வழக்கறிஞர்கள் சேமநல நிதி 10 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படும் – முதலமைச்சர் ஸ்டாலின்

வழக்கறிஞர்கள் சேமநல நிதி 7 லட்சம் ரூபாயில் இருந்து 10 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்தார்.

சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் ஒன்பது மாடி நிர்வாக பிரிவு கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா மற்றும் நாமக்கல், விழுப்புரம் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகங்கள் திறப்பு விழாவில் பங்கேற்ற தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், தமிழ்நாட்டில் முதலாவதாக சென்னையில் வணிக நீதிமன்றங்களை துவக்கி வைத்து, கொரோனாவுக்கு பலியான வழக்கறிஞர்களின் குடும்பத்தினருக்கு தலா 7 லட்சம் ரூபாய் சேமநல நிதியை வழங்கினார்.

பின்னர், நிகழ்ச்சியில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா, பொறுப்புக்கு வந்து இன்று ஓராண்டை நிறைவு செய்கிறார் எனவும் தான் முதலமைச்சராக பொறுப்பேற்று ஓராண்டை அடுத்த மாதம் பூர்த்தி செய்ய இருப்பதாகக் குறிப்பிட்டார்.

முதல்வரான பின் முதல் முறையாக உயர் நீதிமன்ற வளாகத்தில் நடக்கும் விழாவில் கலந்து கொள்வதாகக் கூறிய முதலமைச்சர், நீதி நெறி முறையை, சட்டத்தின் ஆட்சியை பின்பற்றும் ஆட்சியை வழங்கிக் கொண்டிருப்பதாக பெருமை தெரிவித்தார்.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா, சட்டத்தின் குரலாக மட்டுமல்லாமல் மக்களின் குரலாகவும் விளங்குகிறார் எனத் தெரிவித்த அவர், கடந்த ஆண்டு 64 கீழமை நீதிபதிகள் நியமிக்கப்பட்டது, வணிக நீதிமன்றங்கள் துவங்க உத்தரவிடப்பட்டது, திருவண்ணாமலை, திருவாரூரில் சார்பு நீதிமன்றங்கள் துவங்கியது, சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் புதிய கட்டிடம் கட்ட 20.24 கோடி ரூபாய் ஒதுக்கியது, 4.24 ஏக்கர் நிலம் நீதித்துறைக்கு ஒதுக்கியது குறித்தும் பட்டியலிட்டார்.

மேலும், காரைக்குடியில் புதிய சட்டக் கல்லுரி துவங்க இருப்பதாகவும், வாடகை கட்டிடத்தில் இயங்கும் நீதிமன்றங்களுக்கு கட்டிடம் கட்டிக் கொடுக்கப்படும் எனவும் உறுதி தெரிவித்தார்.

வழக்கறிஞர்களுக்கான சேமநல நிதியை ஏழு லட்சம் ரூபாயில் இருந்து 10 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படும் என அறிவித்த முதலமைச்சர் ஸ்டாலின், உயர் நீதிமன்ற நீதிபதிகள், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் சமூக நீதியை உறுதி செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கோரிக்கை விடுத்தார்.

தென்மாநில மக்கள் நலனுக்கான நீண்ட கால கோரிக்கையான உச்ச நீதிமன்ற கிளை அமைக்க வேண்டும் எனவும், வழக்காடு மொழியாக தமிழை அறிவிக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

தனது இந்த கோரிக்கைகளுக்கு உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியும், தமிழகத்தில் இருந்து உச்ச நீதிமன்றம் சென்ற நீதிபதிகள் உதவியாக நிற்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.

பின்னர், நிலத்தை வழங்கியது தொடர்பான உத்தரவை முதலமைச்சர், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் வழங்கினார்.

முன்னதாக, நிகழ்ச்சியில் பேசிய தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் சண்முக சுந்தரம், 467 வழக்கறிஞர்கள் குடும்பங்களுக்கு சேமநல நிதியாக 32.6 கோடி வழங்கப்படுகிறது குறிப்பிட்டார்.

தமிழக சட்ட அமைச்சர் ரகுபதி பேசுகையில், முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான அரசு நீதி பரிபாலனத்துக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுக்கும் என்றார்.

Leave A Reply

Your email address will not be published.