சஜித்திடம் நாட்டை ஒப்படைத்துவிட்டு உடனே பதவி விலக வேண்டும் அரசு! திகாம்பரம் எம்.பி. வலியுறுத்து.

“இந்த அரசால் நாட்டை நிர்வகிக்க முடியவில்லை. தன்னால் முடியாது என்பதை ஆளுங்கட்சியினர் மீண்டும், மீண்டும் உறுதிப்படுத்தி வருகின்றனர். எனவே, ஆளக்கூடிய தலைவரான சஜித்திடம் நாட்டை ஒப்படைத்துவிட்டு இந்த அரசு உடன் பதவி விலக வேண்டும்.”

– இவ்வாறு தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் வலியுறுத்தினார்.

நாட்டில் எரிபொருளுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு, நீண்டநேர மின்வெட்டு, பொருட்களின் விலையேற்றம் ஆகியவற்றுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், மக்களுக்கு நிவாரணம் வழங்குமாறு வலியுறுத்தியும் ஹட்டனில் (06) நடைபெற்ற போராட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“இந்த நாட்டில் என்ன நடக்கின்றது என்பது பெரும் புதிராகவே இருக்கின்றது. ஆட்சியாளர்களின் முறையற்ற முகாமைத்துவத்தால் எதிலும் நிலையற்ற தன்மையே காணப்படுகின்றது.

இரவில் நித்திரைக்குச் சென்று, காலையில் கண்விழித்தால் ஏதேனும் பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளன. கட்டுப்பாட்டு விலையும் இல்லை. இதனால் வியாபாரிகள் தங்களுக்குத் தேவையான விலையில் விற்பனை செய்து வருகின்றனர். இதனால் மக்களுக்கே பெரும் பாதிப்பு.

அதுமட்டுமல்ல புதிய புதிய வரிசைகளும் உருவாகி வருகின்றன. சமையல் எரிவாயுவுக்கு வரிசை, பால்மாவுக்கு வரிசை, சீனிக்கு வரிசை, தற்போது டீசல், பெற்றோலுக்கு வரிசை எனப் பல வரிசைகள் உருவாகியுள்ளன. இந்த ஆட்சி தொடர்ந்தால் மேலும் பல வரிசைகளும் உருவாகும் அபாயம் உள்ளது.

ஆட்சியாளர்களிடம் ஆளும் திறமை இல்லை. இனவாதம் பேசியே ஆட்சிக்கு வந்தனர். இவர்களுக்கு இறைவன் தக்க தண்டனை வழங்கியுள்ளார்.

தங்களால் முடியாது எனத் தெரிந்தும், அதிகார ஆசையில் தொடர்ந்தும் ஆள இவைகள் முற்படுகின்றனர். முடியாவிட்டால் வீடு செல்லுமாறு இவர்களை நாம் வலியுறுத்துகின்றோம்.

இந்த நாட்டைச் சிறப்பாக ஆளக்கூடிய தலைவரான சஜித் பிரேமதாஸ இருக்கின்றார். அவருக்கு பக்கபலமாக நாம் இருக்கின்றோம். எனவே, நாட்டு மக்களின் நலன் கருதி அரசு பதவி விலக வேண்டும்” என்றார்.

Leave A Reply

Your email address will not be published.