எம்.எஸ். செல்லசாமி ஒரு மலையக மாமனிதர்; கொழும்பில் எனக்கு முன்னோடி.

மறைந்த எம்.எஸ். செல்லசாமி ஒரு மலையக மாமனிதர். கொழும்பில் எனக்கு முன்னோடி. “லீடர்” என்றால் முன்னோடி. ஒரு “லீடர்” எப்படி இருக்க வேண்டும் என்பதை என்னை போன்ற அவருக்கு அடுத்த தலைமுறைக்கு அவர் எடுத்து காட்டினார். அதே நானும் இன்று செய்கிறேன் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் கூறியுள்ளார்.

மறைந்த எம்.எஸ். செல்லசாமி தொடர்பான அனுதாப பிரேரணை மீது உரை நிகழ்த்திய மனோ கணேசன் மேலும் கூறியதாவது,

எம்.எஸ். செல்லசாமியின் வாழ்கை பல பாடங்களை எமக்கு கற்று கொடுக்கிறது.

ஒன்று, கட்சிகளில் ஏற்படும் உட்கட்சி பூசல்கள் சில வேளைகளில் எப்படி சமூகத்தையே பாதிக்கும் என்பதும், சமூகத்துக்கு பயன்பட கூடிய தகைமையானவர்கள் எப்படி ஒதுக்கப்படுகிறார்கள், என்பதுக்கும் எம்.எஸ். செல்லசாமியின் வாழ்கை பல பாடங்களை எமக்கு கற்று கொடுக்கிறது.

இரண்டு, பல இனங்கள் வாழும் நாட்டில் ஒரு இனம், தனது இனத்தை பிரதிநிதித்துவம் செய்ய வாக்குரிமையை சரியாக பயன்படுத்த வேண்டும் என்பதில் தப்பே இல்லை. பயன்படுத்தாததுதான் தப்பு என அவர் 1977ம் ஆண்டு நடைபெற்ற மத்திய கொழும்பு தேர்தலில் வெற்றி பெறாமையால் எடுத்து காட்டினார். அது அவரது தோல்வியல்ல. தமிழ் மக்களின் தோல்வி.

ஆனால், அவர் மனம் தளரவில்லை. மீண்டும் பன்னிரண்டு வருடங்கள் காத்திருந்து 1989ம் ஆண்டு புதிய விகிதாசார தேர்தல் முறையின் கீழ் போட்டியிட்டு அவர் கொழும்பு மாவட்ட எம்பியாக வெற்றிபெற்றார்.

2000ம் ஆண்டு, நான் முதன் முறை பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு சுமார் 90 வாக்குகள் எனக்கு குறைந்தமையால் வெற்றி பெறவில்லை. ஆகவே கொழும்பில் தமிழ் எம்பி இல்லாமல் போனார். 1977ல் முழுமையாக செல்லசாமிக்கு வாக்களிக்க தவறியது போல், 2000ம் ஆண்டு எனக்கும் தமிழ் வாக்காளர்கள் முழுமையாக வாக்களிக்க தவறினார்கள். அது என் தோல்வியல்ல. தமிழ் மக்களின் தோல்வி.

அவர் எப்படி தொடர்ந்து போராடி 1989 வெற்றி பெற்றாரோ, அதேபோல் நானும் போராடி அடுத்த 2001ம் ஆண்டே, பெரும் வெற்றி பெற்றேன். ஆகவே செல்லசாமி என் முன்னோடி என்கிறேன்.

அதேபோல் கண்டியில் சுமார் 15 வருடங்கள் தமிழ் எம்பி இருக்கவில்லை. ஆகவே ஒரு “லீடராக” முன்வந்து 2010ம் ஆண்டு கண்டியில் நான் போட்டியிட்டேன். ஆனால், தமிழ் வாக்காளர்கள் சரியாக எனக்கு வாக்களிக்காததால், நான் வெற்றி பெற வில்லை. அங்கு தமிழ் எம்பி இல்லாமல் போனார்கள். அது என் தோல்வியல்ல. தமிழ் மக்களின் தோல்வி.

ஆனால், நாம் செல்லாசாமியை பின்பற்றி மனம் தளராமல் முன்னேறினோம். கொழும்பில் 2001ம் ஆண்டு வெற்றி பெற்றதை போன்று, கண்டியில் 2015ம் ஆண்டும் நாம் வெற்றி பெற்று, இன்று கொழும்பு, கண்டி மாவட்டங்களில் எமது இனத்தின் நியாயமான, நேர்மையான பிரதிநிதித்துவங்களை உறுதி செய்துள்ளோம். கண்டில் இப்பொது தமிழ் எம்பி இருக்கிறார். இனிமேலும் இருப்பார். ஆகவேதான் எம். எஸ். செல்லசாமி எனக்கு முன்னோடி என்கிறேன்.

அவர் கொழும்பில் மாவட்ட அபிவிருத்தி சபை உறுப்பினராக. மேல்மாகாணசபை உறுபப்பினராக, மாகாணசபை அமைச்சராக, மத்திய அரசில் ராஜாங்க கைத்தொழில் அமைச்சராக, அஞ்சல்துறை துணை அமைச்சராக பணியாற்றியுள்ளார்.

நமது கலாச்சாரம், வரலாறு, மதம் ஆகியவை நம் மத்தியில் இருந்து உடல்ரீதியாக விடை பெற்று செல்பவர்கள் உண்மையில் செல்வதில்லை. இங்கே எங்கேயோதான் இருக்கிறார்கள் என எமக்கு கூறுகின்றன. அப்படி பார்த்தால், எம்.எஸ். செல்லசாமி அவர்கள் இங்கே எங்கேயோதான் இருக்கிறார். ஆகவே, எமக்கு வழிகாட்டி சென்ற உங்களுக்கு நான் இங்கே இருந்தபடி “சல்யூட்” செய்கிறேன். “சல்யூட் ஐயா..!”

Leave A Reply

Your email address will not be published.