நாடாளுமன்றத்தை கலைக்க இம்ரான் கான் கோரிக்கை.

நம்பிக்கையில்லா தீர்மானம் அரசியல் சாசனத்திற்கு எதிரானது எனக்கூறி நம்பிக்கையில்லா தீர்மானத்தை சபாநாயகர் காசிம் கான் நிராகரித்துள்ளார்.

பாகிஸ்தானில் பணவீக்கம் அதிகரிப்பு, விலைவாசி உயர்வு ஆகியவற்றுக்கு பிரதமர் இம்ரான் கான் தலைமையிலான அரசுதான் காரணம் எனக் குற்றம்சாட்டி அவர் மீது எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானத்தைக் கொண்டுவந்தன.

பாகிஸ்தானில் உள்ள 342 எம்.பிக்களில் 172 பேரின் ஆதரவை பெற்றால்தான் பதவியில் நீடிக்க முடியும் என்ற நிலை இம்ரான் கானுக்கு உள்ளது. ஆனால், இம்ரான் கானுக்கு அந்த அளவு ஆதரவு இல்லை. எதிர்க்கட்சிகளுக்கு 177 எம்.பிக்கள் ஆதரவு உள்ளது. இதனால், இம்ரான் கான் ஆட்சி கவிழும் என்றே எதிர்பார்க்கப்பட்டது.

இந்த பரபரப்பான சூழலில், இன்று பாகிஸ்தான் நாடாளுமன்றம் கூடியது. இம்ரான் கான் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்து இருந்ததால் நாடாளுமன்றத்தை சுற்றி பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. காலை 11.30 மணிக்கு நாடாளுமன்றம் கூடும் என அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், 1 மணி நேரம் தாமதமாக கூடியது. பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் நாடாளுமன்றத்திற்கு வரவில்லை.

நம்பிக்கையில்லா தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீர் திருப்பமாக நம்பிக்கையில்லா தீர்மானம் அரசியல் சாசனத்திற்கு எதிரானது எனக்கூறி நம்பிக்கையில்லா தீர்மானத்தை சபாநாயகர் காசிம் கான் நிராகரித்துள்ளார். மேலும், பாகிஸ்தன் நாடாளுமன்றம் ஏப்ரல் 25 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு மத்தியில் மேலும் ஒரு திருப்பமாக, பாகிஸ்தான் நாடாளுமன்றத்தை கலைக்க வேண்டும் என்று இம்ரான் கான் அந்நாட்டு அதிபருக்கு கோரிக்கை விடுத்துள்ளார். நம்பிக்கையில்லா தீர்மானத்தை நிராகரிக்கும் முடிவு சரியானதே என்று கூறியுள்ள இம்ரான் கான், நாடாளுமன்றத்தை கலைத்து விட்டு தேர்தல் நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.