நைஜீரிய நாட்டில் எண்ணெய் ஆலையில் குண்டுவெடிப்பு – 2 பேர் பலி.

ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் தென் மாகாணமான இமோவில் உள்ள எண்ணெய் ஆலையில் நேற்று முன்தினம் சக்தி வாய்ந்த குண்டுகள் வெடித்தன. இதில் அந்த ஆலை தீப்பற்றி எரிந்தது. இந்த குண்டுவெடிப்பில் 2 பேர் பலியானதாக முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுபற்றி போலீஸ் செய்தி தொடர்பாளர் மைக் அபாட்டம் கூறும்போது, “இந்த குண்டு வெடிப்பு தொடர்பாக விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது” என தெரிவித்தார்.

தற்கொலை படை பயங்கரவாதிகள் 2 பேர் தங்கள் உடலில் வெடிகுண்டுகளை கட்டிக்கொண்டு வந்து ஆலையை தகர்க்க நுழைந்தபோது அவர்கள் உடலில் கட்டிக்கொண்டு வந்திருந்த குண்டுகள் வெடித்து, அவர்கள் உடல் சிதறி பலியானதாக அந்த ஆலை பணியாளர்கள் தெரிவித்தனர் என ஊடக தகவல்கள் கூறுகின்றன.

அந்த ஆலை அமைந்துள்ள பகுதியில் விரும்பத்தகாத நிகழ்வுகள் நடக்காதபடிக்கு தடுக்கிற விதத்தில் போலீஸ் படை குவிக்கப்பட்டுள்ளதாக போலீஸ் செய்தி தொடர்பாளர் மைக் அபாட்டம் தெரிவித்துள்ளார். இந்த எண்ணெய் ஆலையை தகர்க்க முயற்சித்ததன் பின்னணி என்ன என்பது உடனடியாக தெரியவில்லை.

இந்த நாட்டில் போகோஹரம் பயங்கரவாதிகள் ஆதிக்கம் செலுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.