ரஷ்யா – உக்ரைன் போரை நிறுத்த கோரி பதாகை ஏந்திய மணமக்கள்

புதுச்சேரியில் புதுமண தம்பதிகள் தங்களின் திருமணத்தின்போது ரஷ்யா- உக்ரைன் போரை நிறுத்த கோரிய பதாகைகளை ஏந்தியப்படி கோரிக்கை வைத்தனர்.

திருமணத்தின்போது விசித்திரமான மற்றும் வித்தியாசமான நிகழ்வுகள் நடைபெறுவது உண்டு. பெட்ரோல்- டீசல், தக்காளி, வெங்காயம் போன்ற காய்கறிகள் விலையேற்றத்தின் அவற்றை பரிசளிப்பது உண்டு. இதேபோல், நீட் தேர்வு ரத்து போன்ற கோரிக்கைகளை வலியுறூத்தியும் பதாகைகளை மணமக்கள் ஏந்தி கோரிக்கை வைப்பது உண்டு. அதுபோன்ற ஒரு சம்பவம்தான் புதுச்சேரியில் நடைபெற்றுள்ளது.

புதுச்சேரி குயவர்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பழனிச்சாமி. இவரது இளைய மகன் அசோக் ராஜா மற்றும் விழுப்புரம் அருகே உள்ள முண்டியம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த நாராயணசாமி மகள் சத்யாவிற்கும் புதுச்சேரி ஈசிஆர் சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில் இன்று திருமணம் நடைபெற்றது.

திருமணம் முடிந்ததும், ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே ஏற்பட்டுள்ள போரை தடுக்க வேண்டும், அமைதியான சூழல் உருவாக வேண்டும், போரை முடிவுக்குக் கொண்டு வரவில்லை என்றால் போர் மனித குலத்தை முடிவுக்குக் கொண்டு வரும், போர் இல்லாத உலகத்தை படைப்பும் என்றும் நமது வாழ்க்கை மிகவும் குறுகியது, இருக்கும்போது சந்தோசமாக இருக்க வேண்டும் போன்ற பதாகைகளை ஏந்தி மணமக்கள் கோரிக்கை வைத்தனர்.

மணமக்கள் தங்களது கோரிக்கைகளை பதாகையாக ஏந்தியதை திருமணத்திற்கு வந்தவர்கள் பார்த்து வாழ்த்தும் பாராட்டும் தெரிவித்தனர். உக்ரேனில் போரை முடிவுக்குக் கொண்டுவந்து அமைதியான சூழ்நிலை நிலவ வேண்டும் எங்கள் திருமணம் போல் உக்ரேனில் சுப நிகழ்ச்சிகளும் நடைபெற வேண்டும், மக்கள் சுபிட்சமாக இருக்க வேண்டும் என்று மணமக்கள் தங்களது விருப்பத்தை தெரிவித்தனர்.

Leave A Reply

Your email address will not be published.