வடக்கு கரையோரப் பிரதேசங்களை சிங்கள, பௌத்தமயமாக்க அரசு திட்டம்!

வட பகுதியில் இருக்கும் எங்களின் மீனவர்களைக் கடற்றொழிலில் இருந்து வெளியேறச் செய்து அந்தக் கரையோரப் பிரதேசங்களை சிங்கள, பௌத்த பிரதேசங்களாக மாற்ற அரசு திட்டமிட்டு செயற்படுகின்றது என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற நீதி அமைச்சின் கீழான குற்றவியல் நடவடிக்கை முறை சட்டக்கோவை, ஆளணியினருக்கெதிரான கண்ணிவெடிகளைத் தடைசெய்தல் சட்டமூலம், நீதித்துறை (திருத்தச்) சட்டமூலங்கள் மீதான இரண்டாம் நாள் விவாதத்தில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

“கடந்த சில வாரங்களாக வடபகுதி கடலில் எல்லை தாண்டி வந்த படகுகளாலும் மற்றும் தென்பகுதியில் இருந்து வருகின்றவர்களாலும் எங்களின் மீனவர்கள் மீது மேற்கொள்ளப்படுகின்ற தாக்குதல்கள் காரணமாக மீனவர்கள் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

எல்லை தாண்டி வந்த ரோலர் படகு மோதியதில் காணாமல்போன இரண்டு மீனவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இலங்கைக் கடற்படையினர் பார்த்துக்கொண்டிருக்கத்தக்கதாகவே நடந்துள்ளன. இது இன்று நேற்று அல்ல கடந்த 13 வருடங்களாக எங்களின் மீனவர்கள் பாதிக்கப்படுகின்றனர்.

வட பகுதியில் இருக்கும் எங்களின் மீனவர்களை கடற்றொழிலில் இருந்து வெளியேறச் செய்து கரையோரத்தை சிங்கள – பௌத்த பிரதேசங்களாக மாற்ற இலங்கை அரசு திட்டமிட்டு செய்யும் நடவடிக்கையே இது. அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் உறுதுணையாக இருந்து இந்த அழிவுகளுக்குத் துணைபோகின்றார்.

இவ்வாறான செயற்பாடுகள் காரணமாக யாழ். மாவட்டத்தில் 23 ஆயிரம் மீனவக் குடும்பங்கள் வாழ்வாதாரம் இழந்து பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் வடபகுதியில் 50 ஆயிரம் மீனவ குடும்பங்கள் வாழ்வாதரம் இழந்து தவிக்கின்றனர்.

கடந்த 31 ஆம் திகதி இரண்டு மீனவர்கள் கொல்லப்பட்டத்தைத் தொடர்ந்து மீனவர்கள் கடலுக்குச் செல்வதை நிறுத்தி கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்த மீனவர்கள் தொழிலுக்குச் செல்லாது விட்டபோதும் அவர்களின் குடும்பங்கள் பசியில் வாடியபோது கடற்றொழில் அமைச்சர் அவர்களைத் திரும்பியும் பார்க்கவில்லை. வாக்குகளுக்காக வாக்குறுதிகளை வழங்கி மக்களை ஏமாற்றி இந்த அரசுக்கும் கடற்படைக்கும் வெள்ளையடிக்கும் செயற்பாடுகளையே அவர் செய்கின்றார்.

மீனவர்கள் தமது போராட்டத்தை உயர்தரப் பரீட்சை காரணமாக தற்காலிகமாக நிறுத்தியுள்ளனர். தீர்வு கிடைக்காவிட்டால் தொடர்ந்தும் போராடுவதற்கு அவர்கள் திட்டமிட்டுள்ளனர். இதற்கு நாங்கள் எங்களின் ஒத்துழைப்புகளை வழங்குவோம்.

இதேவேளை, இந்தப் பிரச்சினை தொடர்பில் இந்தச் சபையில் ஒத்திவைப்பு வேளை பிரேரணையொன்றை கொண்டு வருவதற்கு நாங்கள் தீர்மானித்திருந்தோம். இந்நிலையில் எங்களுடன் தொடர்பு கொண்ட இந்தியத் தூதரக அதிகாரிகள், தங்களின் பக்கத்தில் இருந்து வரும் மீனவர்களை கட்டுப்படுத்தத் தீர்மானித்துள்ளோம் என்றும், இதனால் இதற்கு ஒத்துழைக்குமாறும் கேட்டுக்கொண்டதற்கமைய அந்த ஒத்திவைப்பு வேளை பிரேரணையை நிறுத்தியுள்ளோம்.

இவ்வாறாக வெளிநாட்டு அரசு தங்களின் பக்கத்தில் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ள போதும், இன்று வரையில் இந்த அரசில் முதுகெலும்பில்லாத அமைச்சர் மட்டுமே பேசிக் கொண்டிருக்கின்றார். ஆனால், ஜனாதிபதி, பிரதமர், நீதி அமைச்சர் ஆகியோர் எமது மீனவர்கள் பற்றி கதைப்பதில்லை.

இதேவேளை, மயிலிட்டித் துறைமுகம் 250 மில்லியன் ரூபா செலவிடப்பட்டு அபிவிருத்தி செய்யப்பட்ட பின்னர் தமிழர்களிடம் இருந்து பறிக்கப்பட்டு சிங்களவர்களிடம் கொடுக்கப்பட்டுள்ளது. இதனைப் பார்க்கும்போது அரசு வட பகுதியிலுள்ள மீனவர்களைத் தொழிலில் இருந்து அப்புறப்படுத்தி அவர்களை வெளியேற்றி இந்தப் பகுதியை சிங்கள மயமாக்கும் நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில்தான் இந்த வேலைத்திட்டம் நடைபெறுகின்றது.

இதனால்தான் ஒற்றையாட்சிக்கு உட்பட்ட எந்தத் தீர்மானமும் எங்களைப் பாதுகாக்காது என்ற நிலைப்பாட்டில் இருக்கின்றோம். ஆகவே, எங்களின் மீனவர்களை, எங்களின் விவசாயிகளை, எங்களின் வர்த்தகர்கள் மற்றும் மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கக் கூடிய அதிகாரத்தை வழங்கக் கூடிய சமஷ்டி தீர்வை வலியுறுத்தி குரல் கொடுத்துக்கொண்டிருக்கின்றோம். இதனை சிங்கள தேசம், மூத்த அரசியல் தலைவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.