அப்பாவிகளைச் சிறையில் அடைக்கும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் எதற்கு? பேராயர் ரஞ்சித் ஆண்டகை சீற்றத்துடன் கேள்வி.

“பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் உடனடியாக நீக்கப்பட வேண்டும் அல்லது முழுமையாக மாற்றப்பட வேண்டும். ஏனெனில் இந்தப் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தைப் பயன்படுத்தி குற்றவாளிகளைத் தப்பிவிட்டு அப்பாவிகளையே ஆட்சியாளர்கள் சிறையில் அடைத்து வருகின்றனர்.”

– இவ்வாறு கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்தார்.

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை உடனடியாக நீக்குமாறு வலியுத்தி மக்களிடம் கையெழுத்துப் பெறும் மனுவில் கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையும் கையெழுத்திட்டுள்ளார். இது தொடர்பில் அவரிடம் ஊடகங்கள் வினவியபோதே மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் சம்பவத்தையடுத்து இந்தப் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தைப் பயன்படுத்தி பலர் சிறையில் அடைக்கப்பட்டனர். ஆனால், தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்னமும் நீதி வழங்கப்படவில்லை. குற்றவாளிகளைத் தப்பிவிட்டு அப்பாவிகளைச் சிறையில் அடைத்தால் எப்படி நீதி கிடைக்கும்? அதனால்தான் இன்று நாம் சர்வதேசத்திடம் நீதி கோரி நிற்கின்றோம்.

இந்தப் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தால் வடக்கு, கிழக்கு, தெற்கு என நாடெங்கும் வாழும் மக்கள் பலர் துன்பங்களைச் சந்துள்ளனர். அப்பாவிகளைச் சிறையில் அடைக்கும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் எதற்கு? எனவே, இந்தப் பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் உடனடியாக நீக்கப்பட வேண்டும் அல்லது முழுமையாக மாற்றப்பட வேண்டும். இதை வலியுறுத்தியே அதற்கான மனுவில் நான் கையெழுத்திட்டுள்ளேன்” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.