ரஷ்யாவின் நார்டு ஸ்ட்ரீம் 2 பைப்லைன் நிர்வாகம் மீது பொருளாதார தடை.

ரஷியாவின் அச்சுறுத்தலில் இருந்து தன்னை தற்காத்துகொள்ள அமெரிக்கா, கனடா மற்றும் 27 ஐரோப்பிய நாடுகளின் ராணுவ கூட்டமைப்பான ‘நேட்டோ’வில் உறுப்பு நாடாக சேர உக்ரைன் விரும்புகிறது. இதற்கு அமெரிக்கா உள்ளிட்ட பல நேட்டோ உறுப்பு நாடுகள் பச்சை கொடி காட்டின.

அதே சமயம் உக்ரைன் நேட்டோவில் இணைந்தால் அந்த நாட்டை கைப்பற்ற முடியாமல் போவதோடு நேட்டோ படைகளால் தனது நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம் என ரஷியா அஞ்சுகிறது. இதனால்தான் உக்ரைன் நேட்டோவில் இணைவதை ரஷியா கடுமையாக எதிர்க்கிறது.

எனவேதான் இதுவரையில் உக்ரைனை ஆக்கிரமிக்க மறைமுகமாக காய் நகர்த்தி வந்த ரஷியா, படையெடுப்பின் மூலம் உக்ரைனை ஆக்கிரமிக்க முடிவு செய்து அந்த நாட்டின் எல்லையில் சுமார் 1½ லட்சம் படை வீரர்களை குவித்துள்ளது.

இந்த சூழலில் எல்லையில் படைகளை தயார் நிலையில் வைத்திருக்கும் ரஷியா படையெடுப்புக்கான சாக்குபோக்குகளை தானே உருவாக்கி வருகிறது. அதன் ஒரு பகுதியாக உக்ரைனின் கிழக்கு பகுதியில் கிளர்ச்சியாளர்களின் பிடியில் உள்ள லுகான்ஸ்க் மற்றும் டன்ஸ்ட்க் பிராந்தியங்களில் பிரிவினைவாதிகளுக்கும், ராணுவத்துக்கும் இடையே மோதலை தூண்டிவிட்டது.

இதனால் பதற்றம் மேலும் அதிகரித்த சூழலில் ரஷிய அதிபர் புதின் நேற்று முன்தினம் அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில் உக்ரைனின் லுகான்ஸ்க் மற்றும் டன்ஸ்ட்க் பிராந்தியங்களை தனித்தனி நாடுகளாக அங்கீகரிப்பதாக தெரிவித்தார். அதைத்தொடர்ந்து அவர் தனிநாடுகளாக அறிவிக்கப்பட்ட லுகான்ஸ்க் மற்றும் டன்ஸ்ட்க்கில் ரஷிய படைகள் நுழைவதற்கான உத்தரவை பிறப்பித்தார். அங்கு ரஷிய படைகள் அமைதிகாக்கும் பணியில் ஈடுபடும் என அவர் அந்த உத்தரவில் குறிப்பிட்டார்.

அவர் அப்படி கூறினாலும் உக்ரைனுக்குள் ரஷிய படைகள் நுழைய அனுமதித்தது படையெடுப்பின் தொடக்கமாகவே உலகநாடுகள் கருதுகின்றன. இதனால் புதினின் இந்த நடவடிக்கைக்கு உலக தலைவர்கள் பலரும் தங்களின் கண்டனத்தை பதிவு செய்தனர்.

மேலும் இந்த விவகாரத்தில் ரஷியா மீது கடுமையான பொருளாதார தடைகள் விதிக்கப்படும் எனவும் உலக தலைவர்கள் எச்சரித்தனர். அதன்படியே அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் ரஷியா மீது நேற்று பொருளாதார தடைகளை அறிவித்தன. வெள்ளை மாளிகையில் நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது, ரஷியாவின் மீதான பொருளாதார தடைகளை அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அறிவித்தார். மேற்கத்திய நாடுகளுடன் ரஷியா வர்த்தகம் செய்யும் திறனை குறிவைத்து இந்த தடைகள் அறிவிக்கப்படுவதாக அவர் கூறினார்.

உக்ரைன் விவகாரத்தில் ரஷியா மீது அமெரிக்கா பொருளாதார தடைவிதிப்பது இது முதல் முறையாகும். 27 ஐரோப்பிய நாடுகளின் கூட்டமைப்பான ஐரோப்பிய யூனியன் ரஷியாவை சேர்ந்த 27 தனி நபர்கள், வங்கிகள் மற்றும் நிறுவனங்கள் மீது பல்வேறு தடைகளை விதித்துள்ளது. இதனிடையே ரஷியாவுடனான நார்டு ஸ்ட்ரீம் எனப்படும் முக்கிய எரிவாயு குழாய் திட்டத்துக்கு வழங்கிய ஒப்புதலை ஜெர்மனி ரத்து செய்துள்ளது.

இதுதவிர ஜப்பான், ஆஸ்திரேலியா, கனடா ஆகிய நாடுகளும் ரஷியாவின் நிறுவனங்கள், வங்கிகள் மற்றும் தனிநபர்கள் மீது கடுமையான பொருளாதார தடைகளை அறிவித்துள்ளன.

இந்நிலையில் ரஷ்யாவின் நார்டு ஸ்ட்ரீம் 2 ஏஜி பைப்லைன் நிர்வாகம் மீது பொருளாதார தடை விதித்து அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

மேலும் இதுதொடர்பாக அவர் கூறுகையில், “நார்டு ஸ்ட்ரீம் 2 ஏஜி மற்றும் அதன் கார்ப்பரேட் அதிகாரிகள் மீது பொருளாதார தடைகளை விதிக்குமாறு தனது நிர்வாகிக்கு அவர் உத்தரவிட்டுள்ளேன். இந்த நடவடிக்கைகள் உக்ரைனில் ரஷ்யாவின் நடவடிக்கைகளுக்கு விடையளிக்கும் வகையில், நமது ஆரம்ப கட்டத் தடைகளின் மற்றொரு பகுதியாகும். நான் தெளிவுபடுத்தியது போல், ரஷ்யா தொடர்ந்து தீவிரமடைந்தால், அடுத்த நடவடிக்கைகளை எடுக்க நாங்கள் தயங்க மாட்டோம்” என்று ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

தற்போது தலைநகர் கீவில் உள்ள ரஷிய தூதரகத்தில் இருந்து அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் வெளியேற தொடங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது விரைவில் போர் தொடங்கலாம் என்பதை காட்டுவதாக பார்க்கப்படுகிறது.

Leave A Reply

Your email address will not be published.