Go என்றால் No சொல்லும் ராஜபக்ச, விக்ரமசிங்க அற்புத சகோதர இரத்த உறவு

2005 ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்த போது, ​​ரணில் தென்னிலங்கைக்குச் சென்று ஒரு அற்புதமான கதையைச் சொன்னார்.

‘மஹிந்த எனது உறவினர்’

ரணில் சொன்ன இந்தக் கதையில்தான் அனைவரின் பார்வையும் சென்றது.

‘இந்தக் கதை உண்மையா?’ என  ஊடகவியலாளர் ஒருவர் ரணிலிடம் கேள்வி எழுப்பினார்.

‘சாம் விஜேசிங்கவிடம் போய் கேள்’  என ரணில் கிண்டலான புன்னகையுடன் பதிலளித்தார்.

பத்திரிக்கையாளர் சாமின் வீட்டிற்கு சென்றார்.

ரணிலின் கதை சரிதான் என்றார் சாம்.

சாமும் கெட்டமான்னே. ராஜபக்சக்களும் கெட்டமான்னே. ரணிலுக்கும் மகிந்தவுக்கும் இடையிலான உறவை சாம் விஜேசிங்க அந்த ஊடகவியலாளரிடம் இவ்வாறுதான் புரிய வைத்தார்.

‘மஹிந்தவின் தந்தையின் சகோதரர் டி.எம் ராஜபக்ச , வீரதுங்க குடும்பத்தில் திருமணம் செய்து கொண்டார். வீரதுங்க குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் ஜே.ஆரின் சகோதரியை மணந்தார். ஜே.ஆரின் மருமகன் ரணில். ராஜபக்ஷ, ஜெயவர்த்தன, விக்கிரமசிங்க, விஜேவர்தன ஆகியோர் குடும்ப உறவுகளானது இப்படித்தான் .

இது சாம் சொன்ன கதை. சாம் ரணிலின் தந்தையின் சகோதரி முக்தாவை மணந்திருந்தார்.

‘இதனால்தான் ராஜபக்சேக்கள் ரணிலையும் , ரணில் ராஜபக்சக்களையும் இவ்வளவு நம்ப காரணமா?’

எனக்கு அது தெரியாது. ஆனால் மகிந்த பிரதமர் பதவியை விட்டு வெளியேறியதும் பொதுஜன பெரமுனவிலிருந்து ஒரு பிரதமரை நியமிக்க ராஜபக்சக்கள் அஞ்சினார்கள். சஜித்துக்கும் கொடுக்க பயந்தார்கள். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் கொடுக்க பயந்தனர். அவர்களிமிருந்து ஆட்சியை திரும்பப் பெற முடியாது என்ற அச்சமே காரணம். ரணிலுக்கு பிரதமர் பதவி கொடுக்கப்பட்டது உறவினர் மற்றும் நம்பிக்கையின் அடிப்படையிலேயே. காலிமுகத்திடல் போராட்டம் முடிந்ததும் ரணிலிடமிருந்து மீண்டும் பிரதமர் பதவியை பெறலாம் என்று தெரியும். ராஜபக்ச குடும்பம் மீண்டு எழும்வரை பிரதமர் பதவியையும் அரசையும் தக்க வைத்துக் கொள்வார் ரணில் என நினைத்தார்கள்.

ரணிலுக்கும் ராஜபக்சக்களுக்கும் இடையில் இரத்த உறவு எப்படியாக இருந்த போதிலும் , அரசியல் உறவுமுறை ஒரே மாதிரியானது. எப்பவுமே மக்கள் போகச் சொன்னாலும் , காதில் கேட்காதது போல தொங்கிக் கொண்டு பதவியில் இருக்கும் அரசியல் நரம்பு பிறப்பிலேயே இரு தரப்பினருக்கும் ஒரே மாதிரியானது.

1994 ஆம் ஆண்டு சந்திரிக்கா ஜனாதிபதியான பின்னர் 1997 ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளூராட்சி சபைத் தேர்தலிலும் , 1999 ஆம் ஆண்டு நடைபெற்ற மாகாண சபைத் தேர்தலிலும் ஐக்கிய தேசியக் கட்சி தோல்வியடைந்தது.

அந்த தோல்வியின் பின்னர் ரணிலை , ஐக்கிய தேசியக் கட்சியின் மூத்த தலைவர்களான விஜயபால மென்டிஸ், நந்தா மேத்யூ மற்றும் சுசில் முனசிங்க ஆகியோர் ரணிலை பதவியிலிருந்து விலகுவதற்கு கிளர்ச்சி செய்தனர். அதுவே ரணிலுக்கு எதிராக ஐக்கிய தேசியக் கட்சியின் முதலாவது கிளர்ச்சி. ஆனால், தான் பதவி விலகப் போவதில்லை என்று கூறிய ரணில், தேசியத் தேர்தலில் தோற்கடிக்கப்படவில்லை என்று கூறினார்.

1999 ஜனாதிபதித் தேர்தலில் ரணில் ஜனாதிபதி வேட்பாளராக இருந்தார். 1999 ஜனாதிபதித் தேர்தல் மற்றும் 2000 பொதுத் தேர்தல் இரண்டிலும் தோல்வியடைந்தார். அப்போது கட்சியின் பொதுச் செயலாளர் காமினி அத்துகோரள மற்றும் கட்சியின் தலைவர் கரு ஜசூரிய ஆகியோர் அவருக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்டனர். அந்தக் கிளர்ச்சிக்கு ரணில் பயந்தார். கட்சி செயலாளராக இருந்த காமினியும், தலைவராக இருந்த கருவும் அவருக்கு எதிராக கலகம் செய்ததே காரணம். கிளர்ச்சியில் வெற்றி பெற கருவை துணைத் தலைவராக்கினார். காமினியை பிரதி தலைவரானார்.

2005 ஜனாதிபதித் தேர்தலில் ரணில் தோல்வியடைந்ததை அடுத்து ரணிலுக்கு எதிராக மீண்டும் ஒரு கிளர்ச்சி வருகிறது.

அந்த கிளர்ச்சியில் 2001ஆம் ஆண்டு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து ஐ.தே.கவுக்கு வந்த ஜி.எல்.பீரிஸ் , சிறையில் அடைக்கப்பட்டிருந்த எஸ்.பி.திசாநாயக்க , மிலிந்த மொரகொடவும் இருந்தனர். அவர்களுடன் ராஜித சேனாரத்னவும் ஒருவராக இருந்தார்.

ரணிலால் அந்த கிளர்ச்சியை அடக்குவது கடினமாக இருந்தது. அப்போதைய ஜனாதிபதி மஹிந்த, கரு ஜயசூரிய மற்றும் கிளர்ச்சிக் குழுவை தனது அரசாங்கத்துடன் இணைத்து அன்றைய கிளர்ச்சியை அடக்கினார்.

அவர்கள் திரும்பி ஐதேகவுக்கு வந்த போது , பிரதி தலைவர் பதவியை கருவுக்கும் ,  தேசிய அமைப்பாளர் பதவியை ,எஸ்.பி.க்கும் வழங்கினார். துணைத் தலைவர் பதவியை ரணில் ரத்து செய்துவிட்டு, கட்சியில் ஒரு தலைவர்தான் இருப்பார் என சட்டம் கொண்டு வந்தார்.

2008 மற்றும் 2009 மாகாண சபைத் தேர்தல்களில் தோல்வியடைந்த போது, ரணிலுக்கு எதிராக மீண்டும் கட்சிக்குள் கிளர்ச்சி வெடித்தது. ரணிலை கலவரத்தில் இருந்து காப்பாற்றிய ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட குழுவினரே அப்போது கலவரத்தை நடத்தினர். கிளர்ச்சியை ஒடுக்க 2010 ஜனாதிபதி தேர்தலில் கட்சிக்கு புதிய முகத்தை கொண்டு வந்ததாக கூறி பொன்சேகாவை ரணில் அழைத்து வந்தார்.

2010 ஜனாதிபதித் தேர்தலின் பின்னர், 2010 ஜனாதிபதித் தேர்தலில் ரணில் தன்னைத் தோற்கடிக்க சதி செய்ததாகக் கூறி , பொன்சேகா ரணிலுக்கு எதிராகக் கிளர்ச்சி செய்தார். ரணிலிலிருந்து பொன்சேகா பிரிந்து வெளியேறினார்.

2010 பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி படுதோல்வியடைந்த பின்னர், ரணிலுக்கு எதிராக சஜித்தும் , கருவும் இணைந்து கிளர்ச்சி செய்தார். சஜித்தையும் கருவையும் இணைத் துணைத் தலைவர்களாக நியமித்து ரணில் கிளர்ச்சியை வென்றார். ஆனால் கிளர்ச்சி அத்தோடு முடிவடையவில்லை.

2011 உள்ளூராட்சி சபைத் தேர்தலிலும், 2012 மற்றும் 2013 மாகாண சபைத் தேர்தல்களிலும் ஐக்கிய தேசியக் கட்சி படுதோல்வியடைந்ததால் ரணிலுக்கு கட்சிக்குள் மீண்டும் எதிர்ப்பு வலுத்தது.

ஒருமுறை ரணிலை விரட்டியடிக்க மாத்தறையில் இருந்து ஊர்வலமாக ஐதேகவினர் வந்தனர். விகாரமஹா தேவி பூங்காவில் இருந்து சிறிகொத்தவிற்கு ஊர்வலம் வந்த போது மகிந்தவின் அரசாங்கம் , அப்பகுதிக்குள் அவர்களை நுழைய விடாது வீதிக்கு காபர்ட் போட்டு , வீதியை மறித்து வந்தவர்களை தடுத்து நிறுத்தியது.

அதன் பின்னர் சஜித் மற்றும் கருவின் ஆதரவாளர்கள் சிறிகொத்த மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். ரணிலை தலைமைப் பதவியில் இருந்து விலகுமாறு அஸ்கிரிய மற்றும் மல்வத்தை பீடாதிபதிகள் அறிக்கை வெளியிட்ட போது, ​​சிரச மகாராஜாவுடன் மகாநாயக்கர்கள் ஒப்பந்தங்களில் கைச்சாத்திடுவதாக ரணில் தெரிவித்தார். ஆனால் ரணிலுக்கு தப்பிப்பது கடினமாக இருந்தது. தலைமைத்துவ சபையை நியமித்து கருவுக்கு தலைவர் பதவியை வழங்கினார்.

2015ல் ரணில் பிரதமராகி , 2018 இடைத்தேர்தலில் படுதோல்வி அடைந்த பிறகும் ரணிலுக்கு எதிராக கிளர்ச்சி வெடித்தது. அதையும் அடக்க பிரதமர் அதிகாரத்தை ரணில் பயன்படுத்தினார்.

2019 ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியடைந்த பின்னர், கட்சித் தலைமைப் பதவியிலிருந்து ரணிலை விலகுமாறு கட்சியே முடிவெடுத்தது. ரணில் விலகவில்லை. இரண்டு மூன்று பேரைத் தவிர , ஏனைய அனைவரும் ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து விலகி சஜித்துடன் இணைந்து ஐக்கிய மக்கள் சக்தி என்ற கட்சியை உருவாக்கினர்.

2020 பொதுத் தேர்தலில் ரணில் ஒரு ஆசனத்தை இழந்தார். ஐதேக கட்சி தேசியப்பட்டியல் ஆசனம் ஒன்றை பெற்றது. ஐக்கிய தேசியக் கட்சி ஐந்தாவது இடத்திற்கு வீழ்ந்தது. அதன் பின்னர் ரணிலுடன் இருந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி, நவீன், அர்ஜுன உள்ளிட்டோர் கட்சித் தலைமைப் பதவியில் இருந்து ரணிலை ராஜினாமா செய்ய வலியுறுத்தி ரகளையில் ஈடுபட்டனர். ஆனாலும் ரணில் தலைமையை விடவில்லை. பதவி விலகக் கோரி கட்சி உறுப்பினர்கள் கிளர்ச்சி செய்த முதல் தலைவர் ரணில்தான்.

‘இரண்டாவது யார்?’

இரண்டாவது கோட்டாபய ராஜபக்ச. அப்போது ரணிலுக்கு எதிராக ஐக்கிய தேசியக் கட்சியினர்தான் கிளர்ச்சி செய்தனர். இன்று கோட்டாபயவுக்கு எதிராக மக்கள் கிளர்ச்சி செய்கிறார்கள். இந்தக் கிளர்ச்சியை அடக்குவதற்கு ரணிலைப் போலவே கோட்டாபயவும் தொடர்ந்து பதவியில் இருக்க முயற்சி செய்கிறார்.

முதலாவது அவர் ராஜபக்சக்களின் அமைச்சரவையை ஒழித்தார். அதன் பின்னர் மஹிந்த தலைமையில் புதிய அமைச்சரவையை நியமித்தார். கிளர்ச்சி தீவிரமடைந்ததால், மகிந்தவை பிரதமர் பதவியிலிருந்து அகற்றி கிளர்ச்சியாளர்களை மிரட்ட ராஜபக்ச குடும்பத்தினர் தாக்குதல் தொடுக்க முயன்றனர். அதுவும் வெற்றி பெறவில்லை. மஹிந்த ராஜினாமா செய்தார். ஆனால் ஆர்ப்பாட்டம் அப்படியே தொடர்ந்தது. இதனால் எம்.பிகள் மற்றும் அமைச்சர்களின் 50க்கும் மேற்பட்ட வீடுகள் தீ வைத்து எரிக்கப்பட்டன.

கோட்டாவும் ரணிலின் தந்திரோபாயங்களையே பயன்படுத்துகிறார்.

கடந்த புதன்கிழமை ரணிலை வந்து பார்க்கச் சொன்னவர் , ரணிலை பிரதமராக்கினால் ஆர்ப்பாட்டத்தை அடக்க முடியுமா என்று கேட்டு பார்த்தார்.

அன்றிரவே பொன்சேகாவை அழைத்து ஆர்ப்பாட்டத்தை அடக்க முடியுமா எனக் கேட்டார். அதற்காக பொன்சேகாவை பிரதமராக பொறுப்பேற்குமாறு அவர் கேட்டபோது, ​​பொன்சேகா அதனை அடியோடு நிராகரித்தார். பொன்சேகா , கோட்டாவோடு முரண்பட்டே சென்றார்.

இன்னொரு முறை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மூத்த உறுப்பினர் ஒருவருக்கு பிரதமர் பதவியை வழங்க முயற்சித்தார்.

ஐ.தே.க.வுக்கு தலைமை தாங்கும் ரணிலின் அதே பாணியில் கோட்டா கேம் ஆடுகிறார்.

பெரிய யானையாக இருந்த ஐ.தே.கவை இல்லாமல் போகும்வரை ரணில் ஆட்டம் போட்டார்.

கிழக்கின் முத்து என்று அழைக்கப்படும் இலங்கை , கிழக்கின் கண்ணீர் துளியாக மாறும் வரை ஜனாதிபதி பதவியை பிடித்துக் கொண்டு தான் இருப்பேன் என , இன்று கோட்டா செயல்பட்டுக் கொண்டு இருக்கின்றார்.

‘கோட்டா கோ ஹோம்’

இந்த வார்த்தைகளால் சொல்வது கோட்டாவை வீட்டிற்கு போ எனத்தான். தனக்குப் பதிலாக ராஜபக்சக்கள் உட்பட பொதுஜன பெரமுன அரசை வீட்டுக்கு அனுப்புவதாக கோட்டா கூறிக் கொண்டு செயல்படுகிறார். ரணில் கட்சியுடன் விளையாடினார். கட்சிகள் தோற்றுப் போனால் மேலும் பல கட்சிகளை உருவாகலாம். ஆனால் ஒரு நாட்டை இழந்தால் , மீள ஒரு நாட்டை கட்டியெழுப்ப முடியாது.

கோட்டாபயவைப் போல் ராஜபக்சக்களும் தெரிந்தே ரணிலைப் பிரதமராக்கினர், அதனால் இலங்கை முழுவதும் மக்கள் ஆர்ப்பாட்ட கிராமங்களைக் கட்டினாலும் அதிகாரத்தை விட்டுக்கொடுப்பதில்லை எனும் முடிவோடு இருக்கிறார்கள்.

அந்த வகையில், சாம் விஜேசிங்க சொன்னது போல, ராஜபக்சக்களுடைய இரத்த உறவை விட , இந்த பிடிவாத உறவு விக்கிரமசிங்க மற்றும் ராஜபக்சக்களுக்கு கூடுதலான உறவைச் சேர்த்துள்ளதாகத் தெரிகிறது.

உபுல் ஜோசப் பெர்னாண்டோ
தமிழில் :
ஜீவன்

Leave A Reply

Your email address will not be published.