ரஸ்யாவுக்கும் மேற்குலகுக்கும் உள்ள மோதல் உக்ரைன் மண்ணில் : சண் தவராஜா

உக்ரைன் மீது ரஸ்யா தொடுத்த போர் மூன்று மாதங்களை நெருங்கிக் கொண்டிருக்கின்றது. பேச்சு வார்த்தை மூலம் பிரச்சனையைத் தீர்க்க முடியாத நிலையிலேயே போர் ஆரம்பித்தது.

ஆனால், போர் ஆரம்பித்த ஒருசில நாட்களிலேயே மோதலுக்குப் பேச்சுக்கள் மூலம் தீர்வு காண்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டபோது ஓரளவு நம்பிக்கை பிறந்திருந்தது. எனினும், உக்ரைன் அரசாங்கத் தரப்பில் வலுவான சக்தியாக விளங்கும் புதிய நாசிக்கள் உள்ளிட்ட தீவிர வலதுசாரிகளும், இத்தகைய போர் ஒன்றைப் பல வருடங்களாக எதிர்பார்த்து, அதற்கான தயாரிப்பு வேலைகளில் ஈடுபட்டிருந்த அமெரிக்கா தலைமையிலான மேற்குலகமும் பேச்சுக்கள் மூலம் போர் முடிவுக்கு வருவதை அனுமதிக்க மாட்டா என்ற எதிர்வுகூறல்கள் வெளியான நிலையில், அதனை மெய்ப்பிக்கும் வகையிலேயே காரியங்கள் யாவும் நடைபெற்று வருவதைப் பார்க்க முடிகின்றது.

போர் ஆரம்பித்த நாட்களில் உக்ரைன் தரப்பில் இருந்த அச்சமும், அவநம்பிக்கையும் படிப்படியாக அகன்று வருவதை அவதானிக்க முடிகின்றது. தற்காப்புத் தாக்குதலில் ஈடுபட்டிருந்த உக்ரைன் படைகள் தற்போது முன்னேறித் தாக்கும் அளவுக்குத் துணிச்சல் பெற்றுள்ளன.

தினசரி இரவு உரையில் தனது படையினரின் சாதனைகளைப் பட்டியலிடும் உக்ரைன் அரசுத் தலைவர் ஷெலன்ஸ்கி, முடிந்த அளவு கடுமையாக ரஸ்யாவை விமர்சித்து வருவதைப் பார்க்க முடிகின்றது. ரஸ்ய ஆதரவாளர்களைக் கூட அவர் விட்டுவைக்கவில்லை. பக்கச் சார்பு இன்றிக் கருத்துக் கூறுபவர்களைக் கூட அவர் ரஸ்யா சார்பானவர்களாகவே கருதிச் சாடி வருகின்றார்.

நேற்றுவரை ஒரு நகைச்சுவை நடிகராகவும், உக்ரைன் என்ற ஒரு பொருளாதாரத்தில் பின்தங்கிய, ஊழல் மலிந்த, மூன்றாம் உலக நாடொன்றின் தலைவராகவும் கணிக்கப்பட்டிருந்த ஷெலன்ஸ்கி திடீரென மிகப்பெரிய கதாநாயக அந்தஸ்துக்கு உயர்த்தப்பட்டு இருப்பதை அன்றாடம் அவரைச் சந்திக்க கீவ் நகருக்குப் படையெடுக்கும் உலக நாடுகளின் தலைவர்களின் வருகை காட்டுகிறது.

ரஸ்யாவைப் பலவீனப்படுத்தும் தங்கள் நீண்டநாள் வேலைத் திட்டத்தை நிறைவேற்ற தானாகவே முன்வந்த ஷெலன்ஸ்கியை அவர்கள் பாராட்டு மழையில் மாத்திரமன்றி பரிசு மழையிலும் திக்குமுக்காட வைத்து வருவதைக் காண முடிகின்றது.

இன்றைய நிலையில் உக்ரைனுக்கு அமெரிக்காவும், ஐரோப்பிய ஒன்றிய நாடுகளும் வழங்கும் ஆயுத, தளபாட உதவிகளைப் பார்க்கும் போது மலைப்பாக உள்ளது. அது மாத்திரமன்றி தங்கள் உளவுப் பிரிவுகளைப் பயன்படுத்தியும், தங்களிடம் உள்ள நவீன கண்காணிப்புச் சாதனங்களை உபயோகித்தும் துல்லியமான படைத் துறைத் தகவல்களையும் மேற்குலகம் உக்ரைனுக்கு வழங்கி வருகின்றது. உக்ரைன் மண்ணில் போர் நடைபெற்றாலும் அது மறைமுகமாக ரஸ்யாவுக்கும் மேற்குலகுக்கும் இடையிலேயே நடைபெற்று வருவதை மறைத்து விடுவதற்கில்லை.

யுத்தத்தின் விளைவுகள் எப்போதுமே அழிவுகரமானவை என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. யுத்தத்தின் நோக்கம் எவ்வளவு உன்னதமானதாக இருந்தாலும், யுத்தம் வலுக்கட்டாயமாகத் திணிக்கப்பட்டதாகக் கூட இருந்தாலும் பரஸ்பரம் அழிவுகள் தவிர்க்கப்பட முடியாதவையே. எனவே, அமைதியை சமாதானத்தை நேசிப்பவர்கள் யாராயினும் எப்பாடு பட்டாவது போரை நிறுத்த முயற்சி செய்தேயாக வேண்டும். ஆனால், உக்ரைனின் நட்பு நாடுகள் என்று தம்மைச் சொல்லிக் கொள்பவை வகைதொகையின்றி ஆயுதங்களையும் தளபாடங்களையும் வழங்கி யுத்தத்தை மென்மேலும் தீவிரமாக்கும் செயற்பாடுகளையே முன்னெடுத்து வருகின்றன. “வீட்டைக் கொளுத்தும் மன்னனுக்கு நெருப்பை வழங்கும் மந்திரிகளாக” மேற்குலகம் நடந்து கொள்வதைப் புரிந்தும் புரியாதவராக ஷெலன்ஸ்கி நடந்து கொள்வதில் வியப்பொன்றும் இல்லை.
துருக்கியின் கலாசாரத் தலைநகரான இஸ்தான்புல்லில் இறுதியாக நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது ரஸ்யாவின் நிபந்தனைகளுக்குக் கட்டுப்படுவதாக ஒரு எழுத்துமூல ஆவணத்தை உக்ரைன் கையளித்திருந்தமை தெரிந்ததே. அன்றிலிருந்தே உக்ரைனின் போக்கில் நேர் எதிர் மாற்றம் தோன்றத் தொடங்கியது. தனது ‘எசமான்களின்’ சொற்படி கேட்டு நடக்க வேண்டிய நிலையில் உள்ள ஷெலன்ஸ்கியால் வேறு எதுவும் செய்துவிட முடியாது என்பது தெரிந்ததே. அதன் பின்னான காலப் பகுதியில் “உக்ரைன் மண்ணை விட்டு ரஸ்யப் படைகள் வெளியேறினால் மாத்திரமே பேச்சுவார்த்தை சாத்தியம். ஒரு அங்குல நிலத்தைக் கூட எதிரிகளுக்கு விட்டுத் தர முடியாது” என்பன போன்ற வீர வசனங்களை ஷெலன்ஸ்கியிடம் இருந்து அடிக்கடி கேட்க முடிகின்றது.

பேச்சு வார்த்தைக்கு வர மறுப்பதும், நிபந்தனைகளை அளவுக்கு அதிகமாக விதிப்பதும் ஒரே அர்த்தமுடையவை. அதனையே உக்ரைன் தரப்பு கடைப்பிடித்து வருகின்றது. இந்நிலையில், ரஸ்யத் தரப்பில் இருந்து புதிய நிபந்தனை ஒன்று வெளியாகி உள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தில் இணையும் உக்ரைனின் விருப்பத்தைத் தாம் எதிர்ப்பதாகக் கூறியுள்ள ஐ.நா.வுக்கான ரஸ்யாவின் பிரதித் தூதுவர் டிமித்திரி பொல்யான்ஸ்கி, தற்போதைய நிலையில் நேட்டோவுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இடையில் வித்தியாசம் எதுவும் தெரியவில்லை. ஐரோப்பிய ஒன்றியம் நேரடியாகவே உக்ரைன் போரில் படைத் துறை உதவிகளை வழங்கி வருகின்றது எனத் தனியார் ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் தெரிவித்துள்ளார். ஐரோப்பிய ஒன்றியத்தில் உக்ரைன் இணைவதில் ஆடசேபணை இல்லை என்ற முன்னைய நிலைப்பாட்டை ரஸ்யா மாற்றிக்கொண்டு விட்டது எனக் கூறியுள்ள அவர், உக்ரைன் போர் தொடங்கிய நாள் முதலாக ஐரோப்பிய ஒன்றியம் அமெரிக்க தலைமையிலான நேட்டோவுடன் தன்னை ஐக்கியப்படுத்திக் கொண்டுள்ளது என்பதைச் சுட்டிக்காட்டி உள்ளார்.

அவரின் கூற்றை மெய்ப்பிப்பதற்கான ஆதாரங்கள் எவற்றையும் வழங்க வேண்டிய தேவை இருப்பதாகத் தெரியவில்லை. மேற்குலக ஊடகங்களில் அன்றாடம் வெளியாகும் செய்திகளைப் பார்ப்பவர்கள் இதனை இலகுவாகப் புரிந்து கொள்வர். ஆனால், இந்தப் போக்கின் தொடர்ச்சி எங்கே இட்டுச் செல்லப் போகின்றது என்பதே பெறுமதிமிக்க கேள்வி.

உக்ரைன் மண்ணில் நிகழும் போர் ஏற்கனவே உலகின் அனைத்து நாடுகளிலும் பொருளாதார நெருக்கடிகளை உருவாக்கத் தொடங்கியுள்ளது. பொருட்களின் விலை உயர்வு மட்டுமன்றி அன்றாடப் பாவனைப் பொருட்களுக்கான தட்டுப்பாடும் உருவாகத் தொடங்கிவிட்டது. இன்னும் எத்தனை காலத்துக்கு இந்த நெருக்கடியை மக்கள் சகித்துக் கொள்வார்கள் என்ற கேள்வி ஒருபுறம் இருக்க, தங்கள் அரசாங்கங்களின் தீர்க்கதரிசனமற்ற செயற்பாடுகளின் விளைவாக உருவாகியுள்ள நிலையைச் சகித்துக் கொண்டுதான் ஆக வேண்டுமா என்ற கேள்வியும் எழுகின்றது.

இன்றைய நிலையில் உக்ரைன் போர் கிட்டிய எதிர்காலத்தில் முடிவுக்கு வருவதற்கான வாய்ப்புகள் தென்படவில்லை. இந்தப் போர் காலவரையறையின்றி நீடிக்க வேண்டும் என்பதே மேற்குலகின் பெருவிருப்பாக உள்ளது. இந்த நாசகாரப் போரின் முடிவில் ரஸ்ய வல்லரசு அனைத்து வழிகளிலும் நலிவடைந்து, அந்த நாடு பலப்பல துண்டுகளாக உடைந்து சிதறுவதைப் பார்க்க மேற்குலகம் காத்துக் கிடக்கின்றது. அதற்காக உக்ரைனை மாத்திரமல்ல இன்னும் பல கிழக்கு ஐரோப்பிய நாடுகளையும் பலிகொடுக்கவும் மேற்குலகம் தயாராகவே உள்ளது. அது மட்டுமன்றி பலியாக விரும்பும் பலிக்கடாக்களும் தயாராகவே உள்ளன என்பதே கசப்பான யதார்த்தம்.

 

உக்ரைன் ஹெலிகொப்டர்கள் ரஷ்ய படைகளின் நிலைகள் மீது ரொக்கெட் மழை பொழிந்த காணொளி

Leave A Reply

Your email address will not be published.