நெருங்கிய நட்பு நாடு என்கிற வகையில் அனைத்து ஒத்துழைப்பும், உதவியும் இலங்கைக்கு……..

அமெரிக்காவில் இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் இலங்கை நிதியமைச்சர் அலி சப்ரி சந்திப்பு நடைபெற்றது. இலங்கை பொருளாதாரம் குறித்து இருதரப்பு பேச்சுவார்த்தையில் ஆலோசிக்கப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. நெருங்கிய நட்பு நாடு என்கிற வகையில் அனைத்து ஒத்துழைப்பும், உதவியும் அளிக்க இந்தியா முயற்சி செய்யும் என ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இலங்கையின் நிதியமைச்சரிடம் உறுதி அளித்துள்ளார்.

அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் நடைபெற்று வரும் சர்வதேச நாணய நிதியம்- உலக வங்கி கூட்டத்தில் ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்றார். அண்டை நாடு என்ற வகையிலும், நெருங்கிய நட்பு நாடு என்கிற வகையிலும் இயன்ற அனைத்து ஒத்துழைப்பு மற்றும் உதவிகளை வழங்க இந்தியா முயற்சிக்கும் என நிர்மலா சீதாராமன் உறுதி அளித்ததாக நிதித்துறை ட்விட்டரில் பதிவிடப்பட்டுள்ளது.

இலங்கையில் பொருளாதார நெருக்கடியில் அத்தியாவசியப் பொருட்களை கூட வாங்க பணமின்றி, மக்கள் பசியும் பட்டினியுமாக தவித்து வருகின்றனர். கோட்டாபய ராஜபக்ச பதவி விலகக் கோரி கொழும்பு காலி முகத்திடலில் கோட்டா கோ கம என பெயரிட்டு பொதுமக்கள் தன்னெழுச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ராஜபக்ச குடும்ப உறுப்பினர்களும் பதவி விலக வேண்டும், நாட்டின் அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்ற வேண்டும், நெருக்கடிக்குள்ளான துறைகளை மீட்டெடுக்க வேண்டும், ராஜபக்ச குடும்பத்தினர் மற்றும் அரசியல்வாதிகளின் சொத்துக்களை பறிமுதல் செய்ய வேண்டும் ஆகிய கோரிக்கைகளை அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். வாஷிங்டனில் நாளை தொடங்கி 5 நாட்களுக்கு ஐஎம்எஃப் அதிகாரிகளுடன் இலங்கை குழு பேசும் எனத் தெரிகிறது.

பேச்சுவார்த்தையின்போது ஐஎம்எஃப்பிடம் மேலும் 3 ஆயிரம் கோடி ரூபாய் கடனுதவியை இலங்கை கோரும் எனத் தெரிகிறது. இது தவிர இந்தியா, சீனா ஆகிய நாடுகளிடமும் உலக வங்கி, ஆசிய வளர்ச்சி வங்கி ஆகிய வங்கிகளிடமும் இலங்கை கூடுதல் நிதியுதவிக் கோரி பேசி வருகிறது. இலங்கையில் நீடிக்கும் பொருளாதார நெருக்கடி காரணமாக பெட்ரோல் லிட்டருக்கு ரூ.84 அதிகரித்து ரூ.338க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் டீசல் விலை ரூ.113 அதிகரித்து ரூ.289க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதானல் வாகன ஓட்டிகள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.