`தமிழ்நாட்டிலும் ஹிஜாப் தடை!’ – கர்நாடகாவைப் பின்பற்றக் கோரி உயர் நீதிமன்றத்தில் மனு!

கர்நாடகாவில் ஹிஜாப் அணிந்ததால் ஏற்பட்ட பிரச்னைகள் போல தமிழகத்தில் உருவாகாமல் தடுக்க, பள்ளிகள், கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் மத அடையாளங்களுடன் கூடிய உடைகளை அணிய தடை விதிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்து முன்னேற்ற கழக தலைவரும், வழக்கறிஞருமான திருப்பூரைச் சேர்ந்த கோபிநாத் தாக்கல் செய்த மனுவில், பள்ளி மாணவர்களிடம் வேறுபாட்டை களையும் நோக்கில் கடந்த 1960ம் ஆண்டில் மாணவர்களுக்கான சீருடைகள் அறிமுகப்படுத்தப்பட்டதாக கூறியுள்ளார்.

இது சம்பந்தமான விதிகளை பல பள்ளிகள் பின்பற்றுவதில்லை எனவும், ஹிஜாப் போன்ற மத அடையாளங்களுடன் கூடிய ஆடைகளை மாணவ – மாணவிகள் அணிந்து வருவதாகவும், இது சீருடை விதிகளுக்கு எதிரானது எனவும் தெரிவித்துள்ளார்.

மாணவர்கள் மத்தியில் சமத்துவத்தை ஊக்குவிக்கவும், மதத்தின் பெயரால் சமத்துவமின்மையை ஏற்படுத்துவதை தடுக்கவும், கர்நாடகாவில் ஏற்பட்ட ஹிஜாப் பிரச்னை போல தமிழகத்தில் ஏற்படாமல் தடுக்கவும் இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளாதாக கூறியுள்ளார்.

நாகரிக சமுதாயமான இந்திய சமுதாயத்தில், மதத்தின் பெயரால் பொது அமைதிக்கு ஊறு விளைவிப்பதை அனுமதிக்க முடியாது என்பதால், தமிழகத்தில் பள்ளிகள் மற்றும் கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் மத அடையாளங்களுடன் கூடிய உடைகள் அணிய தடை விதிக்கும்படி, பள்ளிக்கல்வித் துறைக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரியுள்ளார். இந்த வழக்கு வரும் வரை திங்கட்கிழமை விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.