ரஷ்யாவின் மீது புதியதாக மற்றொரு தடையை விதிக்க ஆலோனை.

வாஷிங்டன்: அமெரிக்கா உள்ளிட்ட ஜி7 நாடுகள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட பல நாடுகளும் இணைந்து, ரஷ்யாவின் மீது புதியதாக மற்றொரு தடையை விதிக்க ஆலோசித்து வருவதாக கூறப்படுகின்றது.

தொடர்ந்து ஒரு மாதத்திற்கு மேலாக ரஷ்யா – உக்ரைன் இடையேயான பிரச்சனையானது, இரு நாடுகளுக்கும் இடையே நீடித்து வரும் நிலையில், ரஷ்யா மிக மோசமான தாக்குதலை நடத்தி வருகிறது.

இதற்கிடையில் பல லட்சம் மக்கள் உக்ரைனை விட்டு வெளியேறியுள்ள நிலையில், அங்கு பல ஆயிரம் பேர் போரினால் இறந்திருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இரு நாடுகளுக்கும் இடையேயான பேச்சு வார்த்தைக்கு மத்தியில் ரஷ்ய படைகள் தலை நகர் கீவ்வில் இருந்து வெளியேறிய நிலையில், கீவ்வில் உள்ள இர்பின், புச்சா நகரங்களில் மக்கள் பலரும் மிகக் கொடூரமாக கொல்லப்பட்டதாகவும், அவர்களில் பலரும் கை கால்கள் கட்டபட்ட நிலையில் இறந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து புச்சா நகரத்து மேயர் புச்சா நகரில் உள்ள ஒரு தெருவில் 20 பேர் சுட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாகவும், அவர்களின் உடல்கள் சிதறிக் கிடந்தாகவும் கூறியுள்ளார். மேலும் 300 உடல்களை ஒரே இடத்தில் புதைத்துள்ளதாகவும் கூறியிருந்தார். இது பார்ப்போரின் மனதினை கலங்க வைக்கும் நிலையில் தான், பல நாடுகளும் மீண்டும் ரஷ்யாவுக்கு எதிராக களமிறங்க தொடங்கியுள்ளன.

ரஷ்யாவில் அனைத்து புதிய முதலீடுகளுக்கும் தடை, ரஷ்யாவில் நிதி நிறுவனங்கள் மற்றும் அரசுக்கு சொந்தமான நிறுவனங்கள் மீதான தடை, ரஷ்ய அரசு அதிகாரிகள் மற்றும் அரசு அதிகாரிகளின் குடும்ப உறுப்பினர்கள் என பலரின் மீதும் பொருளாதார தடையை விதிக்க திட்டமிட்டுள்ளதாக இதனையறிந்த ஆதாரங்கள் AFP-யிடம் கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஏற்கனவே ரஷ்யா போர் குற்றங்களை செய்து வருகின்றது. இதற்கிடையில் தற்போது புச்சாவில் நடந்த நிகழ்வுகள் இதனை சுட்டிக் காட்டும் விதமாகவே காணப்படுகின்றது. இவ்வாறு விதிக்கப்படும் புதிய தடைகள் ரஷ்யா மீது சற்று தாக்கத்தினை ஏற்படுத்தக்கூடும். குறிப்பாக பொருளாதார ரீதியாக தனிமைப்படுத்தல், தொழில்நுட்ப ரீதியாக தனிமைப்படுத்தல் உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

மொத்தத்தில் இது ரஷ்யாவின் செயல்பாடுகளை குறைக்கலாம். இது பொருளாதார ரீதியாகவும் கடுமையான பாதிப்பினை ஏற்படுத்தலாம். இதற்கிடையில் ரஷ்யாவின் பொருளாதாரம் நடப்பு ஆண்டில் 15% வரை சரியலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது கடந்த 15 ஆண்டுகால பொருளாதார ஆதாயங்களை அழித்துவிடும் என்றும் கூறப்படுகின்றது. மொத்தத்தில் ரஷ்யாவுக்கு அடுத்த செக்கினை வைக்க அமெரிக்க உள்ளிட்ட நாடுகள் தயாராகி வருகின்றன.

Leave A Reply

Your email address will not be published.