ஐசிசி விருது: பிப்ரவரியின் சிறந்த வீரராக ஸ்ரேயாஸ் தேர்வு!

வேகமாக வளர்ந்து வரும் இந்திய பேட்ஸ்மேன் ஸ்ரேயாஸ் ஐயர் பிப்ரவரி மாதத்திற்கான ஐசிசி-யின் சிறந்த கிரிக்கெட் வீரராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

சர்வதேச கிரிக்கெட்டில் சிறந்து விளங்கும் வீரர்களை ஊக்குவிப்பதற்காக “மாதத்தின் சிறந்த வீரர் மற்றும் வீராங்கனை” என்ற கௌரவ பட்டத்தை ஐசிசி உருவாக்கியுள்ளது. கடந்த 2021ஆம் ஆண்டு முதல் முறையாக அறிமுகப்படுத்தப்பட்ட இந்த விருது கடந்த 12 மாதங்களாக வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி ஒரு குறிப்பிட்ட மாதத்தில் சர்வதேச கிரிக்கெட்டில் 3 வவையான போட்டிகளிலும் மிகச் சிறப்பாக செயல்படும் வீரருக்கு இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் கடந்த பிப்ரவரி மாதம் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் சிறந்து விளங்கிய இந்தியாவின் ஸ்ரேயாஸ் அய்யர், அமீரக நாட்டின் வ்ரிட்யா அரவிந்த் மற்றும் நேபால் நாட்டின் திபேந்தர் சிங் ஆகிய 3 வீரர்கள் இந்த விருதுக்காக பரிந்துரை செய்யப்பட்டார்கள்.

இதில் கடந்த மாதம் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இலங்கைக்கு எதிரான உள்நாட்டுத் தொடரின் போது ஸ்ரேயாஸ் ஐயரின் அபாரமான ஆட்டம் காரணமாக இந்த விருதைப் பெற்றிருக்கிறார்.

அகமதாபாத் மைதானத்தில் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் 80 ரன்கள் எடுத்தது, இலங்கை டி20 தொடரில் அசத்தியது என இந்திய அணிக்கு ஸ்ரேயாஸ் ஐயர் தொடர்ந்து பக்கபலமாக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மகளிர் பிரிவில் நியூசிலாந்து ஆல் ரவுண்டர் அமெலியா கெர், பிப்ரவரி மாதத்திற்கான சிறந்த வீராங்கனையாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். 21 வயதான கெர், இந்தியாவுக்கு எதிரான தொடரின் போது பேட்டிங் மற்றும் பந்துவீச்சு இரண்டிலும் சிறப்பான ஆட்டத்தை பதிவு செய்ததால், சிறந்த வீராங்கனையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.