ராஜபக்சக்களுடன் இணைந்து இடைக்கால அரசை அமைக்கமாட்டேன்!சஜித் சத்தியம்.

“நாடு வீழ்ந்துள்ள நிலையிலிருந்து நாட்டைக் கட்டியெழுப்பும் பொறுப்பை ஏற்கத் தயாராக இருக்கின்றேன். நாட்டில் மேலேலுந்துள்ள பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் ஒரே சக்தி ஐக்கிய மக்கள் சக்தியாகும். எனக்கு உலகை ஆளும் பேரரசர் ஆட்சிப் பதவியை வழங்குவதாக உறுதியளித்தாலும் கள்வர் கும்பலோ அல்லது ராஜபக்சக்களுடன் இணைந்தோ இடைக்கால அரசை அமைக்கமாட்டேன்.”

இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

கொடுங்கோல் அரசின் அடக்குமுறை சார்ந்த மக்கள் விரோத செயற்பாடுகளுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியால் ஏற்பாடு செய்யப்பட்ட மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டம் இன்று கொலன்ன தேர்தல் தொகுதியின் எம்பிலிப்பிட்டிய நகரில் நடைபெற்றது. ஐக்கிய மக்கள் சக்தியின் கொலன்ன தேர்தல் தொகுதியின் அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஹேஷா விதானகே ஏற்பாடு செய்திருந்த இந்தப் போராட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவும் கலந்துகொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“சுமார் 150 ஆசனங்களுடன் இரண்டரை வருடங்களாக மரணப்படுக்கையில் இருந்த அரசு, இப்போது கூட்டணி ஆட்சிக்கு வாருங்கள் என்கிறார்கள். வந்து பிரதமர் பதவியைப் பெற்றுக் கொள்ளுங்கள் என்கிறார்கள். வந்து அமைச்சுப் பதவிகளைப் பெற்றுக்கொள்ளுங்கள் என்கிறார்கள். ஆனால், யாருடைய மனதையும் கெடுக்கும் நோக்கில் திருட்டு அரசை அமைக்க நாங்கள் தயாராக இல்லை. மக்கள் மூலம் ஆட்சி அமைக்கவே நாங்கள் தயாராகவுள்ளோம்.

ராஜபக்சர்களுடன் ஒரு டீலை மேற்கொள்வதை விட வீட்டுக்குச் செல்வது எனக்குச் சுகம். இரண்டரை வருடங்களாக நாட்டை குட்டிச்சுவராக்கி, நாட்டையே அழித்துவிட்டு இப்போது பொய் இறக்கைகளை அணிவிக்க வருகிறார்கள். அந்த இறக்கைகளை அணிய நாங்கள் தயாரில்லை.

ஐக்கிய மக்கள் சக்தி சமூக ஜனநாயக கொள்கைசார் வேலைத்திட்டத்தையே நடைமுறைப்படுத்துகின்றது. இது தீவிர தாராளவாதத்தையயோ அல்லது உச்ச முதலாளித்துவத்தையோ அல்ல” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.