.

அவனிடம் நடத்திய விசாரணையில் பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளது. சந்திர சுதன் ஏசி மெக்கானிக்காக வேலை பார்த்து வந்துள்ளார். இந்தநிலையில் கீழ் தளத்தில் உள்ள பாலாஜி கடந்த வியாழக்கிழமை பாரிமுனையில் உள்ள கோவிலுக்கு சென்று வந்துள்ளார். இரவு வீட்டிற்கு வந்த களைப்பில் அப்பொழுது மறதியாக வீட்டின் சாவியை கதவிலயே விட்டுவிட்டு தூங்க சென்றுள்ளார்.

இதனை சாதகமாக்கி கொண்ட சந்திர சுதன் கதவிலிருந்த சாவியை எடுத்து சென்று கோதுமையில் அச்சு உருவாக்கி தன்னிடம் இருந்த சால்டரிங் ஈயங்களை உருக்கி அச்சு அசலாக போலியாக சாவியை தயாரித்து வைத்துள்ளார். நேற்று இரவு யாரும் இல்லாத நேரத்தில் வீட்டின் கதவை திறந்து பீரோவினை லாவகமாக திறந்து பெட்டியில் வைத்திருந்த தங்கம் வைரம் நகைகளை எடுத்துக்கொண்டு மீண்டும் வீட்டை பூட்டிவிட்டு சென்றது விசாரணையில் தெரியவந்தது.

பின்னர் அனைத்து நகைகளையும் பறிமுதல் செய்த அம்பத்தூர் குற்றப்பிரிவு காவல்துறையினர் குற்றவாளியை அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்து புழல் சிறையில் அடைத்தனர். மேலும் வீட்டின் சாவி கோதுமையில் அச்சு தயாரித்து 52 சவரன் நகை பணம் ஆகியவற்றை திருடிய சம்பவம் அம்பத்தூர் கள்ளிக்குப்பம் பகுதியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஒரு ஏசி மெக்கானிக் இதுபோன்ற செய்த சம்பவம் பல தரப்பினர் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave A Reply

Your email address will not be published.